மரச்சட்ட உற்பத்தித் தொழில்நுட்பம் முதுநிலைப் பட்டயப்படிப்பு!

9/6/2017 1:12:48 PM

மரச்சட்ட உற்பத்தித் தொழில்நுட்பம் முதுநிலைப் பட்டயப்படிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest & Climate Change) கீழ் பெங்களூரில் தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டு செயல்பட்டுவருகிறது இந்திய ஒட்டுப்பலகைத் தொழிற்சாலைகள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (Indian Plywood Industries Research & Training Institute - IPIRTI). இந்நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் ஓர் ஆண்டு கால அளவிலான மரம் மற்றும் மரச்சட்ட உற்பத்தித் தொழில்நுட்பம் குறித்த முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு (Post Graduate Diploma Course in Wood and Panel Products Technology) விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

ஓராண்டு கால அளவிலான இந்தப் பட்டயப்படிப்பில் மரம் மற்றும் பல்வேறு சட்டத் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள்/உற்பத்தி, ஒட்டுப்பலகை, துகள்/இழைப்பலகை, அடைப்புப் பலகை, பட்டைக் கதவு போன்றவை தயாரிப்புக்கான தொழில்நுட்பம், மூங்கில்பாய்ச் சட்டம் உற்பத்தி மற்றும் ஒட்டுப்பசைத் தொழில்நுட்பம் போன்றவை முதன்மைப் பாடங்களாக இருக்கின்றன. இப்படிப்பில் மொத்தம் 30 இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி: இப்பட்டயப்படிப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள் வேதியியல்/ இயற்பியல்/ கணிதம்/ வேளாண்மை/ வனவியல் ஆகிய ஏதாவது ஒரு  பாடத்தில்  இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) அல்லது பொறியியல் பட்டப்படிப்பு (B.E /B.Tech) ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களின் வயது 1.11.2017 அன்று 28 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு இந்திய அரசின் விதிமுறைகளின்படி வயதுத் தளர்வு உண்டு. தொழில்/ஆய்வு நிறுவனங்களிலிருந்து பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பு வோர் இந்நிறுவனத்தின் http://ipirti.gov.in/pgdiploma.html எனும் இணையப்ப க்கத்திலிருந்து தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்பம் ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, விண்ணப்பக் கட்டணம் ரூ.250-க்கு ‘Director, IPIRTI, Bangalore’ எனும் பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையினையும் சேர்த்து ‘Indian Plywood Industries Research and Training Institute, P.B. No.2273, (Behind to Peenya Metro Station), HMT Link Road, Off Tumkur Road, P.O. Yeshwanthpur, Bangalore-560 022’ எனும் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 16.9.2017.

மாணவர் சேர்க்கை: விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியான இளநிலை அறிவியல் அல்லது இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பு மதிப்பெண்களில் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். இந்திய அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு உரிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இவை தவிர, தொழில்/ ஆய்வு நிறுவனங்களிலிருந்து பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கட்டணம்: இப்படிப்புக்குச் சேர்க்கை பெற்றவர்கள் திருப்பிப் பெற இயலாத படிப்புக் கட்டணம் (Non  Refundable Course Fee) ரூ.41,800 திருப்பிப் பெறக்கூடிய காப்புக் கட்டணம் (Caution Money) ரூ.4840, திருப்பிப் பெற இயலாத கல்விச் சுற்றுலாக் (Study Tour) கட்டணம் ரூ.3300, விளையாட்டு மற்றும் கலாசாரச் செயல்பாட்டுக் (Sports & Cultural Activities) கட்டணம் ரூ.550 ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். இப்படிப்புக்குச் சேர்க்கை பெற்றவர்களில் மாணவர்களுக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி இருக்கிறது. மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை. விடுதியில் தங்குவதற்காக மாணவர்கள் திருப்பிப் பெற இயலாத விடுதிக் கட்டணம் ரூ.4400, திருப்பிப் பெறக்கூடிய உணவுக் கட்டண முன்பணம் ரூ.4620 ஆகியவற்றைச்செலுத்த வேண்டும்.

உணவுக் கட்டணமாக மாதம் ரூ.5000 வரை பகிர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இப்படிப்புக்கான பயிற்சி மற்றும் தேர்வு முறைகள், பணிகளுக்கான வளாக நேர்காணல்கள் போன்ற கூடுதல் தகவல்களைத் தகவல் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இவை தவிர, பிற தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்நிறுவனத்தின் http://ipirti.gov.in  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது இந்நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 080-30534000, 30534001, 30534049, 28394231-32-33 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ அல்லது contactus@ipirti.gov.in அல்லது upadhyay@ipirti.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்புகொண்டோ பெறலாம்.    

- முத்துக்கமலம்