போட்டியிடும் அனைவரும் வெற்றியை ருசிக்க விரும்புகிறார்கள்!

9/6/2017 1:02:46 PM

போட்டியிடும் அனைவரும் வெற்றியை ருசிக்க விரும்புகிறார்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

யாருடன் பழகுகிறாயோ, அப்படியே நீயும் இருப்பாய்  பெல்ஜிய பழமொழி
  - ஈகோ மொழி

உலகில் சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பங்களே இல்லை. அந்த அளவுக்குச் சண்டைகள் மனிதர்களின் வாழ்வுடன் கலந்தே இருக்கிறது. குடும்பத்தில் மாத்திரமல்ல… நண்பர்களுக்குள், அலுவலகத்தில், சமூகத்தில், நகரத்தில், நாடுகளுக்கு மத்தியில் என்று எல்லா இடங்களிலும் சண்டைகளின் முகங்கள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. நாகரிகம் எத்தனை வளர்ந்திருந்தாலும், சண்டை மட்டும் தீராமல் தொடர்ந்துகொண்டே யிருக்கிறது.   சண்டையைப் பார்க்காத, சண்டைக்குள் சிக்காத மனிதர்களே இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் சண்டைகளைச் சந்தித்த வண்ணமே இருக்கிறார்கள் என்றாலும், அவற்றைத் தொடர் பிரச்னையாக மாற்றாமல், பெரிய சிக்கலுக்கு வழிவகை செய்யாமல் இருப்பதால்தான் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.

ஈகோ நிர்வாகத்தையும், அதன் தன்மைகளையும், அதைச் சரிவர நிர்வகிப்பதால் உண்டாகும் பலன்களையும் (முந்தைய அத்தியாயங்களில்) பார்த்தோம். ஈகோவை சரிவர நிர்வகிக்காமல் போனால் (EGO Mis Management)  என்ன ஆகும்? தவறுகள் எப்போதுமே மோசமான பின்விளைவுகளைத் தரக்கூடியவைதான். அது ஈகோ விஷயத்தில் எப்படி என்பதை ஒரு உதாரணக் கதைகொண்டு அணுகலாம். அப்பா ஐ.பி.எஸ். அதிகாரி. மகன் பி.காம் பட்டதாரி. மகன் யூ.பி.எஸ்.சி. பரிட்சை எழுதி தன்னைப்போல் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது அப்பாவின் ஆசை, கனவு, லட்சியம். ஆனால், மகனுக்கோ அதில் சிறிதும் விருப்பமில்லை.

அவனுக்கு எம்.பி.ஏ. முடித்து தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆகவேண்டும் என்று ஆசை. அப்பாவுக்கும் மகனுக்கும் எப்போதும் வாக்குவாதம்தான். தன் விருப்பம் பற்றி மகன் சீரியஸாக கூற, அப்பா அதிர்ச்சியடைந்தார். அதுவரை ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்றே நினைத்திருந்தவருக்கு, மகன் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலிருந்து மகனிடம் அதிகாரத் தொனியில் மிரட்டலாகப் பேசத் தொடங்கினார் (சோறு போடாத/பாக்கெட் மணியை கட் பண்ணு). ஆனாலும், மகன் தன் கருத்தில் உறுதியாக நின்றிருந்தான்.

அப்பாவுக்கும் மகனுக்குமான வாக்குவாதங்கள் மெல்ல சண்டைகளாக மாறத்தொடங்கியது. மகன் கவலையே படாமல் மேற்படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கி வந்தான். அது அப்பாவைக் கோபப்படுத்தியது. பிசினஸ் செய்தால் உண்டாகும் சிக்கல் களைப் பட்டியலிட்டார். பதிலுக்கு மகன் அவர் சம்பாதிக்கும் ‘விதத்தையும், அதிகாரியாக ‘அடிபணியும்’ தருணங்களையும் சுட்டிக்காட்டி தனக்கு Government Servant ஆக இருக்க விருப்பமில்லை என்றான். பேச்சுக்களும், எதிர்பேச்சுக்களும் பெரிய சண்டைகளாக உருவெடுத்தது. அதிலிருந்து அப்பா எப்போதும் கோபப்படக்கூடியவராக மாறிப்போனார். அதுவே அவரை எதுவும் ‘செய்ய இயலாத‘ (Helpless) நிலைக்குத்தள்ளியது.

ஒருகட்டத்தில் அப்பா மகன் மீது கை ஓங்க, மகன் அவர் கைகளைப்பிடித்து முறுக்கி கீழே இறக்கினான். அன்றுதான் அப்பா தன் வாழ்க்கையில் முதன் முறையாக மகனிடம் தோல்வியைச் சந்தித்தார். தன்னால் தன் மகனை வெல்ல முடியாது என்று புரிந்த அதே நேரம், அவரால் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எதையாவது செய்து மகன் மனதை மாற்றி தான் ‘வெற்றி’ பெற்றுவிட வேண்டும் என்பதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார்.

ஆனால், அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. அப்பாவுக்குள் எழுந்த ஏமாற்றமான மனநிலை தொடர, அவர் மனச்சோர்வு (Depression) கொண்டவராக மாறிப்போனார். அந்த மனநிலை அவரை அலுவலகத்திலும் பாதித்தது. அலுவலகத்தில் எந்த ஒரு சிறு தவறுக்கும் அவர் தன்னைத்தானே குறை சொல்லிக்கொள்பவராக மாறிப்போனார். இதன் பலனாக சாதாரண மனச்சோர்வு கொண்ட மனிதராக இருந்தவர் தீவிர மனச்சோர்வு கொண்டவரானார். அது மேலும் வலுப்பெற்று மனஅழுத்தம் கொண்டவராக மாற்றியது. அது முற்றி, நிலைதடுமாற வைக்கும் ‘பதற்ற’ (Tension)நிலைக்கு தள்ளியது.

பதற்றம் ஒரு மௌனக் கொலை யாளி. உடல்நிலை, மனநிலை இரண்டையும் ஒரே நேரத்தில் சிதைக்கக்கூடியது. நாட்கள் நகர நகர அப்பாவிடம் தொற்றிக் கொண்ட பதற்றம் அவரை ஒரு தீவிர மனநோயாளியாக்கி அவரை இறந்து போகவும் செய்தது. இப்போது ஒரே ஒரு கேள்விதான். சூழ்நிலையைக் கையாண்ட விதம் தவறு என்பது ஒருபுறம் இருந்தாலும், தவறின் புள்ளி எது..? ‘பேச்சைக் கேட்கமாட்டேன்’ என்று மகன் காட்டிய சிறிய அவமரியாதையை, பக்குவமாய் கையாளத் தெரியாமல், அதை ஊதி பெரிதாக்கிய தந்தையிடம்தான் தவறின் ஊற்றுக்கண் இருக்கிறது. எல்லாம் அந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது.

அடிப்படையில் ஈகோவை சரிவர நிர்வகிக்கத் தவறுவதால்தான் விபரீதங்கள் ஏற்படவே செய்கிறது. ஈகோ உரசல் என்பது மிகச் சிறிய தீப்பொறிதான். ஆனால், அது கிளப்பும் நெருப்பு அலை மிகப் பெரியது. ஆளையே விழுங்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. மனிதர்கள் பெரும்பாலும் சச்சரவுகளைக் கையாளும்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில்தான் அணுகுகிறார்கள். அதனால்தான் அது பெரியதாகி, சூழ்நிலையை வெற்றியா? தோல்வியா? என்ற நிலைக்குக் கொண்டு நிறுத்துகிறது.

வாக்குவாதங்களாகட்டும், கருத்து மோதல்களாகட்டும், அதைக் கையாளும் மனிதன் தன்தரப்பு வெற்றி பெற வேண்டும் என்று உணர்ச்சி வேகத்துடனேயே மோதுகிறான். வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது தவறில்லைதான், ஆனால், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறித்தனம்தான் கூடாது. தோல்வியை ஏற்க இயலாது போகும்போது ஏமாற்றமான மனநிலையே எட்டிப்பார்க்கிறது. ஏமாற்றமான மனநிலை மனச்சோர்வை ஏற்படுத்துகிறது, பின் அது மனஅழுத்தத்தில் கொண்டு சேர்த்து, பதற்றத்தில் நிறைவடைகிறது.

எந்த ஒரு போட்டியிலும் ஒருவர் வென்று மற்றொருவர் தோற்கத்தான் வேண்டும். அதுதான் நியதி. அதுதெரிந்தும் போட்டியிடும் அனைவரும் வெற்றியை ருசிக்க விரும்புகிறார்களே தவிர, தோல்வியை ஏற்கும் பக்குவத்தைப் பழகுவதே இல்லை. எல்லா போட்டி நிலைகளிலும் ஈகோவின் பங்களிப்புதான் பிரதானமாக இருக்கிறது.

அங்கே ஈகோ காயப்படும்போது, அதைச் சரிவர நிர்வகிக்கத் தெரியாதவர்களுக்குத்தான் பெரிய பாதிப்புகள் வந்து சேர்கின்றன. ஆகவேதான் எந்த ஒரு சூழலிலும் ஈகோவை திறம்படக் கையாண்டு, சரியாக நிர்வகித்தல் மிகவும் அவசியமாகிறது. உயிரினங்களுக்கான உணவு அதனதன் உருவத்திற்கு ஏற்றபடி கையளவும் வாயளவுமே இருக்கவேண்டும் என்பார்கள். ஈகோவும் அப்படித்தான். உணவை மட்டுமல்ல, ஈகோவையும் ஒவ்வொருவரும் அவர்களுக்கானதை அவர்கள்தான் விழுங்கிக்கொள்ள வேண்டும்.

-  தொடரும்