பத்தாம் வகுப்பு படித்திருந்தால் மாலுமிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

4/13/2018 11:55:28 AM

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் மாலுமிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டு அரசின் தன்னாட்சி நிறுவனமான தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் (Tamilnadu Maritime Academy) பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஆறு மாத கால பொதுமுறை மாலுமிப் பயிற்சியினை (Pre-Sea Course for General Purpose Rating) அளித்துவருகிறது. மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்திய அரசின் கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகம் (Directorate General of Shipping) அங்கீகரித்துள்ள ஆறு மாத இருப்பிடப் பயிற்சிக்குத் (Residential Course) திருமணமாகாத ஆண்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

கல்வித்தகுதி
ஆங்கில வழியில் அளிக்கப்படும் இப்பயிற்சிக்கு
* பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் கணிதம், அறிவியலில் மொத்தம் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆங்கிலப் பாடத்தில் மட்டுமே 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
* பன்னிரண்டாம் வகுப்பில் (+2) ஏதாவதொரு பிரிவில் மொத்தம் 40% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்
(அல்லது)
* தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இரண்டு வருட காலம் ஏதாவதொரு பயிற்சியினை முடித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுத் தேர்வில் மொத்தம் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு
2-7-2018 அன்று 17 ½ வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வயது தளர்வுண்டு. வயதினை உறுதிப்படுத்த பிறப்புச் சான்றிதழ் நகலை  விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கடவுச்சீட்டு (Passport) பெற்றிருப்பதுடன் அதன் நகலும் இணைக்க வேண்டும்.

மருத்துவத் தகுதி
தேர்வு செய்யப்படுபவர்கள் வணிகக் கப்பல் சட்டம் - 2000 குறிப்பிடும் கடல் பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது. நிறப் பார்வைக் குறைபாடுடையவர்களாக இருக்கக் கூடாது. கண்களில் எந்தவிதமான குறைபாடுகளும் இருக்கக் கூடாது.

பயிற்சிக் கட்டணம்
மாணவர் சேர்க்கையின்போது ரூ.1,50,000/- (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.

பயிற்சியின் சிறப்புகள்
தேர்வு செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் கருத்தியல் வகுப்புகளும், தூத்துக்குடி, பூம்புகார் கப்பல் போக்கு வரத்து நிறுவனப் பணிமனையில் (Poompuhar Shipping Corporation Marine Workshop) தொழிற்
பயிற்சிகளும் அளிக்கப்படும்.

பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள், மும்பையிலுள்ள கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகத்தின் (Directorate General of Shipping) கீழ் இயங்கும் கடற்பணிகளுக்கான தேர்வு வாரியம் (Board of Examinations for Seafarers) நடத்தும் அகில இந்தியப் பொது நோக்க மதிப்பீட்டுப் பயிற்சிக்கான வெளியேற்றப் பயிற்சித் (All India Exit Examination for General Purpose Rating Course) தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைப் பயிற்சி நிறுவனமே செய்து தரும்.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Continuous Discharge Certificate - CDC) எனும் தகுதிச் சான்றிதழையும் பெறமுடியும். இந்தச் சான்றிதழைக்கொண்டு கடல் வழியைப் பயன்படுத்திச் செயல்படும் வணிகக் கடற்படைப் பணிகளை எளிதில் பெற முடியும். பயிற்சி நிறுவனம், இந்தியத் தேசிய கடற்பணியாளர் தரவுத்தள எண் மற்றும் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Indian National Database of Seafarers (INDOs) Number and CDC) பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும். இதற்காகக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

பயிற்சியின் நிறைவுக்குப் பின் 36 மாதங்கள் கடல்சார் பணியில் அனுபவம் பெற்ற பின்பு வெளிநாடு செல்லும் கப்பலில் இரண்டாம் துணைப் பணியாளர் எனும் அலுவலர் நிலைக்கான தேர்வுகளை எழுத முடியும். வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெறமுடியும்.

விண்ணப்பம்
www.tn.gov.in\\tnma இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை, ”Tamil Nadu Maritime Academy” எனும் பெயரில் தூத்துக்குடியில் மாற்றிக்கொள்ளக்கூடியதாக ரூ.750/-க்கான விண்ணப்பக் கட்டண, வரைவோலையினைப் (Demand Draft) இணைத்து, உறையின் மேல் “Application for admission to GPR Course to be commenced from 02.07.2018” குறிப்பிட்டு, “Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi - 628001, Tamil Nadu” முகவரிக்கு 21-04-2018 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்கவேண்டும்.

மாணவர் தேர்வு
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தூத்துக்குடியில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனியாக அழைப்புகள் அனுப்பி வைக்கப்படும். பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2-7-2018 முதல் பயிற்சிகள் தொடங்கும்.  

கூடுதல் தகவல்கள்
www.tn.gov.in\\tnma இணையதளத்தில் பயிற்சிக்கான தகவல் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்யலாம். அல்லது “Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi- 628001, Tamil Nadu” முகவரிக்கு நேரில் சென்றோ, tnma1998@gmail.com மின்னஞ்சல் அல்லது 0461 - 2320075, 2320076, 2330076 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறலாம்.

உ.தாமரைச் செல்வி

மேலும்

X