தமிழ்ப் பல்கலை வழங்கும் கல்வியியல் பட்டப்படிப்புகள்!

6/25/2018 2:45:21 PM

தமிழ்ப் பல்கலை வழங்கும் கல்வியியல் பட்டப்படிப்புகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழக அரசால் 1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தஞ்சாவூரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ் மொழியின் உயர்நிலை ஆய்வு மையமாக விளங்கும் இப்பல்கலைக்கழகமானது கலைப்புலம், சுவடி புலம், மொழிப்புலம் என்பன போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் இருபத்தாறு துறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும் இத்தமிழ்ப் பல்கலைக்கழகமானது கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் கல்வியியல் கல்லூரியை(Department of Education) 2007-2008 கல்வியாண்டில் தொடங்கியது.

மொழியியல், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் ஆகிய துறைகளில் சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்கும் இப்பல்கலைக்கழகத்தில் 2018-2020 ஆம் கல்வியாண்டின் பி.எட்(B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. அதேபோல் முதுகலை (M.A)/ முதுஅறிவியல் (M.Sc.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆகிய உயர்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கல்வித் தகுதி

B.Ed. /M.Ed.: மொழியியல் மற்றும் கல்வியியல் துறைகளில் சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்கும் இப்பல்கலைகழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் (M.Ed) படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டத் தேர்வில் (B.Ed) 50% க்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம்.

இளநிலைப் பட்டப்படிப்பான பி.எட்(B.Ed) படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் கணிதம், இயற்பியல், நுண்ணுயிரியல், தாவர உயிரியல், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களை தங்கள் இளநிலைப் படிப்பில் முதன்மைப் பாடமாக கொண்டிருத்தல் அவசியம்.  மேலும் 10+2+3 என்ற கல்வி முறையில் பயின்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

முதுகலை/முதுஅறிவியல்/ஆய்வியல் நிறைஞர்: உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக நல்கைக்குழு விதிகளின்படி 10+2+3 கல்விப் படிநிலை
களில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்தவராக இருத்தல் வேண்டும்.

பட்டியல்/பழங்குடி வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்தது 50%  மதிப்பெண்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் பெற்றிருத்தல் வேண்டும். (சான்றொப்பம் பெற்ற உரிய சாதிச்சான்றிதழ் இணைத்தல் வேண்டும்) பிற வகுப்பினருக்கு குறைந்தது 55% பெற்றிருக்கவேண்டும்.

முதுநிலைப் பட்டப்படிப்பில் மூன்றாம் பருவத்தில் தேர்ச்சி பெற்று நான்காம் பருவம் தேர்வு எழுதி தேர்ச்சி முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

கல்வியியல், மொழியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் தொடர்ந்து வல்லுநர்களை உருவாக்கும் இப்பல்கலைக்கழகத்தில் எம்.எட் மற்றும் பி.எட் படிப்பிற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை நேரில் பெற அந்தந்த படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி (ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் சான்றொப்பமிடப்பட்ட சாதிச்சான்றிதழின் நகலும் தரவேண்டும்) தமிழ்ப் பல்கலைக்கழக அலுவலத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

அஞ்சல் வழியாக பெற விரும்புவோர் “பதிவாளர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணத் தொகையை வங்கி வரைவோலை எடுத்து அதனுடன்  ரூ.50க்கான அஞ்சல்தலை ஒட்டிய தன்முகவரியிட்ட உறை இணைத்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைனில் எம்.எட்., பி.எட்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tamiluniversity.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.600, எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் ரூ.300, செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 31.7.2018.

முதுகலை/முதுஅறிவியல் ஆய்வியல் நிறைஞர் ஆகிய படிப்புகளில் சேர விரும்பு வோர் இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.300-க்கு (ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.150 சான்றொப்பமிடப்பட்ட சாதிச்சான்றிதழின் நகலும் தரவேண்டும்) ‘பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்‘ என்ற பெயரிலான வங்கி வரைவோலையுடன் பல்கலைக்கழகத்திற்கு நிறைவு செய்த விண்ணப்பத்தினை அனுப்பிவைக்கலாம்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் ஏதேனும்  தேவையிருப்பின் அவற்றின் ஒளிப்பட நகலை சான்றொப்பம் இட்டு இணைத்து அனுப்புதல் வேண்டும். மாணவர் சேர்க்கைதமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் இப்பல்கலைகழகத்தில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள், தரவரிசை, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கலந்தாய்விற்கு உட்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையானது நடத்தப்படும்.

கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம், இடம் ஆகியன தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு  அந்தந்தத் துறைத் தலைவர்களால் நேரடியாகத் தெரிவிக்கப்படும். கலந்தாய்விற்கு வராதவர்களின் விண்ணப்பங்கள் சேர்க்கைக்குப் பரிசீலிக்கப்படமாட்டாது. கலந்தாய்வின் முடிவில் விண்ணப்பதாரரின் தெரிவு மற்றும் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் அறிவிக்கை 2016-ன்படி ஆய்வியல் நிறைஞர் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பிற்குப்  பல்கலைக்கழகத்தாரால் நுழைவுத்தேர்வு நடத்தப்பெறும். நுழைவுத்தேர்வு  நடைபெறவுள்ள நாள், நேரம், இடம் ஆகியன தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்குத் துறைத்தலைவர்களால் நேரடியாக அறிவிக்கப்பெறும்.

நுழைவுத்தேர்விற்கு வராதவர்களைத் தெரிவுசெய்ய இயலாது. தகுதியின் அடிப்படையிலும் தமிழக அரசு அறிவித்துள்ள இனவாரிச் சுழற்சி முறை அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவு  செய்யப்பெறும். நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இளநிலை/முதுநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் துறையிலுள்ள இடங்களைப் பொறுத்து முதுகலை/முதுஅறிவியல்/ ஆய்வியல் நிறைஞர் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டிய இறுதி நாள்:  29.6.2018

- வெங்கட்

X