அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இரண்டாவது வாய்ப்பு!

8/19/2019 3:14:28 PM

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இரண்டாவது வாய்ப்பு!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், சேலம் என 7 மண்டலங்களில் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெறவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து பயிற்சி பெறவும் கலந்தாய்வு மூலம் ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்திய அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களின் (ஐடிஐ) தரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட தரநிர்ணயத் திட்டத்தில், சிறந்த தரம் உடையதாக 120 ஐடிஐ-கள் தேர்வு செய்யப் பட்டன. இதில் அதிகபட்சமாக, தமிழகத்தை சேர்ந்த 40 ஐடிஐ-கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை தமிழகத்தில் உள்ள அரசு ஐடிஐ-கள் பெற்றுள்ளன. இன்றைய காலகட்டம் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப சில அரசு ஐடிஐ-களில் நவீன தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர, அரசு ஐடிஐ-களில் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி, இலவச பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப் பிறகு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.

சமீபத்தில் முடிந்த 2019ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் அரசு ஐடிஐ-களில் உள்ள இடங்கள், அரசு உதவி பெறும் ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐ-களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 37,097 இடங்களை நிரப்ப இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்ட கலந்தாய்வு மூலம் முதல்கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை முடிந்த நிலையில் அரசு ஐடிஐ-களில் 7,840 இடங்களும், தனியார் ஐடிஐ-களில் 5,888 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு 10ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படாவிட்டால், மாற்று இனத்தவரைக்கொண்டு அந்த இடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அரசு ஐடிஐ-களில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

X