விருப்பமும் மரியாதையும் கலந்ததே சுயமதிப்பு!

8/23/2017 12:10:42 PM

விருப்பமும் மரியாதையும் கலந்ததே சுயமதிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உடல்... மனம்... ஈகோ! - 25

சில நேரங்களில் நடந்து முடிந்தவற்றைத் திரும்பிப் பார்க்காமல், சந்தேகப்படாமல், கேள்வி கேட்காமல் நகர்ந்துபோய்க்கொண்டேயிருக்க வேண்டும்
- ஈகோ மொழி

ஈகோவால் ஏற்படும் சுயமதிப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? அதற்கு முதலில் சுயமதிப்பு உண்டாவதன் அடிப்படையைத் தெரிந்துகொள்வது அவசியம். சுயமதிப்பின் தன்மைக்கு மரியாதை & விருப்பம் என்று இரண்டு விஷயங்கள் அடிப்படையாக அமைகிறது. மரியாதைக்கும் விருப்பத்திற்குமான அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் குழப்பிக்கொள்ளவார்கள். உதாரணமாக, ஈகோவின் அடிப்படை நிலைகளில் ஒன்றான ‘நான் மதிப்பானவன், நீ மதிப்பற்றவன்’ என்ற மனநிலை கொண்டவர்களிடம், அவர்கள்  கீழ் பணியாற்றுபவர்கள் ‘மரியாதை‘ செலுத்துவார்கள் அல்லது  நடிப்பார்கள்.

அதாவது, காலை அலுவலகம் வந்ததும் தேடிச் சென்று ‘குட்மார்னிங் சார்…!’ என்பார்கள். ஒரு தொழிலாளி முதலாளி மீது காட்டும் மரியாதையில் விருப்பம் கலந்திருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை. ஒரு கட்டாயத்திற்காகவோ, வேலையின் அவசியத்திற்காகவோ இருக்கலாம். அதை விருப்பத்துடன் வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. அது தனி மனிதருக்கானதே இல்லை.

வகிக்கும் பதவிக்காக காட்டப்படும் மரியாதை என்ற புரிதல் அவசியம். அதேநேரம், அதற்கு நேர் எதிர் நிலையான ‘நான் மதிப்பற்றவன், நீ மதிப்பானவன்‘ என்ற  ஈகோ நிலையைக் கொண்டவர்கள் மீது பலரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக, உறவிலும் ஸ்தானத்திலும், அந்தஸ்திலும் பெரியவர்கள் முன், வயது குறைந்தவர்களின் ஈகோ நிலை இப்படி இருக்கும்.

பெரியவர்கள் வந்தால் பணிவாக எழுந்து நிற்பது, வணங்குவது, மடக்கிக் கட்டியிருந்த வேட்டியை தாழ்த்திக்கொள்வது என்று பணிவான செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். அந்த வெளிப்பாட்டைக் காண்பவர்களுக்கு விருப்பம் அதிகரிக்கும். எப்போதும் விருப்பம் வேறு, மரியாதை வேறு. இவை இரண்டும் கலந்து உருவாவதுதான் சுயமதிப்பு. விருப்பத்திற்குள் மரியாதை கலந்தால் விருப்பம் குறைவதையும், மரியாதைக்குள் விருப்பம் கலந்தால் மரியாதை தாழ்ந்துபோவதையும் அனுபவரீதியாக பார்க்க முடியும்.

மரியாதை-விருப்பம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்து பாதிப்படையாமல் சரிசமமாக இருக்கும் உறவுகளே ஆரோக்கியமான உறவாக பரிணமிக்க முடியும். ஈகோவால் உருவாகும் ஆளுமையின் வெளிப்பாட்டிற்கு அடிப்படையான ‘சுயமதிப்பை’ உருவாக்கிக் கொள்ளும்போது, மற்றவரின் விருப்ப அளவும் மரியாதையின் அளவும் சமமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

அபரிமிதமான மரியாதையின் வெளிப்பாடு விரும்பத்தகாத மனிதராக மாற்றிவிடும். சுயமதிப்பு அதிகம் கொண்டிருந்தால் யாரும் நெருங்கிப்பழக முன் வரமாட்டார்கள். சுயமதிப்பு குறைந்திருந்தாலும் பலரும் உதாசீனப்படுத்தி பழக முன்வரமாட்டார்கள். இடைப்பட்ட நிலையில் இருப்பதே இன்பம். ஈகோ பலூன் சுயமதிப்பு, ஒரு மனிதனை தனிமனித அறம் விலகும் சூழ்நிலைகளிலிருந்து முழுமையாகக் காக்கும் வல்லமை நிறைந்தது. சுயமதிப்பின் அளவு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை ஊதப்பட்ட பலூனின் அளவை வைத்து புரிந்துகொள்ளலாம்.
 
அதை ஈகோ பலூன் நிலை என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக ஊதப்பட்ட பலூன்கள் 1. பெரிதாக ஊதப்பட்ட பலூன் 2. சிறிதாக ஊதப்பட்ட பலூன் 3. சரியாக ஊதப்பட்ட பலூன் என்று மூன்று வடிவங்களில் இருப்பதைப் பார்க்கலாம்.

1. பெரிதாக ஊதப்பட்ட பலூன்
ஈகோ பலூனில் சிலர் அளவுக்கு அதிகமாகக் காற்றை (சுயமதிப்பை) நிறைத்துவிடுவார்கள். இதனால் ஏற்படும் (வீக்க)பாதிப்புகளைக் கண்டு புலம்பிக் கொண்டே யிருப்பார்கள். ‘நான் வர்றேன், சின்னதா ஒரு வணக்கம் கூட சொல்லல….! நான் எது சொன்னாலும் அதுக்கு எதிராவே பேசறா….!

ஒரு போன்கூட பண்ணமாட்டேங்கறா..!’ - என்று சின்னச் சின்ன விஷயங்களையும் மனதில் வலியோடு சுமந்துகொண்டே இருப்பார்கள். நிமிடத்துக்கு நிமிடம் மூடு மாறக்கூடியவர்களாகவும், மூடு-அவுட்  ஆகக்கூடியவர்களாவும் இருப்பார்கள். தங்களின் சுயமதிப்பின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அடுத்தவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்பார்கள். எப்போதும் அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட ஈகோ பலூன் எந்த ஒரு சிறு உரசலுக்கும் உடையக்கூடிய சாத்தியம் நிறைந்தது. இந்த நிலை விரும்பத்தக்கதுமில்லை / நியாயமானதுமில்லை

2. சிறிதாக ஊதப்பட்ட பலூன்
ஒரு வெறுமையின் காரணமாகவோ, பற்றற்ற நிலையின் காரணமாகவோ சிலர் ஈகோ பலூனில் காற்றை குறைவாக நிரப்புவார்கள், சுயமதிப்பை குறைத்துக் கொள்வார்கள்.

* அவன் என்னை கண்டபடி திட்டிட்டான்…போறான் விடு
* நியாயமா அந்தப் பதவி உயர்வு எனக்குத்தான் வந்திருக்கணும்…. பரவாயில்ல
* அவன் என்னை ஏமாத்திட்டான்னு தெரியுது… என்ன பண்ண?

என்று சுயமதிப்பின் அடிப்படைக்கே பங்கம் வரும் சூழலில்கூட கவலைப்படாமல் இருப்பார்கள். அதை தவறு என்று எண்ணமாட்டார்கள். சகித்துக்கொண்டும், அமைதி யாக ஏற்றுக்கொண்டும் இருப்பார்கள். இதனால் மனம் அடிப்படையாக ஏற்கவேண்டிய கர்வத்தையும், அதனால் ஏற்படும் வளர்ச்சியும் தடைபடும் சூழலிலும், மற்றவர்களின் உதாசீனத்தால் பெறுக்கித் தள்ளப்பட்ட ‘குப்பை’க்கு இணையான நிலையில் இருந்தாலும் அதைச் சகித்துக் கொண்டவர்களாக இருப்பார்கள். அடிப்படை உரிமைக்கு பங்கம் வரும்போது கூட குரல் தராமல் ‘சொரணை‘யற்றவர்களாக இருப்பார்கள். இந்த நிலையும் விரும்பக் கூடியதும் இல்லை/ நியாயமானதும் இல்லை

3. சரியாக ஊதப்பட்ட பலூன்
ஒரு பலூன் ஊதப்படாத நிலையில் இருக்கும்போதே அதில் எந்த அளவுக்கு காற்றை நிரப்ப வேண்டும் என்பதை சிலர் தெரிந்து வைத்தருப்பார்கள். அவர்கள் மனதில் வைத்திருக்கும் வடிவ அளவிற்கு ஏற்றவாறே காற்றை நிரப்புவார்கள். சுயமதிப்பை நிறைக்கும்போதும், முக்கியமான அம்சங்களை எல்லாம் கவனமாக நுழைப்பதோடு, தேவையற்ற விஷயங்களை எல்லாம் நீக்கியும் விடுவார்கள். சுயமதிப்பு சரியான அளவில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்வார்கள்.

* என்ன தைரியம் இருந்தா, நீ இப்படி சொல்வே…?
* அப்படி சொல்லாத, இது என் உரிமை,அதை நான் விட்டுத்தரமாட்டேன்…
* அவனுக்கு விருப்பம் இருந்தா வந்து பேசட்டும், இல்லைன்னா போகட்டும்…- என்று சுலபமாக அணுகுவார்கள். எந்த விஷயத்திற்கும் கலங்கமாட்டார்கள். அதேநேரம், தனிமனித உரிமைக்குக் குரல் தரத் தயங்கவும் மாட்டார்கள். இதனால் இவர்களது சுயமதிப்பு காயப்படவே செய்யாது. எப்போதும் சந்தோஷமான மனநிலை கொண்டவர்களாக, Peace of mind நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் பெரிய விஷயங்களான அநீதி, சுரண்டல், எக்ஸ்பிளாய்டேஷன் ஏற்படும்போதெல்லாம் அதைப் பயப்படாமல் எதிர்த்து நிற்பார்கள். அப்போதும் கூட பதற்றப்படாமல் இருப்பார்கள். இதுவே நியாயமான, ஆரோக்கியமான சுயமதிப்பு நிலை. நிதானமான மனநிலைதான் நீடித்த சந்தோஷத்திற்கு வழிவகை செய்யக்கூடியது. இதைத்தான் ‘தானத்தில் சிறந்தது நிதானம்’ என்ற பொன்மொழி வழியுறுத்திச் சொல்கிறது.

- தொடரும்

குரு சிஷ்யன் கதை

உங்கள் ஊரில் மனிதர்கள் எப்படி?
குரு ஆசிரமத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் வந்து, “ஐயா… நான் வெளியூரிலிருந்து வருகிறேன். இந்த ஊரில் ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த ஊரில் மனிதர்கள் எப்படி?” என்றார். வெளியூர்க்காரரைப் பார்த்த குரு, “எப்படி என்றால்? எதைப்பற்றி கேட்கிறீர்கள்?” என்றார்.

வெளியூர்க்காரர், “இல்லை மனிதர்களின் சுபாவம் எப்படி என்று கேட்டேன்” என்றார். “அப்படியா, உன் ஊரில் மனிதர்களின் சுபாவம் எப்படி?” என்று மறு கேள்வி கேட்டார் குரு. வந்தவன் சலித்தபடி, “அதை ஏன் கேட்கிறீர்கள்… அங்கிருக்கும் மனிதர்கள் மிகவும் முரடர்கள், கோபக்காரர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள்…” என்றார். உடனே குரு, “இங்கிருப்பவர்களும் அப்படித்தான்’’ என்றார்.

“நன்றி ஐயா… நல்ல காலம்… முன்பே சொன்னீர்கள். எனக்கு இந்த ஊர் வேண்டாம். நான் வருகிறேன்” என்றபடி அங்கிருந்து சென்றான்.
சிறிது நேரத்தில் வேறொருவன் வந்தான். இவனும் குருவிடம் ஊரிலுள்ள மனிதர்கள் எப்படி என்றான். குருவும் பதிலுக்கு அவன் ஊரிலுள்ள மனிதர்கள் எப்படி என்றார். வந்தவன், “ஐயா எங்கள் ஊரில் மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். யாரையும் மனமறிந்து ஏமாற்றமாட்டார்கள். ஆத்மார்த்தமாய் உதவக்கூடியவர்கள். மொத்தத்தில் நல்லவர்கள்” என்றான்.

“இங்கிருப்பவர்களும் அப்படித்தான்” என்றார் குரு. வந்தவன் மகிழ்ந்து, “நல்லது நான் இங்கேயே என் வியாபாரத்தைத்எv தொடங்குகிறேன்” என்றான். இதைக் கவனித்த சிஷ்யன், “என்ன குருவே… இருவருக்கும் ஒரேபதிலைச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்டான். சிஷ்யனைப் பார்த்த குரு, “உண்மைதானே? இந்த உலகம் சின்னச் சின்ன கூறுகளால் அமைக்கப்பட்டது.

அதேபோல் மனிதர்களும் சிறு சிறு உணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டவர்கள். நாம் இந்த உலகை எப்படி பார்க்கிறோமோ அதுபோலத்தான் அது நமக்கு காட்சியளிக்கும். அதேபோல் மனிதர்களும், அவர்களது உணர்ச்சிகளையும், குணங்களையும் எப்படிப் பார்க்கிறோமோ அதுபோலவே  அவர்கள் தோற்றமளிப்பார்கள். அதனால்தான் இருவருக்கும் ஒரே பதிலைச் சொன்னேன்” என்றார். சிஷ்யன் புரிந்தபடி தலையசைத்து, “நீங்கள் சொல்வது சரிதான் குருவே!” என்றான்.