சுருங்கி விரியும் சூரியன்

9/1/2017 5:45:30 PM

சுருங்கி விரியும் சூரியன்

அறிவியல் ஆயிரம் - 11

ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சூரியன் சுருங்கி விரிகிறது என்பதை விஞ்ஞானிகள் சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமியை மேலோடு, மென் இடை மண்டலம், கருவம் என்று மூன்று மண்டலங்களாகப் பிரித்திருப்பதைப் போல சூரியனை நான்கு மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள். 1,70,000 கிலோ மீட்டர் உள்ள சூரியனின் மையப்பகுதி கருவம். அணு வெடிப்பு போன்ற அணுக்கரு வினைகள் இதில்தான் நிகழ்கின்றன.

சூரியனில் மிக அதிக அளவு நிறைந்திருக்கும் ஹைட்ரஜன் ஒவ்வொரு வினாடியும், அணுக்கரு இணைவால் ஹீலியமாக மாறி பெருமளவு வெப்ப ஆற்றல் உற்பத்தியாகிறது. சூரியன் பல கோடி ஆண்டுகளுக்கு வெப்பத்தை அள்ளித்தரும் என்றாலும், அது தன் ஆயுளில் பாதியை நிறைவு செய்துவிட்டது. பூமியைச் சுற்றி வளிமண்டலம் இருப்பது போல, சூரியனைச்சுற்றியும் வளி மண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒளி மண்டலம். இந்த ஒளி மண்டலம் சூரியனுக்கு மட்டுமே ஸ்பெஷல். சூரியனிலிருந்து நமக்குக் கிடைக்கிற கதிர் வீச்சுகள் எல்லாம் இங்கிருந்தே வருகின்றன.

சூரியக் குடும்பத்தின் மையத்திலுள்ள சூரியன் நிலையாகவும், பிற கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றி வருவதாகவும் படிக்கிறோம். சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மையக்கோட்டுப் பகுதியில் 25 நாட்களையும், துருவப் பகுதியில் 34 நாட்களையும் எடுத்துக் கொள்கிறது. அண்ட மையத்தைச் சுற்றி வர 23 கோடி ஆண்டுகளாவதை காஸ்மிக் ஆண்டு என்கிறார்கள்.  

சூரியனைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சிக்கு சூரிய கிரகணம், சூரியக் கரும்புள்ளிகள், புற ஊதாக்கதிர்கள் உதவுகின்றன. இந்த ஆராய்ச்சிகள் மூலமாகத்தான் சூரியன் சுருங்கி விரிவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சூரியனின் புறப்பரப்பு சுமார் 6000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. அதன் மையமான கருவத்தின் வெப்பநிலை ‘2’ கோடி டிகிரி செல்சியஸ். இந்த வெப்பநிலையில் எந்த ஒரு பொருளும் ப்ளாஸ்மா என்ற மின்ம நிலையிலேயே இருக்கும்.

சூரியனில் வெப்பம், கதிர்வீச்சு, சலனம், கடத்தல் ஆகியவற்றின் மூலம். கருவத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்படுகிறது. கதிர்வீச்சு மண்டலம் கருவத்திலிருந்து வெப்பத்தை உள்வாங்கி மூன்றாவது மண்டலமான வெப்பச்சலன மண்டலப் பகுதியில் உமிழும் இந்த நிகழ்வு பிற வெப்ப இயக்கங்களும், ப்ளாஸ்மா நிலையிலிருக்கும் சூரியனைச் சுருங்கி விரியச்செய்கின்றன.

- ஆதலையூர் சூரியகுமார்