மில்லி மீட்டர் குரங்கு

4/13/2018 11:52:42 AM

மில்லி மீட்டர் குரங்கு

அறிவியல் அறிவோம் - 2

இறால், கடல் வாழ் உயிரினம். இவை நாம் பெரும்பாலும் வெள்ளை, கறுப்பு மற்றும் லாப்ஸ்டர் என்று அழைக்கப்படும் மெகா சைஸ் இறால். இந்த வகையினை நாம் சாப்பிடலாம். ஆனால் பத்து மில்லி மீட்டர் நீளமேகொண்ட ஆர்டீமியா (brine shrimp) என்னும் வகை இறால் மீன்கள் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுண்டுவிரல் அளவுகூட இல்லாத இந்த இறாலுக்கு ஏன் இவ்வளவு விலை? ஆர்டீமியா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட நீர் வாழ் உயிரினம். பத்து மில்லி மீட்டர்தான் என்றாலும் வியாபாரத்தில் லட்சம், லட்சமாய்ப் பணம் கொட்டும் உயிரினம்.

ஈரானில் உள்ள உர்மியா ஏரியில்தான் இந்த ஆர்டீமியா முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள உப்புத்தன்மை அதிகம் உள்ள நீர் ஏரிகளில் இது மிகுதியாகக் காணப்படும். உப்பின் அளவு அதிகமாக உள்ள நீர்நிலைகள்தான் ஆர்டீமியாவுக்கு (brine shrimp) மிகவும் பிடித்த இடம். இந்தத் தன்மைகொண்ட நீர் நிலைகளில் மற்ற உயிரினங்களால் வாழ முடியாது. உலகிலேயே அதிக உப்புத்தன்மை உள்ள கடல் சாக்கடல் (dead sea). இங்கு உப்பின் அளவு 40 சதவீதம். மற்ற கடலின் உப்பின் அளவு 35 சதவீதம். ஆர்டீமியா 25 முதல் 250 சதவீதம் வரை உள்ள உப்பைத் தாங்கி வாழக்கூடியது. அதனால்தான் சில உயிரியல் அறிஞர்கள் இவ்விலங்கினை உப்பு இறால் என்று அழைக்கிறார்கள். கடல்குரங்கு, நீர் டிராகன் என்றும் இதற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இதன் உடல் 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தென்னங்கீற்று மாதிரி தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும். 55 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மத்திய தரைக்கடல் பகுதியில் ஆர்டீமியா வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெல்ஜியம் நாட்டில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்திலும், ஆர்டீமியா பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு தனி ஆராய்ச்சி மையமே தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த மையத்தில் 1700 விதமான, வெவ்வேறு வகையிலான ஆர்டீமியாக்கள் மற்றும் அதன் முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இந்த இறாலின் கருமுட்டைகள் தண்ணீர் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. சூழ்நிலைகள் சாதகமாக அமையும் போது முட்டையிலிருந்து குஞ்சு வெளியேறும். 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இதன் இறகுகள் வழியாகவே இது சுவாசிக்கிறது. மிகச்சிறிய ப்ளாங்க்டனை உணவாக என்றாலும், பிறந்தவுடன் தன் உடலில் உள்ள சக்தியைக்கொண்டே நீண்ட நாட்கள் இது உயிர் வாழும்.

கண்டவெளிக்குச் சில ஆர்டீமியாக்களை எடுத்துக்கொண்டு சோதனை செய்தபோது,  எந்த ஒரு பாதிப்படையாமல் இருந்தது பல அறிஞர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. எளிதாக ஊதிவிடக்கூடிய சைசில் இருந்தாலும் கதிரியக்கத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதி படைத்தவை. இதன் முட்டையிலிருந்து வெளிவரும் முதல்நிலை லார்வா, மீனுக்கு உணவாகப் பயன்படுவதால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. இந்த ஆர்டீமியாவிற்கு மூன்று கண்கள். பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதால் செல்லப் பிராணியாகப் பலர் வளர்க்கிறார்கள். எல்லாம் சரி இதற்கு ஏன் குரங்கு என்று பெயர் வைத்தார்களாம்...? இது பண்ணுகிற சேட்டைகள் அனைத்தும் குரங்குத்தனம். அத்தனையும் அழகு. அதனால் தான் ஆர்டீமியாவை செல்லமாகக் கடல்குரங்கு என்று அழைக்கிறார்கள்.

ஆதலையூர் சூரியகுமார்

X