இந்தியக் கப்பல் கழகம் வழங்கும் கடல்சார் பொறியாளர் படிப்பு!

8/21/2017 3:24:01 PM

இந்தியக் கப்பல் கழகம் வழங்கும் கடல்சார் பொறியாளர் படிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியக் கப்பல் கழகம் மத்திய அரசு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் (The Shipping Corporation of India Ltd) கப்பற்படைத் தொகுதிப் பணியாளர்கள் துறை (Fleet Personnel Department) இயந்திரவியல் பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்ற ‘பட்டதாரிக் கடல்சார் பொறியாளர்’ (Graduate Marine Engineers - GME) எனும் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில் சேர விரும்புவோர் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.

படிப்பு விவரம்: மும்பையிலுள்ள போவாய் (Powai, Mumbai) எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியக் கப்பல் கழக நிறுவனத்தின் கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் (Maritime Training Institute) நடத்தப்படும் ‘பட்டதாரிக் கடல்சார் பொறியாளர்’ எனும் இப்படிப்பு கப்பல் இயக்குநரகத்தினால் (Directorate General of Shipping) அங்கீகரிக்கப்பட்டதாகும்.

இந்தப் படிப்பு, எட்டு மாத கால அளவிலான கடலுக்கான முன்பயிற்சி (Pre-Sea Training) மற்றும் 10 மாத கால அளவிலான கப்பல்தளப் பயிற்சி (Shipyard Training) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இப்படிப்பில் ஒதுக்கீடு செய்யப்படாதது (Unreserved)  20, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)  11, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) - 6, பழங்குடியினர் (ST)  3 என்று மொத்தம் 40 இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி: இப்படிப்பில் சேர அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழுவால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இயந்திரவியல் பாடத்தில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுப் பட்டம் (B.E / B.Tech in Mechanical Engineering) பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ம் வகுப்பு, +2 தேர்வுகளில் ஆங்கிலப் பாடத்தில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

மேற்காணும் கல்வித்தகுதி தவிர, மேற்காணும் கல்விக்கு இணையான கல்வித்தகுதி, சிறப்புப் பிரிவுகளுடனான பட்டம், விருப்பப் பாடமாகக் கொண்டு வேறு பட்டம் பெற்றவர்கள் எவரும் விண்ணப்பிக்க இயலாது. அதேபோல் மேற்காணும் கல்வித்தகுதிக்கான படிப்பில் 31.8.2017ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளைப் பெற்றுவிடக்கூடிய கடைசி ஆண்டு, கடைசிப் பருவத்தில் பயின்றுவருபவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது படிப்பு தொடங்கும் நாளான 1.10.2017 அன்று 28-க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் ஆகியோர் 1.10.1989ம் தேதிக்குப் பின்பு பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து ஆண்டு கள் வரை வயதுத் தளர்வு உண்டு.

உடல் தகுதி: விண்ணப்பதாரர் கடற்பணிகளுக்கேற்ற நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். மேலும் கடலோடிகளுக்கான (seafarers) மருத்துவத் தரமுடையவராகவும் (MS Medical rules 2000 / MLC 2006) இருக்க வேண்டும். உடற்தகுதி இந்தியக் கப்பல் கழக நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால் பரிசீலிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்பே இப்படிப்பிற்கான சேர்க்கையினைப் பெறமுடியும்.   

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியக் கப்பல் கழக நிறுவனத்தின் http://www.shipindia.com/careers/fleet-personnel.aspx என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான வழிகாட்டல்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொண்டு, விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாகப் பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்புப் பிரிவினர் ரூ.1000 எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500 என்று கணக்கிட்டு, மும்பை, ஸ்டேட் வங்கியிலுள்ள இந்நிறுவனத்தின் கணக்கிற்குத் தேசிய மின் பணப்பரிமாற்ற (NEFT) முறையில் செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.8.2017.

இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை இரண்டு பிரதிகளாக எடுத்து, ஒன்றைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, மற்றொரு பிரதியினை விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீதுடன் சேர்த்து, அஞ்சல் உறையின் மேல் ‘Application for Graduate Marine Engineer’ எனக் குறிப்பிட்டு ‘Vice President I/C, Flee Personnel Dept. Third Floor. The Shipping Corporation Of India Ltd, Shipping House, 245, Madame Cama Road, Nariman point, Mumbai-400 021, Maharashtra, India’ எனும் முகவரிக்கு 25.8.2017 மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை: இப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மும்பை, புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் 9.9.2017 அன்று காலை 11.00 மணிக்கு இணைய வழியிலான தேர்வு (Online Examination) ஒன்று நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெற்றவர்களிலிருந்து 1:3 எனும் விகிதத்தில், மும்பையில் நடத்தப்படும் நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். இந்த நேர்காணலுக்குப் பின்பு, இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

பயிற்சிக் கட்டணம்: இப்படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.4,50,000 செலுத்த வேண்டியிருக்கும். இப்பயிற்சிக் கட்டணம் செலுத்திய பின்பு, எவ்விதக் காரணங்களுக்காகவும் பயிற்சிக் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பயிற்சிக் காலத்தில் கப்பல்தளப் பயிற்சி யின்போது மட்டும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ 15,000 தொகுப்பு உதவித்தொகையாக (Consolidated Stipend) வழங்கப்படும்.

இப்படிப்பு குறித்த விரிவான தகவல்களையும், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளையும் அறிந்துகொள்ள மேற்காணும் இணையத்தளத்திற்குச் செல்லலாம் அல்லது இந்நிறுவனம் இப்படிப்புக்காக நியமித்திருக்கும் தொடர்பாளர்களான கணேஷ் பிரசாத் - 022- 22772076, தத்தாசங்கர் - 022- 22772077 என்பவர்களது தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி