காலணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் படிக்க விருப்பமா ?

4/20/2018 12:23:46 PM

காலணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் படிக்க விருப்பமா ?

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் துறையின் கீழ் அமைந்திருக்கும் காலணிகள் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (Footwear Design & Development Institute) இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் நொய்டா, ரோக்தக், கொல்கத்தா, பர்சத்கஞ்ச், சென்னை, ஜோத்பூர், சிந்த்வாரா, பாட்னா, சண்டிகர், குணா, ஹைதராபாத் மற்றும் அங்களேஸ்வர் ஆகிய 12 நகரங்களில் இக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production) - 450 இடங்கள், சில்லறை மற்றும் அலங்கார வணிகப் பொருட்கள் (Retail & Fashion Merchandise) - 480 இடங்கள், தோல் உபகரண வடிவமைப்பு (Leather Accessory Design) -150 இடங்கள், அலங்கார வடிவமைப்பு (Fashion Design) - 420 இடங்கள், என நான்கு ஆண்டு இளநிலை வடிவமைப்பு (B.Des) பட்டப்படிப்புகளில் மொத்தம் 1500 இடங்கள் இருக்கின்றன.

காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production) - 300 இடங்கள், சில்லறை மற்றும் அலங்கார வணிகப் பொருட்கள் (Retail & Fashion Merchandise) - 390 இடங்கள், படைப்புத்திற வடிவமைப்பு (Creative Design & CAD/CAM) - 30 இடங்கள் என இரண்டாண்டு முதுநிலைப் படிப்புகளில் (M.Des & MBA) 720 இடங்கள் உள்ளன.

வயது மற்றும் கல்வித்தகுதிகள்
இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். +2 தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 25-7-2018 அன்று 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு ஏதாவதொரு இள
நிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதுமில்லை.

கட்டணம்
இளநிலைப் பட்டப்படிப்பு களுக்கு ரூ 49,000/-, முதுநிலைப் படிப்புகளுக்கு ரூ. 64,000/- என அரையாண்டுக் (Semester) கட்டணம் செலுத்த வேண்டும். நூலகக் கட்டணம் (Library Fee), மருத்துவக் காப்பீடு (Mediclaim), தேர்வுக் கட்டணமும் (Exam Fee) உண்டு. கல்லூரி துவக்கத்தில் மாணவர் வளர்ச்சிக் கட்டணம் (Student Development Fee) ரூ.5000/- மற்றும் பாதுகாப்புக் கட்டணம் (Security Amount) ரூ.10000/- கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

நுழைவுத் தேர்வு
All India Selection Test (AIST) நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். http://fddi.attest.co.in/Candidate/How_to_apply_A.aspx இணைய முகவரிக்குச் சென்று, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவுக் கட்டணமாக ரூ.500/- செலுத்தி 22-4-2018ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் மட்டுமே நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 38 தேர்வு மையங்கள் உள்ளன. ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. நுழைவுத் தேர்வின் முடிவுகள் 21-5-2018 வெளியிடப்படும்.

கலந்தாய்வு
நுழைவுத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, முதற்கட்டக் கலந்தாய்வு ஜூன் 12 முதல் 17 வரை நடைபெறும். மாணவர் சேர்க்கை அனுமதி பெற்றவர்கள் 1-7-2018 ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்யலாம். காலியிடங்களுக்கேற்ப இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 16 மற்றும் 19 வரை நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களில் 31-7-2018 ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 1-8-2018 முதல் படிப்புகள் தொடங்கும்.     
 
http://fddi.attest.co.in/College/Index_New.aspx எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது Admission Cell, Footwear Design & Development Institute (Ministry of Commerce & Industry, Govt. of India), A-10/A, Sector-24, Noida-201301 (UP) அஞ்சல் முகவரியிலோ அல்லது fddihelpdesk2018@gmail.com  மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 0120 - 4818400 (49 வழித்தடங்கள்), 09910000219 எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தேனி மு.சுப்பிரமணி

X