வெள்ளி பெற்றுத்தந்த சூப்பர் பன்ச்! அரசுப்பள்ளி மாணவியின் நாக்அவுட் சாதனை!

7/13/2017 2:29:17 PM

வெள்ளி பெற்றுத்தந்த சூப்பர் பன்ச்!  அரசுப்பள்ளி மாணவியின் நாக்அவுட் சாதனை!

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” இது பாரதியார் வாக்கு. குத்துச்சண்டை, மல்யுத்தமெல்லாம் ஆண்களுக்கான போட்டி என்ற தடையை உடைத்த சாதனைக்குச் சொந்தக்காரர்கள் மேரிகேம், கீதாபோகத் பவித்தா போன்றவர்களே. இவர்கள் அனைவரும் எளிய குடும்பத்தின் வாரிசுகள்தான்.

பெரம்பலூரின்  ‘குன்னம்’ ‘அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மாணவி மாநில அளவிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 2-ம் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் தட்டி வந்துள்ளார். ‘‘குன்னத்துக்கிட்ட இருக்குற குக்கிராமமான கரம்பியம்தான் சொந்த ஊர். அப்பா விவசாயம் செய்யறார்.

வானம் பார்த்த பூமியில வருஷத்தில் பாதிநாள்தான் பயிர்செய்ய முடியும் ஆறாம் வகுப்பு படிக்கும்போது குத்துச்சண்டை மீது ஆர்வம் வந்துச்சு. ஒரு கிராமத்துப் பெண் குத்துச்சண்டை கத்துக்கிறாள்னா அது எப்படி சாத்தியமாகும்? ஆனாலும் என்னோட அம்மா ‘வசந்தி’ எனது திறமையைப் புரிஞ்சுக்கிட்டு என்னை ஊக்கப்படுத்தினாங்க. குத்துச்சண்டைக்கு முக்கியமே சத்தான சாப்பாடுதான். கஷ்டம் இருந்தாலும் எனக்கு சத்தான உணவுகளைத் அம்மா தயார் செஞ்சு கொடுத்தாங்க’’ தொடர்ந்து பேசிய உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் கூறும்போது.
 
‘‘ரம்யாவோட ஸ்டாமினா லெவல் அதிகம். மூன்று வருஷத்துக்கு முன்னாடி அரியலூரில் பாக்சிங் மேட்சில ஜெயிக்க ரம்யாவுக்கு தேவைப்பட்டது இரண்டே இரண்டு பன்ச்தான். ரம்யாவிடம் நாக்அவுட் ஆன மாணவி தனியார் பள்ளியில் தீவிரமாகப் பயிற்சி எடுத்துத் திறமையாக விளையாடக்கூடியவர். அதன் பிறகுதான் ரம்யாவுக்கு முழு முயற்சியாகச் சொல்லித்தரத் தொடங்கினேன்.

17- 19 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கடந்த மூன்றாண்டுகளாக வெள்ளி, வெங்கலப் பதக்கங்களை பெற்று வந்துள்ளார். சென்ற 2016-17 ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட பாக்சிங் மேட்ச்சில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் பங்கேற்கத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க முடியாத குடும்ப சூழ்நிலையிலும் அவர் பதக்கங்களை குவிப்பது ஆச்சரியமான மன வலிமை இருந்தால்தான் சாத்தியம்’’ என்று மலர்ச்சியாகப் பேசுகிறார் செந்தில்குமார்.

தொடர்ந்து பேசிய ரம்யா ‘‘எனது கோச், குத்துச் சண்டையில் நுணுக்கமான டெக்னிக்குகளைச் சொல்லித்தந்து என்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பாக்சிங் மேட்சுக்கு பங்கேற்க தொடர்ந்து கூட்டிட்டு போறார். மேட்ச்சில் சில நேரம் அதிக ஸ்டாமினாவுடன் எதிர் போட்டியாளர் கடுமையாகத் தாக்குவார்கள்.

அடிக்கும் விசையின் தாக்கத்தை நிதானமாக யோசிப்பேன். போட்டியின் போது கொஞ்சம் கூடக் கோபத்திற்கோ பதற்றத்திற்கோ இடம் கொடுக்கக் கூடாது. வெற்றிக்கு நிதானம் தேவை. முழு முயற்சி செய்து அடித்தால் சில பன்ச்சுகளிலேயே நாக்அவுட்தான். இவ்வாண்டும் பள்ளிக்கல்வித்துறையின் குத்துச்சண்டை போட்டிக்குக் கடுமையாக பிராக்டிஸ் எடுத்துட்டு இருக்கேன். தேசிய அளவில் தங்கபதக்கம் பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது இலட்சியம், ஏன் கனவும் கூடத்தான்’” என கண்களில் கனவுகள் துலங்க புன்னகைக்கிறார் ரம்யா.

திலீபன் புகழ்
படங்கள்: எஸ்.சுந்தர்

மேலும்

X