மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

8/29/2018 4:36:54 PM

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா, தில்லி மாநிலப் பள்ளிகள், திபெத் பள்ளிகள் ஆகிய தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு CTET (Central Teacher Eligibility Test) தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்திவருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, தேர்வானது 16.9.2018 அன்று நடத்தப்படும். இதற்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு வரை இந்தத் தேர்வை 20 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் உள்பட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஒன்றை தேர்வு செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இது தேர்வர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சுட்டுரையில் தனது கருத்தைப் பதிவிட்டதோடு, முன்பு இருந்தது போல் 20 மொழிகளிலும் தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை சி.பி.எஸ்.இ. இப்போது மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாகத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்தது.இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான புதிய அறிவிப்பை சி.பி.எஸ்.இ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, சி.டி.இ.டி. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள் எனவும், கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் 5 -ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 8 -ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப்படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களும் அறிய https://ctet.nic.in/CMS/Public/Home.aspx என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X