இந்திய வெளிநாட்டுத் தொழில் நிறுவனத்தில் MBA மாணவர் சேர்க்கை!

9/6/2017 1:00:23 PM

இந்திய வெளிநாட்டுத் தொழில் நிறுவனத்தில் MBA மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய அரசின் தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய வெளிநாட்டுத் தொழில் நிறுவனம் (Indian Institute of Foreign Trade) புதுடெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் எம்.பி.ஏ (பன்னாட்டு வணிகம்) படிப்பில் 2018-2020ஆம் ஆண்டுச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வித்தகுதி: இந்தப் பன்னாட்டு வணிகம் குறித்த மேலாண்மை முதுநிலைப் பட்டப்படிப்பில் (MBA - International Business) சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.  இளநிலைப் பட்டப்படிப்பில் கடைசி ஆண்டில் படித்து வருபவர்களும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், இவர்கள் இப்படிப்புக்கான சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும் நிலையில் 8.10.2018 அன்று தங்களுடைய இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத்தயாராக இருக்க வேண்டும். இப்படிப்புச் சேர்க்கைக்கு வயது வரம்பு எதுவுமில்லை.

விண்ணப்பிக்கும் முறை: இந்த மேலாண்மைப் படிப்பிற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iiftadmissions.net.in/instruction.aspx எனும் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1550, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.775 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் விண்ணப்பக் கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.4500-க்கு இணையாக அமெரிக்க டாலராக US$80 செலுத்த வேண்டியிருக்கும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் Credit Card/Debit Card மூலம் செலுத்தலாம். வங்கி வரைவோலை வழியாகச் செலுத்த விரும்புபவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் ‘Indian Institute of Foreign Trade’ எனும் பெயரில், டெல்லியில் மாற்றத்தக்க வகையில் உரிய விண்ணப்பக் கட்டணத்துக்கான வங்கி வரைவோலையைப் பெற்று அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.9.2017. ரூ.1000 அபராதக் கட்டணத்துடன் தேர்வு மையம் மாற்றிக்கொள்ளக் கடைசி நாள்: 3.11.2017. வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களின் பிள்ைளகள் போன்றவர்கள் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.2.2018. மாணவர் சேர்க்கை முறை: இப்படிப்பிற்கு எழுத்துத் தேர்வு, குழுக் கலந்துரையாடல், நேர்காணல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்றவற்றின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் போன்றவர்களுக்குக் குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நுழைவுத்தேர்வு: விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் சென்னை, கோயமுத்தூர் உள்பட இந்தியாவில் 20 மையங்களில் இதற்கான எழுத்துத் தேர்வு 3.12.2017 அன்று நடத்தப்படும். நுழைவுத்தேர்வுக்கான அனுமதி அட்டையினை 15.11.2017 முதல் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் குழுக் கலந்துரையாடல், நேர்காணல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்றவை நடத்தப்பட்டு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம்: இப்படிப்பில் 2017-2019 ஆம் ஆண்டுக்கான பிரிவில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்குப் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்  ரூ.15,70,000, எஸ்.சி, எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.7,85,000, வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு அமெரிக்க டாலர் US$ 60,000 என்று பயிற்சிக் கட்டணம் (Tuition Fee) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சிக் கட்டணம் தவிர்த்து, ரூ.55,000 இதர கட்டணங்கள் எனும் பிரிவில் செலுத்தியுள்ளனர். இவை, தவிர, தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டியிருக்கும். 2018-2020 ஆம் ஆண்டு களுக்கான படிப்பில் சேர்க்கை பெறுபவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச்/ஏப்ரல் மாதத்தில் முழுக்கட்டண விவரங்களும் தெரிவிக்கப்படும்.

இப்படிப்பு குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்கு, மேற்காணும் இணைய  தளத்தைப் பார்க்கலாம் அல்லது admissions@iift.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ,   011-39147213 எனும் நேரடித் தொலைபேசி எண்ணிலோ அல்லது 011-39147200 - 05 (Ext. 621) என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு. சுப்பிரமணி