எஸ்.எஸ்.பி. நேர்முகத்தேர்வுகள்!

8/21/2017 3:30:42 PM

எஸ்.எஸ்.பி. நேர்முகத்தேர்வுகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உத்வேகத் தொடர் - 34

வேலை வேண்டுமா?

‘சர்வீசஸ் செலக்‌ஷன் போர்டு’ (Services Selection Board) எனப்படும் ‘எஸ்.எஸ்.பி’  நடத்தும் தேர்வுகளில் மிகவும் முக்கியமானது ‘நேர்முகத்தேர்வு’ (Interview) ஆகும். இந்தத் தேர்வு, மொத்தமுள்ள 5 நாட்களில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களில் நடத்தப்படும். காலை வேளையில் ‘குழுப் பணித் தேர்வுகள்’ (Group Tasks Tests) பல நடத்தப்பட்டாலும், இந்த ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் ‘நேர்முகத்தேர்வு’ நடத்தப்படுகிறது. சிலவேளைகளில், தனியாக ஒருநாள் முழுவதும் நேர்முகத்தேர்வு நடத்தப்படலாம்.

நேர்முகத்தேர்வு என்பது ஒரு போட்டியாளரை நேருக்குநேர் சந்தித்து கலந்துரையாடி, அவரது தகுதிகள், திறமைகள் மற்றும் தனித்தன்மைகள் ஆகியவற்றை ‘மதிப்பீடு’ (Evaluation) செய்வதைக் குறிக்கும். இந்த நேர்முகத்தேர்வில் தேர்வு நடத்துபவர் (Interviewer) சில கேள்விகளைக் கேட்டு, போட்டியாளரின் பதிலைப் பெற்று, உளவியல்ரீதியாக மதிப்பீடு செய்து, போட்டியாளரின் தன்மையை முடிவு செய்வார். இங்கு, நேர்முகத்தேர்வு நடத்துபவரை ‘நேர்முகத்தேர்வு அலுவலர்’ (Interviewing Officer) என்றும் குறிப்பிடுவார்கள்.

நேர்முகத்தேர்வு அலுவலர்நேர்முகத்தேர்வு நடத்தப்படும் ஒருநாளுக்கு முன்பே போட்டியாளர்களின் ‘தனிநபர் தகவல் கேள்வித்தாளில்’ (Personal Information Questionnaire) இடம்பெற்ற தகவல்கள் முழுவதையும் நேர்முகத்தேர்வு அலுவலர் நன்றாகத் தெரிந்துகொள்வார். மேலும், உளவியல் ரீதியாக நடத்தப்பட்ட தேர்வுகளில், போட்டியாளர்கள் எழுதிய பதில்களையும் குறித்துக்கொள்வார்.

இவைதவிர, போட்டியாளர் ஏற்கனவே தன்னைப்பற்றி எழுதிக்கொடுத்த சுய விளக்கத்தை (Self Description) வாசித்துத் தெரிந்துகொள்வார். போட்டியாளர்கள் பற்றி உளவியலாளர்கள் (Psychologist) மதிப்பீடு செய்த குறிப்புகளையும் பெற்றுக்கொள்வார். போட்டியாளர் பற்றிய அத்தனை தகவல்களையும் கையில் வைத்துக்கொண்டு நேர்முகத்தேர்வு அலுவலர் நேர்முகத்தேர்வை நடத்துவார்.

போட்டியாளர்கள் நேர்முகத்தேர்வின்போது போட்டியாளர்கள் நேர்மையுடன் நடந்துகொள்வது நல்லது. பொய் சொல்பவர்களை எளிதில் அறிந்துகொள்ளும் திறன் படைத்தவர்களாக நேர்முகத்தேர்வு அலுவலர்கள் இருப்பதால், உண்மைத் தகவல்களைத் தெரிவிப்பது போட்டியாளர்களின் கடமை ஆகும். நேர்முகத்தேர்வின்போது தைரியமாகவும், நம்பிக்கையுடனும் பதில்களைத் தெரிவிக்க வேண்டும். தயங்கித் தயங்கி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பதில்களைத் தந்து உளறிக் கொட்டுவது நல்லதல்ல.

“நல்ல குணங்களை வளர்த்து, சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவர்கள் மட்டுமே, சிறந்த அலுவலர்களாகச் செயல்பட முடியும்” என்பதால், நேர்முகத்தேர்வு கேள்விகள் பல்வேறு விதமாக அமையும். ‘நேர்முகத்தேர்வில் எல்லா தரப்பு தகவல்களையும் போட்டியாளர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்’ என நேர்முகத்தேர்வு அலுவலர்கள் எண்ணுவதில்லை. ஆனால், அதேவேளையில் ‘அழுத்தமான சூழலில்கூட நிதானமாக பிரச்னைகளைக் கையாண்டு, தீர்வுகாணும் திறன் படைத்தவர்களாகப் போட்டியாளர்கள் இருக்க வேண்டும்’ என்பதில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.

அதுமட்டுமல்லாமல், குழு உறுப்பினர்களை வழிநடத்திச் செல்லும் தலைவர்களாகவும், உலக மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகளைத் தெரிந்தவர்களாகவும், தேசியப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் திறன் படைத்தவர்களாகவும் போட்டி யாளர்கள் இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

பொதுவாகத் தனிநபர் தகவல் கேள்வித்தாளில் [PIQ] போட்டியாளர் குறித்துக் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வில் கேள்விகள் இடம்பெறும். இதனால், இந்தக் கேள்விகளுக்கான பதிலை எழுதிக் கொடுக்கும்போது மிக அதிக கவனத்தோடு போட்டியாளர்கள் செயல்பட வேண்டும்.

போட்டியாளர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் ஆசிரியர்கள், உடன்படித்த மாணவர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் போன்றோர்களிடம் போட்டியாளரின் “சமூக உறவுகள் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கிறது?” என்பதை மதிப்பீடு செய்யும் வகையில் நேர்முகத்தேர்வுக் கேள்விகள் அமையும். குறிப்பாக - குடும்பப் பின்னணி, கல்வி பின்னணி, என்.சி.சி., விளையாட்டு, பொழுது போக்கு, இதர தகுதிகள், பொதுஅறிவு போன்ற பகுதிகளிலும் அதிக கேள்விகள் இடம்பெறும். புத்திக்கூர்மையைத் தீர்மானிக்கும் வகையிலும் கேள்விகள் இடம்பெறலாம்.

நேர்முகத்தேர்வுக் கேள்விகள் நேர்முகத் தேர்வின்போது பலவிதக் கேள்விகள் கேட்கப்படும். அவற்றை -
1. ஆரம்பநிலை கேள்விகள் (Introduction Questions)
2. வழக்கமான கேள்விகள் (Usual Questions)
3. சமூகப் பிரச்னைக் கேள்விகள் (Social Problem Questions)
4. தொழில்நுட்பக் கேள்விகள் (Technical Questions) - என 4 முக்கிய பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1. ஆரம்பநிலைக் கேள்விகள் (Introduction Questions)
‘ஆரம்பநிலைக் கேள்விகள்’ என்பது போட்டியாளர் நேர்முகத்தேர்வுக்கு வந்தவுடன் கேட்கப்படும் ‘தொடக்கக் கேள்விகள்’  ஆகும். நேர்முகத்தேர்வில், முதலில் போட்டியாளர் பற்றிய சில அடிப்படையான கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்வி களெல்லாம் ‘போட்டியாளர் கொடுத்த தகவல்களெல்லாம் சரியானவைதானா?’ என்பதை உறுதி செய்யும் வகையில் அமையும். இதனை நேர்முகத்தேர்வின் ‘அடிப்படைக் கேள்விகள்’ (Basic Questions) என்றும் குறிப்பிடுவார்கள். மேலும், புதிய சூழலில் போட்டியாளருக்கு ஏற்படும் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு ஏற்றவாறு நேர்முகத்தேர்வு அலுவலர் கேள்விகளை அமைத்துக்கொள்வார்.
உதாரணமாக -

* What is your name and the meaning of the name?
* Tell us about yourself?
* Who are your friends? What do you like most in them?
* Is your latest hobby different from the childhood?
* What is your favorite hobby? Why?
* Who is your favorite best teacher and why?
* Among your friends to whom do you share your personal things?
* Mr. Ramesh, you have cleared the written test. Will you please tell us how many months did you prepare for it?

மேலே குறிப்பிட்ட கேள்விகள் போட்டி யாளரின் பதற்றத்தை நீக்கி அமைதி நிலைக்குக் கொண்டுவரும் கேள்விகள் என்பதால், இதனை ‘அமைதிநிலைக் கேள்விகள்’ (Calm Down Questions) என்றும் அழைப்பார்கள். இதற்கு ‘சுதந்திர உணர்வுக் கேள்விகள்’ (Feel Free Questions) என்றும் இன்னொரு பெயர் உண்டு.

2. வழக்கமான கேள்விகள் (Usual Questions)
வழக்கமான கேள்விகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை -
(அ) அனல் பறக்கும் கேள்விகள் (Rapid Fire Questions)
(ஆ) பதற்றநிலைக் கேள்விகள் (Stress Questions)  - ஆகியவை ஆகும்.

(அ) அனல்பறக்கும் கேள்விகள் (Rapid Fire Questions)
நேர்முகத்தேர்வில் ஏராளமான எளிய கேள்விகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு போட்டியாளரிடம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, போட்டியாளரின் சிந்தனையைத் தூண்டுவார்கள். இப்படி தொடர் கேள்விகளால் துளைத்தெடுக்கும் கேள்விகளை ‘விரைவு அனல்பறக்கும் கேள்விகள்’ (Rapid Fire Questions) என அழைப்பார்கள். பொதுவாக, 10 முதல் 15 கேள்விகள் இவ்வகைக் கேள்விகளில் அடங்கும். இதன்மூலம், நேர்முகத்தேர்வு அலுவலர் போட்டியாளரைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளவும், அவர் அளிக்கும் தகவல் சரிதானா? என்பதை அறிந்துகொள்ளவும் இயலும்.

இவ்வகைக் கேள்விகளில், போட்டியாளரின் கல்வித் தகுதி பற்றியும், அவரைப்பற்றிப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதைப் பற்றி யும், பொழுதுபோக்கு, ஆர்வம், இதர தகுதிகள், விளையாட்டு போன்றவைகள் பற்றியும் கேள்விகள் இடம்பெறும். ஒரே நேரத்தில் மிக வேகமாக இந்தக் கேள்விகள் போட்டியாளரிடம் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உதாரணமாக-

* Tell me any 10 recent National and World events of last 3 months?
* Why do you want to join in Defence Forces?
* What are your goals in life?
* What are your outside interests?
* What was the toughest decision you ever have to make?
* Where do you in five years from now?
* Why should we hire you?

போன்ற பல கேள்விகள் கேட்கப்படலாம்.

(ஆ) பதற்றநிலைக் கேள்விகள் (Stress Questions)
போட்டியாளரிடம் பதற்றமான சூழலை உருவாக்கி, அந்தப் பதற்றமான சூழலில் (Stressful Conditions) போட்டியாளர் இயல்பாகச் செயல்படுகிறாரா? அல்லது பதற்றத்தோடு செயல்படுகிறாரா? என்பதைக் கூர்ந்து கவனிப்பார்கள். இவ்வாறு போட்டி யாளரின் உண்மையான ஆளுமைத் தன்மையை அறிந்துகொள்ள உதவும் கேள்விகளைப் ‘பதற்றநிலைக் கேள்விகள்’ (Stress Questions) என அழைப்பார்கள். இதன்மூலம் போட்டியாளரிடம் ‘அலுவலருக்குத் தேவையான பண்புகள்’ (Officer’s Like Quality) [OLQ] இருக்கிறதா? என்பதையும் மதிப்பீடு செய்வார்கள்.

இவ்வகை நேர்முகத்தேர்வில், போட்டி யாளரிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல கேள்விகளைக் கேட்பார்கள். விசாரணை செய்யும் அதிகாரியைப்போல அதிகாரக் குரலில் தொடர்பில்லாத கேள்விகளையும் (Unrelated Questions) கேட்பார்கள். எரிச்சலை உருவாக்கும் கேள்விகளும் இதில் அடங்கும்.

நேர்முகத் தேர்வு அலுவலர் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைப் போட்டியாளரிடம் கேட்டால், போட்டியாளருக்கு நிச்சயம் எரிச்சல் வரும். அதேபோல், ‘இதுகூட உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்று கேட்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்டு, போட்டியாளரை நிலைதடுமாறச் செய்யவும் நேர்முகத்தேர்வு அலுவலர்கள் முயற்சி செய்வார்கள்.
உதாரணமாக-

* If you are not selected in Defence Force then what will you do?
* What is your good and bad qualities? And which quality you would like to improve upon on?
* Can you work under pressure?

போன்ற கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய கேள்விகள் நேர்முகத்தேர்வில் இடம்பெறும்போது ‘நிலைதடுமாறச் செய்யும் கேள்விகள்’ இவை என்பதைப் போட்டியாளர்கள் புரிந்துகொண்டு நேர்முகத்தேர்வைச் சந்திக்க வேண்டும். பொதுவாக, ஒரு போட்டியாளர் இயல்பாக இருக்கும்போது கேள்விகள் கேட்டால் நிதானமாக அவர் பதில் சொல்வார். ஆனால், பதற்றமான சூழலை உருவாக்கும் நிலையில்கூட ஒருவர் நிதானமாகப் பதில் தந்தால், அவரது ‘ஆளுமை’ (Personality) மிகச்சிறந்ததாகக் கருதப்படும்.

இதனால், நேர்முகத்தேர்வு பற்றிய வீணான பயங்களை ஏற்படுத்திக்கொண்டு, பதற்றப்பட்டு செயல்படுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. பொறுமையுடன் தேர்வுக்கான சிறந்த தயாரிப்புப் பணியில் ஈடுபட்டால், இந்த நேர்முகத்தேர்வில் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெறலாம். எந்தச் சூழலிலும் நிதானமாக நடந்துகொள்ளும் போட்டியாளரை நேர்முகத்தேர்வு அலுவலர்கள் விருப்பத்துடன் தேர்வு செய்வார்கள். சமூகப் பிரச்னைக் கேள்விகள், தொழில்நுட்பக் கேள்விகள் பற்றியெல்லாம் அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்