வெள்ளியில் உயிர் வாழ முடியுமா?

9/11/2017 11:59:33 AM

வெள்ளியில் உயிர் வாழ முடியுமா?

அறிவியல் ஆயிரம் - 12

சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள் வெள்ளி. சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒவ்வொரு நொடியும் அணுக்கரு இணைவால் ஹீலியமாக மாறுகிறது. இதனால் வெளிப்படும் வெப்ப ஆற்றல் சூரியனை நெருப்புப் பிழம்பாக்கி, வெப்ப ஆற்றல் மூலம் பூமிக்கு ஒளியை வாரி வழங்குகிறது. இச்சூரியனின் ஒளியை இரவில் வாங்கிப் பிரதிபலிக்கிறது சந்திரன்.

ஆனால் இன்னொரு பூமி என்று அழைக்கப்படுகிற வெள்ளியில் ஹைட்ரஜனும், ஹீலியமும் இல்லை. பிறகெப்படி ஒளிர்கிறது? வெள்ளியிலுள்ள கார்பன்டை ஆக்சைட் படலம் மீது சூரியக்கதிர்கள் படுவதால், வெள்ளியின் நிலப்பரப்பு சூடாகிறது. ஆனால் வெள்ளியின் புறப்பரப்பு ஈர்த்த வெப்பக் கதிர்களை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. இதற்கு “பசுமை வீடு பாதிப்பு” (Green House Effect) என்று பெயர். இந்தப் பசுமை வீடு பாதிப்பினால் பூமி போலவே வெள்ளியிலும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சமீபத்தில் தகவலின்படி வெள்ளியின் வெப்பநிலை 500 டிகிரி செல்சியஸ். வெப்பநிலையோடு அங்கு வீசும் சூறைக்காற்றின் வேகம்  மணிக்குச் சுமார் 400 கி.மீ. இக்காற்றில் கந்தக அமிலம் கரைந்துள்ளது என்பது இன்னொரு ஆசிட் ஆபத்து. அதிவெப்பம், ஆசிட் காற்று மட்டுமல்ல வெள்ளியில் உயிர் வாழ முடியாத சூழலுக்கு இன்னொரு காரணம், வெள்ளியின் உயர் அழுத்தம்.

வெள்ளியின் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைட் வாயு அதிகம். பூமியின் வளிமண்டல அழுத்தத்தை விட வெள்ளிக் கோளில் காற்றழுத்தம் 50 மடங்கு. வெள்ளியைப் பற்றி இன்னுமொரு ஆச்சரியமான தகவல். வெள்ளிக்கோளில் இரவிலும், பகலிலும் ஒரே வெப்பநிலைதான்.

காற்று அதிகமான வேகத்தில் வீசுவதால் வெப்பம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மிக வேகமாகக் கடத்தப்படுவதால்தான் இந்நிலைமை. வெள்ளியில் இரவு, பகல் ஏற்பட 247 நாட்கள் ஆகும். சரி வெள்ளிக் கோள் ஏன் ஒளிர்கிறது? வெள்ளியைச் சூழ்ந்துள்ள வெண்ணிற மேகங்கள் சூரியனின் ஒளியை எதிரொளிப்பதால், அது பளபளப்பாக ஒளிர்கிறது.

ஆதலையூர் சூர்யகுமார்