விவசாய தொழில் மேலாண்மை முதுநிலைப் படிப்பில் மாணவர் சேர்க்கை!

11/22/2018 5:48:53 PM

விவசாய தொழில் மேலாண்மை முதுநிலைப் படிப்பில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி வழிக்காட்டி

மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் 1987ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நிறுவப்பட்டது National Institute of Agricultural Extension Management (MANAGE) எனும் தன்னாட்சி கல்வி நிறுவனம். உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள், நவீன விவசாய தொழில்நுட்பங்கள் என மாறிவரும் விவசாய முறைகளுக்கு ஏற்ப விவசாயம் சார்ந்த படிப்புகளை வழங்கி உலகத்தரம் வாய்ந்த மாணவர்களை உருவாக்கிவரும் இக்கல்வி நிறுவனத்தில் இரண்டு வருட கால அளவிலான முதுகலை விவசாயத் தொழில் மேலாண்மை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

நவீன பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப இந்திய மண் சார்ந்த விவசாய முறைகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றை சந்தைப்படுத்தும் முறைகளை போதிக்கும் இரண்டு வருட கால அளவிலான முதுநிலை விவசாயத் தொழில் மேலாண்மை (Post Graduate Diploma in Management(Agriculture Bussiness Management)) படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் Commercial Agricuture, Agriculture Engineering, Agriculture Information technology, Food Technology போன்ற விவசாயம் சம்பந்தமான துறைகளில் 50% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம். மேலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டால்  நடத்தப்பட்ட CAT-2018 தேர்வு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும்.
   
விண்ணப்பிக்கும் முறை

விவசாய மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.manage.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவேண்டும். பூர்த்தி செய்த படிவத்துடன் வரைவோலை மூலம் விண்ணப்பக் கட்டணம் ரூ.1200 ஐ செலுத்தி ‘Principal Co-ordinator-PGDM(ABM), National Institute of Agricultural Extension Management (MANAGE), Rajendranagar, Hyderabad- 500 030’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் SC/ST மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 ஐ செலுத்தவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2018.
 
தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்பித்த மாணவர்கள் CAT-2018 மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவர். பின் மாணவர்கள் குரூப் டிஸ்கஷன், நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்டு அதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் பணி அனுபவம் மற்றும் இளங்கலையில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.மேலும் விரிவான விவரங்களுக்கு www.manage.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  -வெங்கட்

X