ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை!

11/21/2018 3:17:59 PM

ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன சைனிக் பள்ளிகள். இந்தியா முழுவதும் 24 பள்ளிகள் தற்போது செயல்பட்டுவருகின்றன. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேரத் தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இந்தப் பள்ளிகள் 1961ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.  இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சராக வி.கே. கிருஷ்ண மேனன் இருந்தபோது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கபட்டதுதான் சைனிக் பள்ளிகள்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணிக்கு சேரும் வண்ணம் மாணவர்களை தயார்படுத்துகிறது இப்பள்ளிகள். அந்த வகையில் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை தாலுகாவில் உள்ள அமராவதி நகரில் இயங்கும் சைனிக் பள்ளியில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நடத்தப்படும் இப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் 90 இடங்களும், ஒன்பதாம் வகுப்பில் 10 இடங்களும் நிரப்பப்படவிருக்கின்றன.தேவையான தகுதி: ஆறாம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 31.3.2019ம் தேயின்படி 10 முதல் 12 வயதிற்குள் இருத்தல் வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 31.3.2019ம் தேதியின்படி 13 முதல் 15 வயதிற்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் ஆறாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலும் சேர விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர். அரசு விதிகளின்படி கல்வி உதவித்தொகையும், இட ஒதுக்கீடும் அனுசரிக்கப்படுகிறது.

மாணவ சேர்க்கை முறை: மாணவர் சேர்க்கை 6.1.2019 அன்று நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் மூலம் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மெடிக்கல் தேர்வுகளின் அடிப்படையில் நடத்தப்படவிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விருப்ப மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

 ஒன்பதாம் வகுப்பிற்கு சென்னை, உடுமலைப்பேட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும், ஆறாம் வகுப்பிற்கு அமராவதி நகர் மற்றும் புதுச்சேரியிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்படவிருக்கிறது.விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.400,
எஸ்.சி / எஸ்.டி. மாணவர்கள் ரூ.250 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 26.11.2018.
மேலதிக தகவல்களுக்கு www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா

X