போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பொதுவான வழிமுறைகள்..!

12/4/2017 2:24:16 PM

போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பொதுவான வழிமுறைகள்..!

ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் பட்டதாரிகள் அனைவரும் அரசுப் பணியையே எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் பெரும்பாலானோர் பணி நிரந்தரம் மற்றும் வாழ்க்கைத் தரத்துக்காக அரசுப் பணிகளில் சேர்வதைக் கனவாக கொண்டிருக்கின்றனர். ஆனாலும், இன்றைய சூழ்நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் போட்டிகள் அதிகம் இருப்பதுபோல், போட்டித்தேர்வுகளும் அதிகமாகிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை.

வருகின்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் TNPSC-CCSE IV, IBPS, SSC, RRB தேர்வுகள் அந்தந்தத் துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிறுவனம் என அனைத்தும் இன்றைக்கு போட்டித்தேர்வு நடத்தியே ஆட்களை வேலைக்குச் சேர்க்கின்றன. இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என விளக்குகிறார் ஆபீஸர்ஸ் ஐஏஎஸ் அகாடெமி இயக்குநர் இஸ்ரவேல் ஜெபசிங்.

அதிகாலையில் எழுந்து படித்தால் அடிமனதில் அழுத்தமாகப் பதியும். தினமும் அதிகாலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். படிப்பதை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்க்க வேண்டும். இப்படி எழுதிப் பார்ப்பது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.
 
அன்றைய பாடங்களை அன்றே திட்டமிட்டுப் படித்து முடித்துவிடுங்கள். நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காகத் தயார் செய்துகொள்ளுங்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்பது பின்னாளில் சுமையாகிப் போய்விடும். கூடுதலாக, விடுமுறை நாட்களில் அனைத்துப் பாடங்களையும் ஒருமுறை படித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒரே  பாடங்களைப் படிக்காதீர்கள். அப்படிச் செய்தால் சோர்வு உண்டாகும். ஆகவே, ஒரு பாடம் படித்ததும் வேறு  பாடங்களை எடுத்துப் படியுங்கள். பாடங்களைப் புரிந்து படியுங்கள். மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்துகொள்ளலாம். மற்ற பாடங்களை தெளிவுபடுத்தியே படித்து அறிந்துகொள்ள வேண்டும்.

நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள். அப்போதுதான் உடலும் மனமும் நன்றாக வேலை செய்யும். நொறுக்குத் தீனிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். நண்பர்களுடன் உரையாடும்போது பாடங்கள் குறித்து அதிகமாகப் பேச வேண்டும். அந்தப் பேச்சு பொது அறிவை வளர்க்கப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

இதற்காக நீங்கள் தினசரி செய்தித்தாள் படிக்க வேண்டும். அதுகுறித்து நண்பர்களுடன் விவாதித்து அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் படித்த தலைப்புகளின் வழியே சிறு குறிப்புகள் தயாரித்து தேர்வுக்கு முன்பு படித்துவிட்டுப் போக வேண்டும். பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பதோடு எழுதியும் பார்ப்பது அவசியம். தேர்வு நாட்களில் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் கண்விழித்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஒவ்வொருநாளும் குறைந்தது ஐந்து மணி நேரமாவது கண்டிப்பாகத் தூங்க வேண்டும். இரவு படித்து முடித்து படுக்கைக்குச் செல்லும் முன்பு படித்ததை நினைவுக்குக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன்பு வினாத்தாளை முதலில் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் முதலில் பதில் அளிக்க வேண்டும். வினா எண், பக்க எண் போன்றவற்றைச் சரியாக எழுதிவிட வேண்டும்.

ஆன்லைன் தேர்வு என்றால் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்வை முழு கவனத்தோடு எழுத வேண்டும். தேர்வு எழுதும்போது விடையளிப்பதில் மட்டுமே கவனமிருக்க வேண்டும். சுற்றிலும் பார்த்துக் கவனத்தை திசை திருப்பிவிடக் கூடாது. விடைத்தாள் திருத்துபவர்கள் மனதில் நம் விடைத்தாள்கள் நல்ல ஒரு நிலையை ஏற்படுத்த நம் எழுத்துகளை அழகாகவும், போதுமான இடைவெளிவிட்டு தலைப்புகள் தனியே தெரியும்படி அடிக்கோடிட்டும் இருந்தால் நன்றாக இருக்கும்.

விடைத்தாளில் வினாக்களுக்குப் படங்கள் அவசியமெனில் படங்களை வரைந்து தேவையான வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான குறிப்புகளையும் எழுதுங்கள். போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றிபெற்றவர்கள் கையாண்ட குறிப்புகளை எடுத்துக்கொண்டு அதனைப் பின்பற்றினால் நாமும் வெற்றிபெற வாய்ப்புகள் உண்டு.

எந்த போட்டித் தேர்வு எழுத போகிறீர்களோ அந்தத் தேர்வின் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட வினாக்களை எடுத்து பயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஏனென்றால் அந்த வினாக்களில் இருந்துகூட பெரும்பாலான வினாக்கள் மீண்டும் கேட்கப்படலாம். எந்தத் தேர்வாக இருந்தாலும் பதற்றப்படாமல், நிதானமாக தெளிவான தைரியத்துடன் முழு ஈடுபாட்டோடு எழுதினால் வெற்றி நிச்சயம்.’’ தமிழக அரசுப் பணி, வங்கிப் பணி, ரயில்வே பணி, மத்திய அரசுப் பணி எதுவாக இருப்பினும் மேலே சொல்லப்பட்டிருக்கும் அடிப்படையான வழிமுறைகளை சரியாக கையாண்டால் உங்கள் வெற்றி உறுதி! வாழ்த்துகள்!

- தோ.திருத்துவராஜ்

X