எஞ்சினியரிங் பட்டம் படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா?

5/17/2018 3:15:31 PM

எஞ்சினியரிங் பட்டம் படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா?

நன்றி குங்குமம் கல்வி வேலை வழிகாட்டி

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் மொத்தமுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

பொதுக் கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. பொறியியல் படிப்பில் சேர கடந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

என்ன படிப்புகள்? என்ன இடங்கள்?

1. அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகளில் நான்காண்டுகள் (8 செமஸ்டர்கள்) பி.இ/பி.டெக் (B.E./B.Tech) படிப்புகள்
2. அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழியிலான, நான்காண்டு பி.இ-மெக்கானிக்கல், பி.இ-சிவில் எஞ்சினியரிங் படிப்புகள் (B.E.-Mechanical, Civil Engineering - Tamil Medium)
3. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் அரசு இடங்கள் இவற்றில் பி.இ/பி.டெக் படிப்புகள். இதில் இரண்டு வகை இடங்கள் உள்ளன.

வகை: 1

1. அரசுப் பொறியியல் கல்லூரிகள்
2. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்
3. காரைக்குடி, சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (Central Electro Chemical Research Institute (CECRI))

இடங்கள்

வகை: 2

1. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் செல்ஃப் சப்போர்ட்டிங் படிப்புகள்
2. சுயநிதிக் கல்லூரிகளின் அரசு இடங்கள்
3. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் எஞ்சினிரியங் அண்ட் டெக்னாலஜி (Central Institute of Plastic Engineering and Technology - CIPET) இடங்கள்
4. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.இ. இடங்கள்

விண்ணப்பிக்கத் தகுதிகள்

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது வொக்கேஷனல் (Vocational) பாடங்களான ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளயன்ஸ், எலக்ட்ரானிக் எக்யூப்மென்ட்ஸ், சிவில் டிராஃப்ட்மென்ஸ், ஆட்டோ மெக்கானிக்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி என்ற ஏதேனும் குழுவில் கணிதம், இயற்பியல், வேதியியல் என்ற ஏதேனும் ஒரு பாடம் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

+2-ல் இப்பாடங்களின் கூட்டு சராசரியில் குறைந்தபட்ச மதிப்பெண்ணாக, பொதுப்பிரிவினர் 50 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 45 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், டினோட்டிபைடு கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்கள் 40 விழுக்காடும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், மலைவாழ் பிரிவினர் 40 விழுக்காடும் எடுத்திருக்க வேண்டும்.

மெரைன் எஞ்சினியரிங் (Marine Engineering) விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் இவற்றின் கூட்டு சராசரி குறைந்தது 60 விழுக்காடும், பத்தாவது அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடும் பெற்றிருக்க வேண்டும்.சுரங்கப் பொறியியல் (Mining Engineering) பிரிவிற்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மருத்துவத் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 157 செமீ,  குறைந்தபட்ச எடை 48 கிலோகிராமும், நிறக்குறைபாடு அற்றவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் VIII, IX, X, XI, XII ஆகிய வகுப்புகளைப் பயின்ற தமிழக மாணவர்களுக்கு நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட்

(Nativity Certificate) தேவையில்லை. இந்த வகுப்புகளை வெளிமாநிலங்களில் பயின்ற தமிழ்நாட்டு மாணவர்கள் நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட் தர வேண்டும். ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் பணியாற்றிய மத்தியஅரசு, பொதுத்துறை, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவன ஊழியர்கள், அகில இந்திய சேவையில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் VIII, IX, X, XI, XII ஆகிய வகுப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் படித்த மற்ற மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட் தேவையில்லை. இலங்கை அகதிகள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் இராணுவத்தினர் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் தங்களுக்கான தகுதிகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிதல் வேண்டும்.விளையாட்டில் சிறப்புத் தகுதி உள்ளவர்களுக்குத் தனிக் கலந்துரையாடல் உண்டு. சிறப்பு அனுமதி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் ஏற்புடையது.

எவ்வாறு தேர்வு நடைபெறும்?

கணிதத்தில் 100 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல் 100 மதிப்பெண்கள் என்று மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றிருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். வேறு வாரியத்தில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் நூற்றுக்கு கணக்கீடு செய்துகொள்ளப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண் வருகின்றபோது, கணித மதிப்பெண், இயற்பியல் மதிப்பெண், நான்காவது பாடத்தில் மதிப்பெண், பிறந்த தேதி (வயதில் மூத்தவர்), ரேண்டம் எண் (அதிக எண்) என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தை பயன்படுத்தி அதில் கேட்கப்படும் அடிப்படை விவரங்களைக் குறிப்பிட்டு முதலில் தங்களுக்கென ஒரு யூசர் ஐடி, பாஸ்வேர்டு-ஐ உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இதைப் பயன்படுத்தி ஆன்லைன் பதிவை தொடங்கி தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட் (பதிவு எண்ணுக்காக) 8-ம் வகுப்பு

முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரம் ஆகிய விவரங்களை தயாராக வைத்திருப்பது நல்லது.

மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி வரை காத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் பிளஸ் 2 பதிவு எண்ணை வைத்து அண்ணா பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் விவரங்களை ஆன்லைனில் எடுத்துக்கொள்ளும்.

பதிவுக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் முலம் ஆன்லைனில் செலுத்தலாம். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மட்டும் அவர்களின் தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அவர்களும் முன்கூட்டியே மற்ற அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்துவிடலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங்களை குறிப்பிட்டு பதிவை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். மாணவர்கள் ஆன்லைன் பதிவை முடித்ததும் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை முன்பு போல அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பத் தேவையில்லை. அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக உதவி மையங்களுக்கு அழைக்கப்படும்போது, தாங்கள் வைத்திருக்கும் ஆன் லைன் பிரின்ட் அவுட் விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி, கையெழுத்து அங்கேயே சமர்ப்பித்துவிடலாம்.

இலவச தொலைபேசி எண்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை www.tnea.ac.in, www.annauniv.edu ஆகிய இணையதள முகவரிகளில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். மேலும் ஆன்லைன் கலந்தாய்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 044-22359901-20 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் மாணவர்கள் தொடர்பு ளவும் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.5.2018

கலந்தாய்வு முறை

இம்முறை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஆவணங்களை சரிபார்க்கும் ஃபெசிலிட்டேசன் சென்டர், நாள், நேரம் இவை ஈ-கால் பெட்டர் வழியே அனுப்பப்படும். விண்ணப்பித்தவர்கள் இந்த மையத்திற்குச் சென்று ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் நடைபெறும்.

ஆன்லைன் கவுன்சலிங் முறைகள்

1. பொதுத் தரவரிசை, கம்யூனிட்டி தரவரிசை https://www.annauniv.edu//tneu2018 என்ற இணையத்தில் வெளியாகும். ஒரு வாரத்திற்கு சந்தேகங்களை விண்ணப்பத்தாரர்கள் தெளிவு செய்துகொள்ளலாம்.

2. ஆன்லைன் கவுன்சலிங் ஐந்து சுற்றுகளாக நடைபெறும். தரவரிசை அடிப்படையில் எந்த சுற்று என்று அண்ணா பல்கலைக்கழக போர்ட்டலில் வெளியாகும். ஐ.டி. பாஸ்வேர்டு உதவி கொண்டு ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள், பொதுப்பிரிவினர் ரூ. 5,000, எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.(ஏ) பிரிவினர் ரூ.1,000 முன்பணமாக, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வழியாக செலுத்த வேண்டும்.

4. தங்களது விருப்பமான பாடம், கல்லூரித் தேர்வை பதிவு செய்ய மூன்று நாட்கள் தரப்படும். அதாவது, முதல் இரண்டு நாட்களில் 24 மணி நேரமும்,

மூன்றாவது நாள் பிற்பகல் 5 மணி வரையும் தரப்படும்.

6. TNEA போர்ட்டலில் விருப்பங்களைப் பதிவு செய்துகொள்ள வசதிகள் உண்டு. பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். கணினியில் மாதிரிப்

படிவத்தை (format sheet) பதிவிறக்கம் செய்து அதில் விருப்பங்களைப் பூர்த்தி செய்து பின் ஆன்லைனில் சேமிக்கலாம்.

7. குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்வு செய்த பாடங்கள் மற்றும் கல்லூரி விவரங்களை லாக் செய்துகொள்ள வேண்டும்.

8. இறுதியாகக் கணினித் தேர்வை இறுதி செய்யும்.

9. பின் மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரியை அணுக வேண்டும்.

10. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் பிள்ளைகள் இவர்களுக்கான கவுன்சலிங் எப்போதும் போல் அண்ணா பல்கலை வளாகத்தில்தான் நடைபெறும்.

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

X