டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் M.Sc., Ph.D. மாணவர் சேர்க்கை!

10/9/2017 12:17:51 PM

டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் M.Sc., Ph.D. மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்க!

டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனம் (Tata Institute of Fundamental Research) மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் இடம் பெற்றிருக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி மற்றும் அமைப்பு அறிவியல் பாடங்களில் முதுநிலை அறிவியல் (M.Sc), ஒருங்கிணைந்த முனைவர் (Integrated M.Sc., Ph.D) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப் படிப்புகளில் 2018ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

பள்ளிகள் மற்றும் மையங்கள்: டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனம், மும்பை வளாகத்தில் கணிதம், இயற்கை அறிவியல்கள், தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் (Technology and Computer Science) எனும் துறைகளிலான பட்டதாரிப் பள்ளிகளையும், பெங்களூருவில் பயன்படும் கணக்கியல் மையம் (Centre for Applicable Mathematics), பன்னாட்டுக் கோட்பாட்டு அறிவியல் மையம் (International Centre for Theoretical Sciences), தேசிய உயிரியல் அறிவியல் மையம் (National Centre for Biological Sciences) எனும் மூன்று மையங்களையும், மும்பையில் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education), புனேயில் தேசிய வானொலி வானியற்பியல் மையம் (National Centre for Radio Astrophysics), ஐதராபாத்தில் பல்துறை அறிவியல் மையம் (Centre for Interdisciplinary Sciences) எனும் மையங்களையும் கொண்டிருக்கிறது.கல்வித்தகுதி: மேற்காணும் பள்ளிகளிலும், மையங்களிலும் இடம் பெற்றிருக்கும்  படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கல்வித்தகுதியினை அட்டவணையில் பார்ப்போம்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் படிப்புகளில் சேர்க்கை பெற விரும்புவோர் http://univ.tifr.res.in/gs2018/ எனும் இணைய தளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது உயிரியல் படிப்பிற்கு பெங்களூருவில் இருக்கும் தேசிய உயிரியல் அறிவியல் மையத்திலும், பிற படிப்புகளுக்கு மும்பையிலுள்ள இக்கல்வி நிறுவன அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி அனுப்பி வைக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2017.

விண்ணப்பக் கட்டணம்: மேற்காணும் படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் ஆண்கள் ரூ.600ம் பெண்கள் ரூ.100ம் என விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 18.10.2017.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்களாக இருப்பின், ஏதாவதொரு பாரத வங்கி கிளையில் (State Bank of India) ஆண்கள் ரூ.650ம் பெண்கள் ரூ.100ம் விண்ணப்பக் கட்டணத்தினை உயிரியல் படிப்புகளுக்கு “National Centre for Biological Science” எனும் பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து “Admissions Section, National Centre for Biological Sciences, UAS-GKVK Campus, Bellary Road, Bangalore 560065” எனும் முகவரிக்கும், பிற படிப்புகளுக்கு “Tata Institute of Fundamental Research” எனும் பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து “Homi Bhabha Centre for Science Education, Tata Institute of Fundamental Research, V.N. Purav Marg, Mankhurd, Mumbai 400 088” எனும் முகவரிக்கும் விண்ணப்பத்துடன் சேர்த்து 20.10.2017 ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு: இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் 23 இடங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை (Hall Ticket) 10.11.2017 முதல் மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து மையங்களிலும் 10.12.2017 அன்று நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். நுழைவுத்தேர்வு முடிவுகள் 31.1.2018 அன்று மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை: நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். பிப்ரவரி மாத இறுதி வாரத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. நேர்காணல் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிக்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு 2018 ஆகஸ்ட் மாதத்திலிருந்து வகுப்புகள் தொடங்கும். இப்படிப்புகளுக்கான கூடுதல் தகவல்களை அறிய http://univ.tifr.res.in/gs2018/  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இணை நுழைவுத்தேர்வு
டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனம் நடத்தும் உயிரியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, இந்தியாவிலுள்ள சில உயிரியல் தொடர்புடைய படிப்புகளைக் கொண்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான உயிரியல் மற்றும் பல்துறை அறிவியல் பட்டதாரிப் படிப்பு களுக்கான இணை நுழைவுத்தேர்வு (Joint Graduate Entrance Examination for Biology and Interdisciplinary Life Sciences (JGEEBILS)) என்றும் அழைக்கப்படுகிறது.

போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருக்கும் Indian Institute of Science Education and Research (IISER), ஐதராபாத்திலிருக்கும் Centre for Cellular and Molecular Biology, ஐதராபாத்திலிருக்கும் Centre for DNA Fingerprinting and Diagnostics, மானேசரிலிருக்கும் National Brain Research Centre, பெங்களூருவிலிருக்கும் National Centre for Biological Sciences, புதுடெல்லியிலிருக்கும் National Institute of Immunology, பெங்களூரு விலிருக்கும் Institute for Stem Cell Biology and Regenerative Medicine, புனேயிலிருக்கும் National Centre for Cell Science, Pune, மும்பையிலிருக்கும் Advanced Centre for Treatment, Research and Education in Cancer (ACTREC), புவனேஸ்வரிலிருக்கும் National Institute of Science Education and Research, பரீதாபாத்திலிருக்கும் Regional Centre for Biotechnology போன்ற கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவன மாணவர் சேர்க்கைக்கு இந்த நுழைவுத்தேர்வையே  தகுதித் தேர்வாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், இக்கல்வி நிறுவனச் சேர்க்கைக்குத் தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

GATE மாணவர்கள் சேர்க்கை டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) கணினி மற்றும் அமைப்பு அறிவியல் (Computer & Systems Sciences) படிப்பில் முனைவர் பட்டத்திற்கு இந்நிறுவனத்தின் நுழைவுத்தேர்வு தவிர, பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering - GATE) மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதற்கான தனி அறிவிப்பு 5.12.2017 அன்று இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

- தேனி மு.சுப்பிரமணி

X