இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

7/18/2019 2:51:31 PM

இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

அட்மிஷன்

விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

பொருளாதாரம், குடும்ப சூழல் போன்ற காரணங்களால் உயர்கல்வியை மேற்கொள்ள முடியாத இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான உயர்கல்வியைத் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கும்பொருட்டு மத்திய அரசால் 1985ம் ஆண்டு புதுடெல்லியில் தொடங்கப்பட்டது Indira Gandhi National Open University (IGNOU). இது சுருக்கமாக இக்னோ என்று அழைக்கப்படுகிறது.

சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை என சுமார் 220 வகையான பாடப்பிரிவுகள் இக்கல்வி நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்படுகின்றன. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இக்கல்விநிறுவனத்தில் 2019ம் கல்வி ஆண்டுக்கான பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கின்றன.

வழங்கப்படும் படிப்புகள்

இளங்கலைப் பட்டப்படிப்புகள்:  கணிதம், இயற்பியல், வேதியியல், லைஃப் சயின்ஸ் போன்ற துறைகளில் B.Sc படிப்புகளுக்கும், உளவியல், ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடப்பிரிவுகளில் BA, B.Com, BCA, BLIS மற்றும் B.S.W போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

முதுகலைப் பட்டப்படிப்புகள்: உளவியல், ஆங்கிலம், பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம், ரூரல் டெவலப்மென்ட், சமூகவியல், தத்துவம், மொழிபெயர்ப்பு, மானுடவியல் மற்றும் முதியோர் கல்வி போன்ற பாடப்பிரிவுகளில் MA, MCA, M.Com மற்றும் M.Sc படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலைப் பட்டயப்படிப்பு: காந்தி அமைதிச் சிந்தனைகள், கிராமப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு, உயர்கல்வி, கல்வியியல் தொழில்நுட்பம், மருந்துகள் விற்பனை மற்றும் மேலாண்மை, இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, சமூகப்பணி, சுற்றுச்சூழல், கிரிமினல் ஜஸ்டிஸ் மற்றும் ஆகுபேஷனல் ஹெல்த் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

கல்வித் தகுதி

இளங்கலைப் படிப்புகளைப் படிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் +2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். முதுகலைப் படிப்புகளுக்குத் தேர்ந்தெடுக்க விரும்பும் துறைகளுக்கு ஏற்ப இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம். +2 முடிக்காதவர்கள் இக்னோவின் Bachelor’s Preparatory Programme (BPP) முடித்திருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.7.2019. மேலதிக தகவல்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-குரு

X