செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர் மறுசீரமைப்பு டிப்ளமா படிக்க விருப்பமா?

9/25/2017 11:13:53 AM

செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர் மறுசீரமைப்பு டிப்ளமா படிக்க விருப்பமா?

இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் புதுடெல்லியிலுள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்துடன் (Guru Gobind Singh Indraprastha University, New Delhi) இணைந்து ஓராண்டு கால பேரிடர் ஆயத்தமாயிருத்தல் மற்றும் மறுசீரமைப்பு (PG Diploma in Disaster Preparedness and Rehabilitation) எனும் பகுதி நேர முதுநிலைப் பட்டயப்படிப்பினை நடத்தி வருகிறது. இப்படிப்புக்கான 12 வது குழுவுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

முதுநிலைப் பட்டயப்படிப்பு
தேசிய, மாநில, நிறுவனங்கள் அளவில் பேரிடர் காலத்தில் ஆயத்தமாயிருத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகளுக்கான கட்டுமானங்களை உருவாக்குதல், அரசு, தன்னார்வ அமைப்புகள், பொது நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு முகமைகளில் தொடர்புப் பணிகள் மேற்கொள்ளுதல், பேரிடர் காலங்களில் பணியாற்றுபவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் காலத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைத்தல் பணிகளை உள்ளடக்கமாகக் கொண்ட பாடம் மற்றும் பயிற்சிகளுடன் இந்தப் பாடத்திட்டத்தில் 40 காலியிடங்கள் உள்ளன.

சேர்க்கைத்தகுதி
அரசு, தன்னார்வ அமைப்புப் பணியிலிருப்பவர்கள், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலர்கள், பாதுகாப்புத்துறைப் பணியிலிருப்பவர்கள், கலை, அறிவியல், வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் இயற்பியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்புத் தொழில்நுட்பம், மக்கள் தொடர்பியல், பொறியியல், தகவல் வலையமைப்புகள், மருத்துவம், செவிலியர் மற்றும் பேரிடர் தொடர்புடைய ஏதாவதொரு பட்டப்படிப்பில் பட்டம் தேவை. இப்படிப்புக்கு வயது வரம்பில்லை.

சேர்க்கை முறை
இப்பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் சிறப்புத் தகுதி (Merit), அனுபவம் (Experience) மற்றும் பரிந்துரைப்பவர்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மத்திய / மாநில அரசுகள் / தன்னாட்சி அமைப்புகள் / பிற கூட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியலுக்கான மாணவர்கள் என அனைத்திலும் மேற்காணும் அடிப்படையில் நடைபெறும். இதில் தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

அரசுப்பணியிலுள்ளோர், பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள், காவல் பணிகள், துணைப்படையினர், மருத்துவம், அவசரப் பணி முகமைகள் மற்றும் அவசரக்காலத் திட்டமிடும் பணியினர், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பேரிடர் பணிகளில் ஈடுபடுபவர்கள், பேரிடர் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனப் பணியிலிருப்பவர்கள், தான முகமைகளில் பணியாற்றுபவர்கள் போன்றவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

விண்ணப்பம்
http://indianredcross.org/education.htm எனும் இணையப் பக்கத்திற்குச் சென்று தகவல்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். தகவல் குறிப்பேட்டில் இருக்கும் விண்ணப்பப்படிவத்தினை அச்சிட்டு எடுத்து, அதனை நிரப்பிச் செயல்முறைக் கட்டணம் (Processing Fee) ரூ 500/- க்கு “Secretary General, Indian Red Cross Society” எனும் பெயரில் “New Delhi” எனுமிடத்தில் மாற்றிக்கொள்ளும்படி டிடி எடுத்து அஞ்சல் உறையில் "12th Batch of PG Diploma in Disaster Preparedness and Rehabilitation” எனக் குறிப்பிட்டு, "Secretary General, Disaster Management Center, Indian Red Cross Society, 1, Red Cross Road, New Delhi - 110001” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அலுவலகத்திற்குச் சென்றடைய வேண்டியக் கடைசி நாள்: 30-9-2017.

பயிற்சிக் கட்டணம்
தேவையிருப்பின் குழுக்கலந்தாய்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணம் (Academic Fee) ரூ 24,000/- பயிற்சிக் கட்டணம் (Tuition Fee) - ரூ 3,000/- என்று மொத்தம் ரூ 27,000/- செலுத்தவேண்டும். சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வார நாட்களில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும்.   
கூடுதல் தகவல்களுக்கு, 011 - 23716441, 23716442, 23716443 (தொடர்ச்சி எண்: 338, 335) எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

-தேனி மு.சுப்பிரமணி   

X