மும்பை NITIE-ல் மாணவர் சேர்க்கை!

1/29/2020 3:09:27 PM

 மும்பை NITIE-ல் மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

அட்மிஷன்

இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணிக் கல்விநிறுவனங்களில் ஒன்றான National Institute of Industrial Engineering (NITIE) மும்பையில் அமைந்துள்ளது. 1963ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், மேனேஜ்மென்ட் மற்றும் இண்டஸ்டிரியல் எஞ்சினியரிங் சார்ந்த பல்வேறு முதுகலை டிப்ளமோ படிப்பு களையும், ஆராய்ச்சிப் படிப்புகளையும் சர்வதேசத் தரத்தில் வழங்கிவருகிறது.மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவரும் இக்கல்விநிறுவனத்தில் 2020ம் கல்வியாண்டிற்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

இரண்டு வருட முதுகலை டிப்ளோமா படிப்புகளான Post Graduate Diploma in Industrial Management (PGDIM), Post Graduate Diploma in Industrial Safety and Environmental Management (PGDISEM) மற்றும் Industrial Engineering and Manufacturing Systems, Operation and Supply Chain Management, Engineering Technology and Project Management, Decision Science and Information Systems, Environmental Engineering and Management, Organizational Behaviour and Human Resource Management, Marketing Management, Accounting & Finance, Economics & Strategy போன்ற துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

அரசு அங்கிகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் 60 % மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பது முதுகலை டிப்ளோமா படிப்புகளுக்கான கல்வித் தகுதியாகக் கருதப்படுகிறது. Engineering/Technology, Economics, Management, Commerce, Social Science, Life Science, Pure Science போன்ற ஏதேனும் ஒரு துறையில் 60 % தேர்ச்சியுடன் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு 5% மதிப்பெண்களில் தளர்வு வழங்கப்படும். கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். முதுகலை டிப்ளோமா படிப்பில் PGDISEM-ஐ தேர்வு செய்வோருக்கு 3 பிப்ரவரி 2020 அன்றின்படியும், ஆராய்ச்சிப் படிப்பு தேர்வு செய்யும் மாணவர்களுக்கு 01 ஏப்ரல் 2020 அன்றின்படியும் இரண்டு வருடம் பணி அனுபவம் கொண்டிருந்தால் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உதவித்தொகை

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் விதிகளின்படி தகுதியான ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை (Financial Assistance) வழங்கப்படுகிறது. அதன்படி விண்ணப்பதாரர்கள் GATE / NET- JRF போன்ற தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் பெற்று (Sponsored Candidates) ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. முதுகலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கப்போகும் எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

CAT 2019 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு முதுகலை டிப்ளோமா படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப் படும். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் எடுத்த மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு, மேற்கொள்ளும் ஆராய்ச்சி மற்றும் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் 29 வரையில் குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு ஜூன் மாதம் முதல் முதுகலை டிப்ளோமா படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். ஆராய்ச்சிப் படிப்புகள் ஏப்ரல் 23 முதல் 25ம் தேதிவரை எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூலை மாதம் முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nitie.ac.in என்ற இணையதளம் சென்று ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். முதுகலை டிப்ளோமா படிப்புகளுக்கு 03 பிப்ரவரி 2020 மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு 01 ஏப்ரல் 2020 அன்றும் விண்ணப்பிக்க கடைசிநாளாகும். மேலும் முழு விவரங்களை அறிய விரும்புவோர் www.nitie.ac.in என்ற இணைய தளப்பக்கத்தைப் பார்க்கவும். - வெங்கட் குருசாமி

X