தொழிற்பயிற்சி படிப்புகளில் சேர ஆசையா? விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

6/25/2018 2:18:42 PM

தொழிற்பயிற்சி படிப்புகளில் சேர ஆசையா? விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அடிப்படை தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட கால அளவிலான பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் 2018-2019ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது மாவட்ட கலந்தாய்வின் மூலம் நடத்தப்படவுள்ளது.

இரட்டைப் பயிற்சி முறை

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மூன்றாம் பணிமுறையில் இப்பயிற்சி முறையானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையான பயிற்சி முறையில் கருத்தியல் மற்றும் அடிப்படை செய்முறை பயிற்சி வகுப்புகள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் செய்முறை பயிற்சி வகுப்புகள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுடன் புரிந்துணர்வு செய்துள்ள தொழில் நிறுவனத்திலும் நடைபெறும். மேலும் இப்பயிற்சி முறையில் சேரும் மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சட்டத்தில் குறிப்பிட்டவாறு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் காலத்திற்கு ஊக்கத்தொகை தொழில்நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
 
பயிற்சிக் காலம்

மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தின் (NCVT) அங்கீகாரத்தின் கீழ் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகள், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட கால தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒரு வருட தொழிற்பிரிவு, இரண்டு செமஸ்டர்களையும் மற்றும் இரண்டு வருட தொழிற்பிரிவு, நான்கு செமஸ்டர்களையும் கொண்டதாக இருக்கும். மேலும் இப்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அகில இந்திய அளவிலான தொழிற் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
 
கல்வித் தகுதி

தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்று விக்கப்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்வதற்கான கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் தொழிற்பிரிவுகள்

பொறியியல் தொழிற்பிரிவுகளாக அடையாளம் காணப்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு தகுதி தேர்வுகளில் (8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி) கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளின் சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை நிர்ணயம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
 
பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள்

இப்பிரிவில் சேர்வதற்கு தகுதித் தேர்வு களில் (8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி) மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை நிர்ணயம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
 
வயது வரம்பு

தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் பொதுப்பிரிவு, எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தபட்சம் 14 வயது முதல் 40 வயதிற்குள்ளாக இருத்தல் அவசியம். மேலும் முன்னாள் ராணுவத்தினர் 14 வயது முதல் 45 வயது வரையும், மகளிர் மற்றும் போரில் இறந்த இராணுவ வீரர்களின் மனைவி/பிள்ளைகளுக்கு குறைந்தபட்ச வயது 14 என்றாலும் அவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
 
இட ஒதுக்கீடு

தமிழக அரசின் பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையானது நடத்தப்படும்.
 
உடல் தகுதி

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ சான்றிதழின் பேரில் மாணவ சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். மருத்துவ சான்றிதழின்படி உடல் தகுதியற்றோர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தின் தன்மையைப் பொறுத்து உரிய தொழிற் பிரிவுகளில் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவர். மருத்துவர்களின் பரிந்துரைகளின்படி மட்டுமே இவர்களின் சேர்க்கை பரிசீலிக்கப்படும்.

மாவட்ட கலந்தாய்வு

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அடிப்படை தொழிற்பயிற்சி மையங்களின் சேர்க்கை அந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மட்டும் மாவட்ட கலந்தாய்வு முறையில் மேற்கொள்ளப்படும். கலந்தாய்விற்கான தேதி மற்றும் நேரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் மாத கடைசி வாரத்தில் வெளியிடப்படும்.
 
விண்ணப்பிக்கும் முறை

மாவட்ட கலந்தாய்வின் மூலம் நடத்தப்படும் இம்மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் சேர விரும்பும் ஒரு மாவட்டத்தில் உள்ள இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் இரண்டு தொழிற்பிரிவுகள் ஆகியவற்றையும் இணையதள விண்ணப்பத்தில் பதிவு செய்யலாம். ஒரு மாணவர் பல மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 27.6.2018.
 
விண்ணப்பக் கட்டணம்

மாணவர்கள் இணையதள விண்ணப்பக் கட்டணமாக ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.50ஐ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சேர்க்கை வங்கி கணக்கான இந்தியன் வங்கி (Indian Bank) சேமிப்பு கணக்கு எண்: 6526577760, Name: AAO and Deputy Director (Admission and Trade Test), Branch: saidapet, Chennai, IFSC CODE  IDIB 0005004 ல் செலுத்தி, செலுத்துச் சீட்டின் நகலை (NODAL ITI COPY) கலந்தாய்வின்போது வருகையைப் பதிவு செய்யும் அலுவலரிடம் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். தொழிற்பயிற்சியில் சேர்வதற்கான விரிவான தகவல்களை அறிய என்ற www.skilltraining.tn.gov.in இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா

X