மின்சார மீன்!

8/17/2017 5:02:41 PM

மின்சார மீன்!

குப்பையிலிருந்து மின்சாரம், உருளைக்கிழங்கிலிருந்து மின்சாரம் என்று உருண்டு புரண்டு புதுமையான முறையில் மின்சாரம் கிடைக்குமா என்று விஞ்ஞானிகள் உலகம் முழுவதிலும் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள். கடலில் வாழும் திருக்கை மீன் சர்வ சாதாரணமாக 220 வோல்ட் வரை மின்சாரத்தைத் தயாரிக்கிறது. எப்படி?

யெஸ். இந்தத் திருக்கை மீனின் பெயர் மின்சாரத் திருக்கை (Electric Ray). சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கிரேக்கநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த மீனின் மின்சாரத்தை பெய்ன்கில்லராக பயன்படுத்தியிருக்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ வலியைக் குறைக்க இந்த திருக்கை மீனின் மின்சாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இதன் மின்சாரத்தை மூட்டுவலியைக் குறைக்கவும், தலைவலியைக் குறைக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.இந்த மீனை சில நாடுகளில் கண்ணிவெடி மீன் என்று செல்லமாக அழைக்கிறார்கள். எதற்காக இதனை கண்ணிவெடி மீன் என்று அழைக்கிறார்கள்? மீன் எப்படி மின்சாரம் தயாரிக்கிறது?ஆழம் குறைந்த கடல் பகுதிகளில்தான் எலக்ட்ரிக் ரே வசிக்கும். ஆயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதிகளில் இவை காணப்படும். முள் தோல் அமைப்பில் பீச்சில் கிழிந்த வலைகளை குவித்து வைத்தது போன்று இவை காணப்படும்.

மற்ற திருக்கை மீன்கள் தங்களுடைய செதில்களை பயன்படுத்தி நீச்சலடித்தால் இவை தம் வால்களைப் பயன்படுத்துகின்றன. மேலும் சில மீன் வகைகள் தங்கள் உடலில் இருந்தே மின்சாரம் தயாரிப்பது உண்டு. அவை மின்சாரத்தை வால் பகுதியில் வெளிப்படுத்துகின்றன. இந்த மின்சாரத் திருக்கை மீன்கள், தங்களுடைய தலைப்பகுதியில் மின்சார ஃபேக்டரி வைத்துள்ளன. எலக்ட்ரிக் ரேயின்  தலையில் இரு புறங்களிலும் மின்சாரம் தயாரிக்க இரண்டு ஸ்பெஷல் உறுப்புகள் உண்டு. இந்த இரண்டு உறுப்புகளையும் 4 மத்திய நரம்பு மண்டலங்கள் கட்டுப்படுத்துகின்றன.

இதன் செல்கள் அதிநெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நரம்பு மண்டலங்களில் காணப்படும் அதிகப்படியான செல்கள் உள் இயக்க விசையைத் துரிதப்படுத்துகின்றன. எந்தவொரு வேகமான இயக்கமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் தலைப்பகுதியில் இருக்கும் இரண்டு மின்சாரம் தயாரிக்கும் சிறப்பு உறுப்புகளில் கீழிருந்து மேலாக மின்சாரம் பாயும் வகையில் செல்கள் அமைந்திருக்கின்றன. இதன் முக்கிய நரம்பு மண்டலமும், சிறப்பு உறுப்புகளோடு தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பு உறுப்புகளில் அறுங்கோண வடிவில் பாட்டரி போன்ற முக்கியமான உணர்வு உறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு அறுங்கோண வடிவ பாட்டரியிலும் 140 முதல் 5 இலட்சம் வரை, வழவழப்பான தட்டுகள் உள்ளன. உப்பு நீரில் நீந்தும்போது, எலக்ட்ரிக் ரே மின்சாரத்தை உற்பத்தி செய்து சேமித்து வைக்கிறது.

- ஆதலையூர் சூர்யகுமார்