சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை!

8/20/2019 2:51:13 PM

சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் மொத்தம் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அமராவதி நகர் சைனிக் பள்ளி. இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இந்தப் பள்ளியானது இந்திய ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். இது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாகும்.

ஆனாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழித் திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

இப்பள்ளியில், 2020-21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் ‘ஆன்லைனில்’ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. வரும் 2020-21 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு 2020 ஜனவரி 5ம் தேதி நடக்கவுள்ளது.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு: ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்; 2008ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். அதேபோல், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு, 2005ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2007 மார்ச் மாதத்திற்குள் பிறந்திருக்கவேண்டும். ஆறாம் வகுப்பில், 90 மற்றும் ஒன்பதாம் வகுப்பில் 6 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். உடுமலை, புதுச்சேரி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ‘ஆன்லைன்’ மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.’ஆன்லைன்’ மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கும், கட்டணம் மற்றும் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களுக்கும், www.sainikschool amaravathinagar.edu.in , www.sainikschooladmission.in என்ற இணையதளங்களிலும் பார்வையிடலாம். விண்ணப்பங்களை செப்டம்பர் 23ம்தேதி வரை சமர்ப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, 04252-256246 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

X