அவமானம் வெளியிலிருந்து எழுவதில்லை!

12/19/2017 10:50:39 AM

அவமானம் வெளியிலிருந்து எழுவதில்லை!

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

உடல்... மனம்... ஈகோ!

நமது பெரியவர்கள் நமக்கு அகராதி போன்றவர்கள். அவர்களுடைய அனுபவங்களை, கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - எம்.ஜி.ஆர்.

- ஈகோ மொழி

மனிதர்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் அவமானங்களைவிட, அவர்களாகவே ஏற்படுத்திக்கொள்ளும் அவமானங்கள்தான் அதிகம். பொதுவாக அவமானங்கள் மற்றவர் உணராமல் ஏற்படுத்தும் அவமானங்கள், மற்றவர் உணர்ந்து ஏற்படுத்தும் அவமானங்கள் என்று இரண்டு வகைகளில் எதிர்ப்படுகின்றன.அவமான உணர்ச்சி நம்மைப்பற்றி நாம் என்ன நினைத்திருக்கிறோம்? என்ன மதிப்பீடுகளை வைத்திருக்கிறோம் என்பதற்கும் மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்ன மதிப்பீடுகளை வைத்திருக்கிறார்கள் என்பதற்குமான பலனாகவே அமைகிறது.

மனிதர்களில் பல பேர் தங்களைப்பற்றி உயர்வாக எண்ணிக்கொள்வதே இல்லை. எப்போதும் தாழ்த்திக்கொண்டவாறு, சுயஇறக்கம் ஏற்படும் விதமாகவே எண்ணிக்கொள்கிறார்கள். ‘நான்’ என்று வரும்போது, தொட்டால் சிணுங்கி வகையினராகவே இருக்கிறார்கள். இதனாலேயே சூழ்நிலையை உணர்ச்சிகரமாக எதிர்கொள்ளும்போது, தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் சுயபேச்சில் தங்களைக் கீழிறக்கிய வண்ணமாகவே எண்ணிக் கொள்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு அவமானம் ஏற்படக்கூடிய சூழல் ஒன்றில் ‘சுயபேச்சு’ பின்வரும் வகையில் இருப்பதைப் பார்த்திருக்கலாம்… “நான் சொல்றதை அவ கேட்கவே மாட்டேங்கிறா, அப்படின்னா எனக்கு இந்த வீட்ல மரியாதை இல்லைன்னுதானே அர்த்தம்? அத்தனை தூரம் அவனைத் தேடி அவன் வீட்டுக்கு வந்திருக்கேன், ஒரு வாய் காபி சாப்பிடறியான்னு கூட கேட்கலை.

அப்படின்னா என்னை மதிக்கலைன்னுதானே அர்த்தம்? நான் சொன்ன மாதிரி செய்யாம வேற மாதிரி செய்யறான், அப்படின்னா என்னை அவமானப்படுத்தறான்னுதானே அர்த்தம்? என்னை நேருக்கு நேர் பார்க்கறான் வணக்கம் சொல்லாம போறான், அப்படின்னா என்னை உதாசீனப்படுத்தறான்னுதானே அர்த்தம்?” என்று எதற்கும் ஒரு தவறான புரிதலோடு, தங்களைத் தாழ்த்திக்கொண்டவாறு சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்படின்னா… அதனால… என்று ஆரம்பித்து தப்புத் தப்பாகவே கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். நிஜத்தில் அந்தச் சம்பவமோ, சூழ்நிலையோ அவர்களுக்கு எதிராக அப்படி இருந்திருக்கவே செய்யாது.

ஒரு சம்பவத்தில் அதன் உண்மைத்தன்மை வெளிப்படாதவாறு இருந்தாலோ, அதன் உட்கூறுகள் கண்டறிய முடியாதவாறு இருந்தாலோ அதைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையே இல்லை, தெளிவாக, நம்பத்தகுந்த ஆதாரங்களும், சரிபார்ப்புகளும் இல்லாதபோதுதான் ‘அப்படின்னா…’-க்களும் ‘அதனால…’-க்களும் எட்டிப்பார்த்து மதிப்பில்லை…! அவமானமாயிடுச்சு…! என்று யோசிக்க வைக்கும்.

தங்களையும், தங்களுக்கான பொறுப்புணர்ச்சியையும்  நம்புபவர்களிடமும், சம்பவங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து புரிந்துகொள்பவர்களிடமும்  அவமானம் ஒருநாளும் எட்டிப்பார்ப்பதே இல்லை. காரணம், தங்களை மீறி யாராலும் தங்களை அவமானப்படுத்திவிட முடியாது என்பதை ஈகோ தெள்ளத் தெளிவாக புரிய வைத்திருக்கும்.

“உங்கள் அனுமதியின்றி யாராலும் உங்களைத் தாழ்த்திவிட முடியாது” என்ற ஆங்கிலப் பொன்மொழி குறிப்பிடுவதும் இதைத்தான். மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பேச்சாலும் எண்ணத்தாலும்தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். அவ்வாறு பேசி-சிந்திக்காமல் இருக்கும்போது, அவமானம் ஏற்பட்டதாக எண்ணிக்கொள்ளமாட்டார்கள் இல்லையா?

90% மான அவமானங்கள் யாவும், மனிதர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்பு களால் உருவாகின்றன. கற்பனையான சுயபேச்சுக்களின் வழியாகவும், அடுத்தவர்களுடைய இயல்பான நடவடிக்களையும், தற்செயலான செயல்பாடுகளையும் தவறாகப் புரிந்துகொள்வதினாலும்தான் எதிர்ப்படுகின்றன. மீதி 10% தான் மற்றவர் உணர்ந்து ஏற்படுத்துவதால் உண்டாகின்றன.

ஒருவர் உணர்ந்து மற்றவர் மனதில் அவமானகரமான காயத்தை ஏற்படுத்துவது குறைவானதாகவே இருக்கிறது. இதைத்தான் உளவியலாளர்கள் திரும்பத் திரும்ப அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறார்கள்.தேவையற்ற அநாவசியமான நெகட்டிவ்வான சிந்தனைகளையும்,  கற்பனையாக எடுத்துக்கொள்வதையும் தவிர்த்தாலே அமைதியான சந்தோஷமான மனநிலையுடன் இருக்க ஈகோ வழிவகை செய்துவிடும்.

அதே நேரம், மற்றவர் உணர்ந்து (10%) ஏற்படுத்தும் அவமானங்களை எப்படி எதிர்கொள்வது?

மிகமிகத் தெளிவாக, நம்பத் தகுந்த ஆதாரத்துடன் ஒருவர் நாம் மன வேதனை அடைய வேண்டும், நம்மை அவமானப்படுத்த வேண்டும் என நினைப்பது தெரிந்தால்… அதை மூன்று விதமாக எதிர்கொள்ளலாம்.

1.  தற்காப்புடன் இருப்பது
2.  தாக்குதலுடன் எதிர்ப்பது
3.  திடமாக நிற்பது

இவற்றின் பிரயோகம் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடியும், ஆளுக்கு ஆள் மாறக்கூடியதாகவும் இருந்தாலும், மூன்று விதமான பிரயோகங்களின்போதும், மனம் அமைதியாக இருக்கவேண்டியது மிக அவசியம். அமைதியான மனம்தான் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ள வைக்கும். தற்காப்புடன் இருப்பதுஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ஈகோ தனது நான்கு அடிப்படை நிலைகளில் ஒன்றான ‘நான் மதிப்பற்றவன், நீ மதிப்பானவன்’ என்ற நிலையில் அவமான உணர்ச்சிகளை எதிர்கொள்வதே தற்காப்புடன் இருக்கும் நிலை.

‘‘எனக்கு சண்டை போடற எண்ணம் கொஞ்சம்கூட இல்லை. யாரையும் நான் எதிரியா நினைக்க மாட்டேன். நீ என்னை பேசறியா..? பேசிட்டுப்போ… உனக்கு பதில் சொல்லி என் நிம்மதியைக் கெடுத்துக்க விருப்பமில்லை. உன் கூட சண்டை போடற நேரத்துல வேற வேலை செய்வேன்...” என்று தற்காப்பு உறுதியுடன், எதிராளியின் அவமான எண்ணத்திற்கு துளியும் சட்டை செய்யாமல் அதற்கு ஈடாகாமல், தன்னைத் தாழ்த்திக்கொண்டு, சூழலை உதாசீனப்படுத்தியவாறு இருப்பது.

இது ஒரு பின்வாங்கும் வழிமுறைதான். மனநிம்மதிக்காக எதையும் செய்யலாம் எனும்போது, பின்வாங்குவதும் ஒரு சிறந்த செயல்பாடுதான். தற்காப்பு உறுதியுடன் இருப்பதில் என்ன அபாயம் என்றால், உதாசீனப்படுத்தி கண்டும் காணாமல் இருப்பதைக் கண்டு அவமானப்படுத்துபவர் மேலும் ஆவேசமாய், உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்யும் வகையில் நடந்துகொள்ளத் தொடங்குவார்.

அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.எப்போதும் அமைதியாகச் செல்பவரை பலவீனமானவராக எண்ணி, ஆவேசமான தாக்குதலை பிரயோகிப்பது பலசாலிகளுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த பரிசு. அந்த வகையில் ‘அந்த’ மிதமிஞ்சிய வன்முறைப் பிரயோகத்தை, மனநிம்மதியின் மதிப்பை எண்ணி அமைதியாகத் தற்காப்புடன் இருப்பதுதான் அவமானங்களை அமிழ்ந்துபோகச் செய்யும்.போராட்டம் என்பது ஆயுதங்களைக் கொண்டுதான் நிகழ்த்த வேண்டுமா என்ன? மௌனமாகவும் எதிர்க்கலாம், வார்த்தைகளைக் கொண்டும் வாள் வீசலாம். எப்படி?

 - தொடரும்

குரு சிஷ்யன் கதைவாழ்வை மாற்றுவது யார்?

குருவும் சிஷ்யனும் வள்ளத்தில் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். குரு கடல் மீது பறக்கும் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், வள்ளத்தில் பயணம் செய்த சிலர் குருவிடம் வந்து வணங்கி “ஐயா எங்களுக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?” என்றனர்.
குரு திரும்பி புன்னகைத்தபடி, “கேளுங்கள்” என்றார்.

“நாங்கள் இரும்புத்தொழில் செய்துவருகிறோம். எவ்வளவு முயன்றும் தொழில் வளர்ச்சியடையவே இல்லை. எங்கள் தொழில் வளராமல் போக என்ன காரணம், எது இடையூறாக உள்ளது என்பது தெரியவே இல்லை” என்றனர். அதைக் கேட்ட குரு அமைதியாக இருந்துவி்ட்டு திரும்பப் பறவைகளைப் பார்க்கத் தொடங்கினார். குருவின் செயலைக் கண்டு வந்தவர்களும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேசாமல் இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டனர். சிஷ்யன் குருவைப் பார்த்து, “அவர்களுக்கு ஏன் குருவே எந்தப் பதிலும் சொல்லவில்லை” என்றான்.

குரு புன்னகையுடன், “அவர்களுக்கான பதில் அந்தத் தீவில் இருக்கிறது. அங்குச் சென்றதும் சொல்கிறேன்” என்றார். அவர்கள் சென்ற வள்ளம் தீவில் நின்றது. எல்லோரும் இறங்கிச் செல்ல, குரு தனியே நடந்து சென்றார்.இரும்புத் தொழிலாளர்களைத் திரும்பிப் பார்த்து, “உங்கள் தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது அந்தக் குழிக்குள் கிடக்கிறது சென்று பாருங்கள்” என்றார்.

“நம் வளர்ச்சிக்குத் தடையாக இந்தத் தீவில் என்ன இருக்கிறது? அது என்ன?” என்று யோசித்தபடியே குழியை  நோக்கிச் சென்றனர். அங்கு அந்தக் குழிக்குள் எட்டிப் பார்த்தவர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. குழிக்குள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகங்களே அதில் தெரிந்தது.

அதன் அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது. “உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, உங்களை நம்புங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

குழியைப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை நோக்கி வந்த குரு, “எவருடைய வாழ்கையையும் மற்றவர்களால் மாற்ற முடியாது. அவர்களாக நினைத்தால் மட்டுமே அவர்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும்” என்றார்.  அனைவரும் குருவின் வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்து தலையசைத்தனர். இதைப் பார்த்த சிஷ்யனும் காரணம் புரிந்தபடியே தலையசைத்துக்கொண்டே, கண்ணாடியை எட்டிப் பார்த்தான்.

ஸ்ரீநிவாஸ் பிரபு

X