எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிவோம்!

12/11/2017 11:53:06 AM

எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிவோம்!

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

உளவியல் தொடர் 32

உடல்... மனம்... ஈகோ!

நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய்த்தான் இருக்கும் - சேகுவேரா
  -ஈகோ மொழி

அவமானத்தைச் சந்திக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் என்ன செய்வது, எப்படி எதிர்கொள்வது என்பது புரியாமல் தடுமாறித்தான் போகிறார்கள். அந்த நேரத்தில், அதிலிருந்து வெளிவர அந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனிப்பதை Rational Behaviour Theraphy என்று குறிப்பிடுகிறார்கள்.

அவமானம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, உணர்ச்சி வசப்பட்ட நிலையில், நம்மையறியாமல் நாம் நமக்குள் பேசிக்கொள்கிறோம். இதைக் கேட்க விசித்திரமாக இருக்கும். ஆனால், யதார்த்தத்தில் அப்படித்தான் நடக்கிறது. எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம். அந்த நேரத்தில் என்ன பேசுகிறோம் என்பதுதான் முக்கியம்.

ஈகோவைப் பொறுத்தவரை, எந்த ஒரு சம்பவமும் அனுபவம், நம்பிக்கை, விளைவு என்று மூன்று கட்டங்களாகப் பிரிந்து, பின் ஒன்றாகிறது. அதுதான் ஒரு சூழ்நிலையைச் சந்தோஷமானதாகவோ, சங்கடமானதாகவோ மாற்றுகிறது. ஒரு சம்பவம் நிகழும்போது எப்படி வடிவமெடுக்கிறது என்பதை உதாரணக்கதையைக் கொண்டே பார்க்கலாம்.

‘சுந்தர் தான் எதிர்பார்த்த புராஜெக்ட் தனது நண்பனான  கண்ணனுக்குச் சென்றதை அறிந்தான்’  இந்த விஷயத்தில் இதுதான் அவன் எதிர்கொண்ட முதல் அனுபவம். அதைக் கேள்விப்பட்டவுடனேயே அவனுள் உணர்ச்சி அலைகள் பொங்கத் தொடங்கிவிட்டன.

‘கண்ணனுக்கா இந்த புராஜெக்ட்? அவனை தேர்ந்தெடுத்து, என்னால முடியாதுன்னு நினைச்சுட்டாங்களா? நான் திறமை இல்லாதவனாயிட்டனா? என்னை நம்பவெச்சு கழுத்தறுத்துட்டாங்களே? என்னை முட்டாள்னு நினைச்சுட்டாங்களா? என்னோட M.E. அறிவும், அனுபவமும் ஒண்ணுமில்லாம ஆயிடுச்சா?

அசிங்கமா இருக்கு! தோத்துப் போயிட்ட மாதிரி இருக்கு! வெட்கமா இருக்கு! நான் செய்யவேண்டிய வேலையை, கண்ணன் அருமையா செய்யப்போறானா? நான் அவனைவிட திறமையா செய்வேன்றது எப்படி தெரியாமப் போச்சு..?’ என்று அலை அலையாக உணர்ச்சிகளுடன், சுந்தர் தனக்குள் பேசிக்கொண்டான். இப்படியான பேச்சுக்களைத்தான் பலரும் தங்களை அறியாமல் பேசிக்கொள்கிறார்கள்.

இந்த வகையான பேச்சுதான் நம்பிக்கை அமைப்பாக மாறுகிறது. இது இரண்டாவது பகுதி. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சுந்தர், தனக்குள் பேசிக்கொள்ளும்போது, ‘திறமை இல்லாதவன்’, ‘முட்டாள்’, ‘அசிங்கம், வெட்கம், ஒண்ணுமில்லாதவன்’ என்று எதிர்மறையாகவே செல்லிக்கொள்கிறான். இந்த எதிர்மறை எண்ணம் ஏமாற்றத்தை மேலும் கசப்பாக்குகிறது.

அடுத்ததாக சுந்தர், தனது அலுவலகம் புராஜெக்டுடன் தந்த குறிப்பைப் படித்துப் பார்க்கிறான். படிக்கப் படிக்க, ‘என்ன முட்டாள்தனமா கேட்கறாங்க? இவங்களுக்கு முழுசா தெரியுமோ? இதே கேள்வியை எல்லார்ட்டேயும் கேப்பார்களா? இதைப் படிச்சுப்பார்த்துட்டு முதலாளி எப்படி ரொம்ப கேவலமா சிரிச்சிருப்பாரு?’ என்று சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் சந்தேகத்தின் அடிப்படையிலும், விசாரித்து அறிந்துகொள்ள இயலாத வகையிலும், சூழ்நிலையின் ஏமாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இப்படி எதிர்மறையான எண்ணங்கள் அனைத்தும் வார்த்தைகளால் கலந்து அவமானகரமான சம்பவமாக எதிர்ப்படுகிறது. ஆதலால், எப்படிப்பட்ட சூழலிலும் முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய வேண்டும்.எதிர்பார்ப்பு இடறல்களால் ஏற்படும் தூண்டுதல்கள் ஒருபுறம், அவநம்பிக்கைச் சொற்களால் உருவாகும் நம்பிக்கை ஒருபுறம், உணர்ச்சிகளுடன் இணைந்து பெருத்த ஏமாற்றமாக விளைவது - அவமானமாக மாறுகிறது. இந்தச் சம்பவத்தில் சுந்தரை அவமானப்படுத்தியது யார்?

சுந்தருக்குத் தனது எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்தது என்றாலும், அவன் மனம் சமநிலையினின்றும் தவறி, தன்னைப்பற்றி தனக்குள் எதிர்மறையாகச் சொல்லிக் கொண்டதும், அதன் விளைவாகத் தான் அவமானப்படுத்தப்பட்டதாக அவனது ஈகோ முடிவுக்கு வந்ததும்தான் அடிப்படையாக இருக்கிறது.

ஒவ்வொரு சூழலை எதிர்கொள்ளும்போதும், நமக்குள் சுயபேச்சாக என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானது. சராசரியாக உணர்ச்சிகள் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் அதுமாதிரியான சூழலை எதிர்கொள்ளும்போது கொஞ்சம் கவனித்து முயன்றால் வேறு விதமாக சிந்திக்க முடியும்.

எந்த புராஜெக்ட்டிலும் சில clerical error ஏற்படுவது சகஜம்தானே? அவை திறமையைக் குறைத்துவிடுமா என்ன? சுயமதிப்பை தாழ்ந்துபோகச் செய்யுமா என்ன? முதலாளி எந்த இடத்திலும் என்னை நேரடியாய் அவமானப்படுத்தவில்லையே? தவறுகளைப் பார்த்து  சிரித்திருப்பார் என்பது என்ன நிச்சயம்?  என்று சுந்தர் சூழலைப் பக்குவமாக ஆராய்ந்திருந்தால் அறிவுப்பூர்வமான கேள்விகள் எழுந்திருக்கும்.

அப்படி அறிவார்ந்த கேள்விகளை முன்வைத்துச் சொல்லிக்கொள்ளும்போது சூழ்நிலை அமைதியாகி, அதற்கு இரையாகாமால் இருப்பதைத் தடுத்திருக்கும் எதிர் கேள்விகளைக் கேட்கும்போது மனம் உணர்ச்சிவசப்படாத நிலையில் இருப்பதை உணரலாம். சூழ்நிலையின் தன்மை புரிந்து அதன் உட்கூறுகளை அறிந்து ‘இப்படித்தானே நடந்திருக்கும்’ என்று புலனாய்வு ரீதியாக ஆராய்ந்து புரிந்துகொள்ளும்போதுதான், அறிவார்த்தமான கேள்விகள் மேலோங்கிவரும். இதுதான் முக்கியமானது. அந்தக் கேள்விகளால் கட்டமைக்கப்படுவதுதான் பிரகாசமான ஈகோவாக மாறுகிறது.

சூழ்நிலையை உன்னிப்பாக கவனிக்கும்போது, அறியவேண்டிய மற்றொன்று, வித்தியாசங்களைப் புரிந்துகொள்வது. மனிதர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் எப்போதும் விசித்திரமானவைதான். அப்படி இருக்கும்போது நடக்கும் சம்பவங்களைக் கவனிக்கும்போது யதார்த்தமான, அறிவுக்கு ஏற்புடையது எது? ஏற்க இயலாதது எது? என்பதைப் பிரித்துப் பார்த்து வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் யதார்த்தமான, அறிவுப்பூர்வமான கேள்விகளாக எதிர்ப்படும்.

சுந்தர் விஷயத்தில் அவன் யதார்த்தமான மனநிலையோடு அணுகவில்லை. அவன் தனக்குள் பேசிக்கொண்ட பேச்சுகள் யாவும் கற்பனையாகவும், கசப்பானதாகவும் இருந்தது. அவற்றை ஒருபோதும் சரிபார்க்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. அதே நேரம் சூழலை கவனித்திருந்தால், அவனுள் யதார்த்தமான கேள்விகள் கட்டமைக்கப்பட்டிருக்கும். அதுவே ஈகோவை நடுநிலையாக வைத்திருக்கும். முக்கியமாக அவமானம் ஏற்பட்டதாக எண்ணிக் கொள்ள வைத்திருக்காது.

தனிமனிதர்களுக்கு ஏற்படும் அவமானங்கள் மற்றவர்களால் ஏற்படுவதைவிட, அவர்களாகவே ஏற்படுத்திக்கொள்வதுதான் அதிகம் என்ற உண்மை புரிந்திருக்கும்.  அமைதியான மனம்தான் எப்போதும் உண்மையைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

குரு சிஷ்யன் கதை

உற்சாக பானம் குருவும் சிஷ்யனும் ஒரு வல்லத்தில் (பெரிய படகு) கடலில் பயணம் செய்துகொண்டிருந்தனர். படகு கடலுக்குள் சென்றதும், அங்கிருந்த சிப்பந்தி, எல்லோரையும் வரவேற்கும் விதமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கோப்பைகளில் ஊற்றி, வரவேற்புப் பானமாகத் தந்து உபசரித்துக்கொண்டிருந்தார்.

குருவிடமும் சிஷ்யனிடமும் வந்தவர், குருவிடம் மதுக்கோப்பையை நீட்டினார். சிஷ்யன் புன்னகைத்தபடி, “என்ன இது?” என்றான்“உற்சாக பானம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் சிப்பந்தி.சிஷ்யன் குருவைப் பார்த்தான். குரு  மறுப்பாய் தலையசைத்து, “வேண்டாம்” என்றார்.
“ஐயா, எங்கள் வல்லத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் எங்கள் முதலாளி கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் சிப்பந்தி.

குரு உடனே, “ஐயா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம்” என்றார். சிப்பந்தி விடாமல்,“உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை. கொஞ்சம் அருந்திப் பாருங்கள், பிறகு விடவேமாட்டீர்கள்” என்றார்  சிரித்தபடி.

அப்போதும் குரு ஏற்றுக்கொள்ளாமல் புன்னகைத்தார். சிப்பந்தி கடைசியாக “இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகிப் பாருங்களேன் சுவாமி” என்றார்.குரு சொன்னார், “ஐயா, உங்கள் அன்புக்கு மறுபடியும் நன்றி. நான் சுவாமி அல்ல குரு, தபசி, சிந்தனையாளன். மதுவெல்லாம் அருந்தமாட்டேன். நீங்கள் இத்தனை வலியுறுத்திச் சொல்வதால் வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள்…” என்றார்.
சிஷ்யன் ஆர்வமாகப் பார்த்தான்.

“எனக்கான மதுக்கிண்ணத்தை இந்த வல்லத்தை ஓட்டுபவரிடம் கொடுத்துவிடுங்கள், அவருக்குத்தான் உடல் அசதியாக இருக்கும், சோர்வாக இருக்கும். அவருக்குப் பயன்படும்” என்றார்.குரு அவ்வாறு சொன்னதும் “ஐயையோ, பணியில் இருப்பவர் மது அருந்தினால் என்ன ஆவது..? இதை, அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறிப்போகும். வல்லமும் அதிலிருக்கும் நாமும் விபத்துக்கு உள்ளாவோமே. நிறைய உயிர்கள் பறிபோகுமே” என்று பதறினார்.

குரு அமைதியாக, “இப்போது புரிகிறதா சகோதரா, வாழ்க்கை எனும் படகும் இப்படிப்பட்டதுதான். அவசியமில்லாத காரியங்களைச் செய்தால் புத்தி தடுமாறும், விபத்து நேரிடக்கூடும். எப்போதும் நல்ல சொற்களைக் கேட்பதும், பேசுவதும்தான் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் உற்சாக பானம்” என்றார்.சிஷ்யன் குருவைப் பார்த்து பெருமிதத்தோடு புன்னகைத்தான்!

தொடரும்

- ஸ்ரீநிவாஸ்பிரபு

X