டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை!

9/3/2019 2:55:43 PM

டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

டிப்ளமோ நர்ஸிங் படிப்பு மற்றும் பாராமெடிக்கல் பட்டப்படிப்பு, பாராமெடிக்கல் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு, 2,000 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை மருத்துவக் கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.

அதே போல பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்குப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 4.9.2019-க்குள் சமர்பிக்க வேண்டும். தரவரிசை பட்டியல் 13.9.2019-ல் வெளியிடப்படும். பாராமெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 18.9.2019. தரவரிசைப் பட்டியல் 27.9.2019-ல் வெளியிடப்படும்.

பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம் படிப்புகள்

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபீடி, பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய்க் குறியியல்) உள்ளிட்ட 17 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்தப் படிப்புகளுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்தப் பட்டப்படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கியுள்ளது.

வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் ‘செயலாளர், தேர்வுக்குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010’ என்ற முகவரியில் வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு வரை மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- முத்து

X