அவமானம் மன நிம்மதியைக் கெடுக்கும்..!

11/21/2017 12:57:30 PM

அவமானம் மன நிம்மதியைக் கெடுக்கும்..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உளவியல் தொடர் 31

உடல்... மனம்... ஈகோ!

ஒரே படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கிறோம், ஆனால் வேறு வேறு கனவு காண்கிறோம்-ஆங்கிலப் பொன்மொழி
- ஈகோ மொழி

கத்தி... துப்பாக்கி... வெடிகுண்டு... அணு ஆயுதங்களைவிட மனிதர்களையும், மனித சமூகத்தையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும், சக்திவாய்ந்த ஆயுதம் எது தெரியுமா? அவமானம்தான் அது. வார்த்தைகளாலும், செய்கைகளாலும், ஏற்படுத்தப்படும் அவமானம்தான் மனிதர்களைச் சிதைத்துக் கொல்லும் சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்படுகிறது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் அவமானத்தின் ருசியைச் சுவைத்தவண்ணமே இருக்கிறார்கள். அவமானத்தைச் சந்தித்திராத, அதன் கொடுஞ்சுவையை அறிந்திராத மனிதர்கள் எங்குமே இல்லை. அந்த அளவுக்கு அவமானம் மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தபடி இருக்கிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்? என்பதை வைத்துத்தான் நாம் நம்மை எடை போட்டுப் பார்க்கிறோம். ஆனால், நாம் செய்ததை வைத்தே அடுத்தவர் நம்மை எடை போட்டுப் பார்க்கிறார்கள். இந்த இரண்டிற்கான இடைவெளியிலிருந்து உருவாகிறது அவமானம்.

அவமானத்தின் அளவும், அதை உணர்ச்சி நிலையோடு எதிர்கொள்ளும் விதமுமே ஈகோவின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது என்றாலும், ஈகோ தனது நடுநிலையினின்றும் தவறும் தருணங்கள் எல்லாம் அவமானத்தைச் சந்திக்கும் பொழுதுகளாகவே இருக்கின்றன.

அவமானம் என்பது உடனடியாக உணர்ச்சி நிலையோடு கலந்து உணர்ச்சி வசப்படவைத்து, பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அவமானத்தைச் சந்திக்கும் நபர் தனது சுயமதிப்பிற்கும், சுயமரியாதைக்கும் பாதகம் ஏற்பட்டதாக எண்ணி, தான் மதிப்பற்றவராக மாறிவிட்டதாக நம்பத் தொடங்கிவிடுவதால்தான் அது உடனடியான பதற்றத்தை ஏற்படுத்துகிறது.  
அடிப்படையில் அவமானம் ஒரு சம்பவம்தான். மனித மனம் அதை உணர்ச்சிகளுடன் நேரடியாக இணைத்துக்கொள்வதால், அது சக்திவாய்ந்த ஆயுதமாக மாறிப்போகிறது. சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அவரவர் நிலைக்கு ஏற்ப ஒரு அவமானகரமான சம்பவத்தை எதிர்கொண்டபடியே இருக்கிறார்கள் என்றாலும், நடக்கும் ஒரு சம்பவத்தை அவமானகரமானதாக பாவிப்பது என்பது ஆளுக்கு ஆள் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது.

அவமானங்களைச் சந்திப்பவர் அனைவருமே ஆழமான மனவலி கொண்டவராக இருப்பார்கள். ‘அவமானப்பட்டோம்’ என்ற எண்ணமே மன அமைதியைக் கெடுக்கத் தொடங்கிவிடுகிறது. அது ஏற்படுத்தும் காயங்களும், வடுக்களும் எளிதில் மறைவதே இல்லை.

அவமானத்தின் அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. ஒருவர் இயல்பாக, சாதாரணமாகச் சொல்வது மற்றவருக்கு அவமானகரமான சொல்லாகவும், செயலாகவும் இருக்கக்கூடும். சிலர் பெயரைச் சொல்லி அழைப்பது, ‘நீ…வா…போ’ என்று ஒருமையில் அழைப்பது, அவன்/இவன் என்று ஏக வசனத்தில கூப்பிடுவது எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், வேறு சிலருக்கு அது பெரிய அவச்சொல்… அவமானமான செயல். எப்படி இருந்தபோதும் அவமானத்தை அவமானமாக மனம் ஏற்கும்போது உண்டாகும் பாதிப்பு களின்றும் தற்காத்துக் கொள்வதே அவமானங்களின் நிர்வாகத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அதைக்கொண்டே ஈகோ நிர்வாகத்தைத் திறம்பட கையாள முடியும். அவமானத்தின் பாதிப்புகளுக்கு ஆளாகாமல், அதன் உரசல்களை எப்படிக் குறைத்துக்கொள்வது என்பதே சரியான நிர்வாக அணுகுமுறையாக இருக்க வேண்டும். அது சாத்தியமா என்றால், முடியும் என்பதுதான் பதில்.

வாழ்வில் அவமானங்கள் எதிர்ப்படும் நேரத்தில், அதன் பாதிப்புகள் மனதில் ஏற்படாத வண்ணம் இருப்பது அவரவர் கைகளில்தான் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி இருந்தால் வாழ்க்கை இனிமையானதாக, சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். அவமானங்களை நிர்வகிப்பது பற்றி அறிய… ஓர்  உதாரண சம்பவத்தோடு பார்க்கலாம்சுந்தருக்கு வயது 29. செகந்திராபாத்தில் ME ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, பெங்களூருவில் ஒரு சர்வதேச டயர் கம்பெனியில் சீனியர் எக்ஸிக்யூட்டிவாகப் பணியாற்றுகிறான்.

அவன் பணிபுரியும் கம்பெனி ஒரு பெரிய புராஜெக்ட்டுடன் வெளிநாட்டில் கிளை பரப்ப இருக்கிறது. அதற்கு சுந்தர் தனது மொத்தத் திறமையையும் கொட்டி ஒரு புராஜெக்ட்டை வடிவமைத்துத் தந்திருக்கிறான்.

அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து, அதன் புராஜெக்ட் லீடராக ஜெர்மனி செல்லவேண்டும் என்ற கனவோடு இருக்கிறான். அப்போது திடீரென்று அலுவலக நிர்வாகம் புது புராஜெக்ட்டிற்கு அவனது நண்பனும், சக பணியாளனுமான கண்ணனுக்கு வாய்ப்பை வழங்கிவிடுகிறது.

கண்ணனுக்கு வாய்ப்பு வழங்கிய செய்தியை முதலில் சுந்தரால் நம்பவே முடியவில்லை. பெருத்த ஏமாற்றமடைந்தான். அவனால் அந்தக் கசப்புச் செய்தியை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. அதோடு நிற்காமல், அறிவிப்பு வந்த மதியம் சுந்தரின் புராஜெக்ட் ரிப்போர்ட் அவனிடமே திருப்பித் தரப்பட்டது.

அதில் சில குறிப்புகள் அடிக்கோடிடப்பட்டு அதற்கான பதிலை எழுதி, புராஜெக்ட்டை திருத்தி Resubmit செய்யுமாறு சொல்லப்பட்டிருந்தது. தனது புராஜெக்ட் மீதான அந்த விமர்சனக் குறிப்பைப் படித்ததும் சுந்தருக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. அவனால் நிலைகொண்டு இருக்கவே முடியவில்லை.

முகத்தில் அறைபட்டவன் போல் உணர்ந்தான். ‘பெரிய அவமானம்…’ ‘பெரிய அவமானம்…’ என்று புலம்பிக்கொண்டே இருந்தான், சட்டென்று வேலையை விட்டு நின்றுவிடலாமா என்று உடனடியாக யோசித்தான்.சுந்தரின் வாழ்வில் நடந்தது போலான சம்பவங்கள்தான் பெரும்பாலானவர்களுடைய வாழ்விலும் நடக்கிறது. சூழ்நிலைகளும், சம்பவங்களும் வேறுபட்டாலும், அதன் பலனாக எதிர்படும் அவமானங்கள் ஒரே மாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. அவமானத்தைச் சந்திக்கும் புள்ளியில், பதற்றமடைந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உடனடியான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.

முடிவுகளால் ஏற்படும் விபரீதங்கள் ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்களால் மனநிம்மதி உடனடியாகக் குலைந்துபோவதுதான் பரிதாபம். இங்கு (சுந்தர் விஷயத்தைப்போல்) ஒரு விஷயத்தை மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பதற்றமான தருணங்களில் வேலையை விட்டு நின்று விடலாமா என்று சுந்தர் முடிவெடுத்ததைப் போலத்தான் பெரும்பாலானவர் முடிவெடுக்கிறார்கள். பதற்றமான, உணர்ச்சிவசப்பட்ட, வேகம் நிறைந்த அந்த நிமிடங்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது நிர்வாகம்.

அது அவமானமோ இல்லையோ… அந்தச் சம்பவத்தைச் சந்தித்தாயிற்று, அது அவமானம்தான் என்று மனம் நம்பத்தொடங்கியாயிற்று…. அடுத்து என்ன செய்வது? இந்தக் கேள்விதான் முக்கியம்.அவமானங்களைச் சந்திக்கும் தருணத்தில், இந்தக் கேள்விக்கான பதில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை என்பதே உளவியலாளர்களின் முடிவாக இருக்கிறது. அதற்கு முதலில் அந்தச் சம்பவத்திலிருந்து வெளிவந்து, அந்தச் சம்பவத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

உன்னிப்பாகக் கவனிப்பது எப்படி?

அடுத்த இதழில் பார்ப்போம்…

குரு சிஷ்யன் கதை

முழு மனிதனை உருவாக்கும் விழிப்புணர்வு!

காலைப் பொழுது... சூரியன் உதயமாகி பறவைகளின் ஓசை மனதை மகிழ்வித்தது. குருவும் சிஷ்யனும் தோட்டத்தில் மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது சிஷ்யன் கேட்டான், “குருவே, இன்றைய தேதியில் எதற்கெடுத்தாலும் எல்லோரும் விழிப்புணர்வு தேவை விழிப்புணர்வு தேவை என்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள். விழிப்புணர்வு எப்படி இருக்கவேண்டும்?” என்றான்.

அதைக் கேட்டதும் குரு மலர்களைப் பறிப்பதை நிறுத்தி புன்னகைத்தபடி சிஷ்யனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, “விழிப்புணர்வு விழிப்புணர்வாக இருக்க வேண்டும். அப்படித்தான் அது புத்தர் பெருமானின் வாழ்வில் நடந்தது” என்றார்.சட்டென்று புரியாமல் சிஷ்யன் நிமிர்ந்து நின்று கவனித்தான்...

“போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின், புத்தர் ஒரு ஊரின் தெருவழியே நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு தெருவில் வசிப்பவர், புத்தபிரானின் பூரணமான அமைதி ததும்பும் முகத்தைப் பார்த்து, அவரை நிறுத்தி, “நீங்கள் யார்? கடவுளால் அனுப்பப்பட்ட தூதரா? அல்லது கடவுளா?” என்றார் வியப்பு மேலிட.உடனே அவரருகே நின்ற புத்தர், “இல்லை நண்பா” என்றார்.

“ஓஓஓ… அப்ப நீ… நீ… மந்திரவாதியா? சூனியக்காரனா?” என்று கேட்டார். அதை கேட்ட புத்தர் அமைதியாக “இல்லை நண்பா” என்றே மீண்டும் பதிலளித்தார். தொடர்ந்து வினா எழுப்பிய அந்த நபர் “வெறும் மனிதர்தானா?” என்றார். அதற்கும் புத்தர் அமைதியாக, “அதுவும் இல்லை நண்பா” என்றார்.

அந்த மனிதர் சிறிது யோசித்துவிட்டு, “நல்லது. அப்படியானால் நீங்கள் யார்தான்?” என்றார்.“நான் விழிப்புணர்வு கொண்டவன் அவ்வளவுதான் நண்பா” என்றார் புத்தர்” என்று குரு சொல்லி நிறுத்த, சிஷ்யன் குழப்பத்தோடு புன்னகைத்தான்.

இதைப் புரிந்துகொண்ட குரு, “அதாவது, சாதாரண மனிதனுக்கும், விழிப்புணர்வுகொண்டவனுக்கும் விழிப்புணர்வைத் தாண்டி எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. ஆனால், விழிப்புணர்வுதான் ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. நீயும் முழு மனிதனாக மலர விரும்பினால், விழிப்புணர்வைத் துணைகொள்” என்று சொல்லிவிட்டு மலர்களைப் பறிக்க தொடங்கினார்.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு

X