யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில்மாணவர் சேர்க்கை!

7/18/2019 2:49:21 PM

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில்மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

அட்மிஷன்

மருத்துவப் படிப்புகளான MBBS, BDS படிப்புகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்திலும் கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது நீட் தேர்வு. மாணவிகளின் உயிரிழப்பும் தொடர்கிறது. இந்நிலையில் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் கட்டாயமாக்கப்படும் என்ற தகவல் மாணவர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டு அனைத்து ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. ஆனால், தமிழகத்தில் 2018ம் ஆண்டு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு மற்றும் தனியார் ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் 2018ம் ஆண்டு டிசம்பரில் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று சுற்றறிக்கை வெளியிட்டதோடு, அரசிதழிலும் வெளியிட்டது.

அதே சமயம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பிற ஆயுஷ் மருத்துவப் படிப்புகளான சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவானது.

ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் சித்தா, ஆயுர்வேதா யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகள் இந்திய முறை மருத்துவம் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு மாணவர் சேர்க்கை நடத்த தமிழகத்தில் இந்திய முறை மருத்துவம், ஓமியோபதி இயக்ககம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் செயல்பட்டு வரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 400 யோகா மற்றும் இயற்கை மருத்துவ இடங்கள் (B.N.Y.S) என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப்புடன் சேர்த்து இது ஐந்தரை ஆண்டு படிப்பு ஆகும். மத்திய அயுஷ் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த டாக்டர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.கல்வித் தகுதி: பிளஸ்2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு இடங்கள் அல்லது முற்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இரண்டும் சேர்த்து உயிரியல் பாடத்தில் தலா 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பிசி/ பிசி(எம்) பிரிவை சேர்ந்தவர்கள் மேற்கண்ட பாடங்களில் தலா 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எம்பிசி/டிஎன்சி பிரிவை சேர்ந்தவர்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்சி(ஏ)/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் தலா 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் 17 வயது பூர்த்தியாக வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் படிவத்தை ₹500-க்கு டிடி செலுத்தி பெற வேண்டும். சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ₹100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்சி(ஏ)/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் சாதிச்சான்றிதழின் நகல், பிளஸ்2 மதிப்பெண் பட்டியலின் 2 நகல்களில் சுய அத்தாட்சியிட்டு (self attestation) கடிதம் அனுப்ப வேண்டும். இப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு மேற்படி விண்ணப்பப் படிவத்திற்கான தொகை ரூ.500 செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

விண்ணப்பிக்கும் முறை: சென்னையிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம், மதுரை மாவட்டம், அரசு ஆயுர்வேதா கல்லூரி, கோட்டார், நாகர்கோவில் ஆகியவற்றின் கல்லூரி முதல்வர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம். ‘‘Director of Indian Medicine and Homeopathy, Chennai-106’’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.

www.tnhealth.org என்ற இணையளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர் விண்ணப்பம் பெறுவதற்கான மனு, டிடி, 33 செ.மீ X 14 செ.மீ அளவுள்ள சுய முகவரியிட்ட ரூ.70 மதிப்புக்கான சாதாரண அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் பெற, பதிவிறக்கம் செய்ய ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் அவர்கள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு சான்றிதழ்களைப் பெற்று அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன்பிறந்தோர் இந்த சலுகையை பயன்படுத்தியிருக்கக் கூடாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சான்றிதழ்களின் நகல்கள் ஜூலை 22ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ‘மாணவர் தேர்வு குழு செயலாளர், இந்திய முறை மருத்துவம், ஓமியோபதி இயக்ககம், அரும்பாக்கம், சென்னை-600 106’ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
கூடுதல் விவரங்களை www.tnhealth.org இணையதளத்திலும் அறிந்துகொள்ளலாம்.

பள்ளிகளி்லேயே வேலைவாய்ப்பு பதிவு!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ 2019ம் ஆண்டிற்கான பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஜூலை 24ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணிக்கான சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். மேலும்,  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் (www.tnvelaivaaippu.gov.in) பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள்  வேலைவாய்ப்பகப் பதிவுகளை  மேற்கொள்ளலாம்’என தெரிவித்துள்ளார்.  

-சுந்தர் பார்த்தசாரதி

X