நெருப்பாய் எரியும் நிலா!

4/20/2018 12:21:24 PM

நெருப்பாய் எரியும் நிலா!

அறிவியல் அறிவோம் - 3

பவுர்ணமி அன்று நீல வானில் முழுமையாகப் பார்க்கும் போது, கண்களுக்கு மட்டும் இல்லை மனசுக்கும் குளுமையாக இருக்கும். சூரியனை வெப்பத்திற்கு ஒப்பிடுவது போல் நிலவினை குளுமைக்கு ஒப்பிடுவது வழக்கம். ஆனால் உண்மையில் நிலா வெப்பத்தை உமிழ்வது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

பூமியிலிருந்து 3,81,550 கி.மீ. தூரத்தில் சந்திரன் இருந்தபோதும் மற்ற கோள்களை ஒப்பிடுகையில் பூமிக்கு அருகே இருக்கக்கூடிய ஒரே கோள் சந்திரன். பூமியை நீள்வட்டப் பாதையில் சந்திரன் சுற்றி வருகிறது. மனிதன் காலடியெடுத்து வைத்த ஒரேயொரு வான்பொருள் சந்திரன் மட்டும் தான். பூமியின் அமைப்பில் பலவகையில் ஒத்துக் காணப்படும் கோள் சந்திரன். பூமியைப் போலவே சந்திரனுக்கும் மேல் அடுக்கு, இடையடுக்கு, மையப்பகுதி என மூன்று அடுக்குகள் உண்டு. எண்ணிக்கை அடிப்படையில்தான் பூமியின் அமைப்பை இந்த அடுக்குகள் ஒத்திருக்கின்றன. தன்மையில் இவை மாறுபட்டுள்ளன.

உதாரணத்திற்கு பூமியின் மேல் அடுக்கின் அடர்த்தியை விட சந்திரனின் மேல் அடுக்கின் அடர்த்தி அதிகம். நிலவுப் பாறைகளில் ஒரு கன மீட்டர் பாறையின் அடர்த்தி 3340 கிலோ கிராம். பூமிப் பாறைகளில் ஒரு கனமீட்டர் பாறையின் அடர்த்தி 2300 கிலோ கிராம்தான். நடு அடுக்கு, அதாவது கருவம் என்று சொல்லக்கூடிய மையத்தை பொறுத்தவரை பூமியின் அடர்த்திதான் அதிகம். ஏனெனில் பூமியின் கருவத்தில் நிக்கல் மற்றும் இரும்பு அதிகமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பூமியின் நிறையில் மூன்றில் ஒரு பங்கை ஆக்கிரமித்திருப்பது இரும்பு.

இதன் பெரும்பகுதி பூமியின் மையப்பகுதியில் உருகிய குழம்புநிலையில் காணப்படும். பூமிக்கு இருப்பது போன்ற பெரிய கருவம் சந்திரனுக்கு இல்லை
என்றாலும், சிறிய அளவில் உள்ளது. நிலவுக்கு ஒரு வளிமண்டலம் உள்ளது. இது மிக மெல்லியது. பிராணவாயுவோ, ஈரப்பதமோ நிலவில் இல்லை. ஆர்கான், நியான், ஹீலியம் போன்ற வாயுக்கள் நிலவின் வளிமண்டலத்தில் உள்ளன. நிலவின் வளிமண்டலம் சிறியதாக இருப்பதால் அங்கிருந்து வானத்தைப் பார்த்தால் கறுப்பாகத்தான் தெரியும். பகல்பொழுதில் கூட நட்சத்திரங்களைப் பார்க்க முடியும்.

நிலவில் எக்ஸ் கதிர், காமா கதிர், நிறமாலைமானிகளைக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். எனவே விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு எப்போதுமே நிலவு ஒரு சொர்க்கபூமிதான். எல்லாம் சரி. நிலா வெப்பத்தை உமிழ என்ன காரணம் ? நிலவின் நடுப்பகுதியில் பகலில் தரை வெப்பநிலை 135 டிகிரி செல்சியஸ். இரவில் மைனஸ் 170 டிகிரி செல்சியஸாக மாறிடும். இரவுக்கும் பகலுக்கும் இவ்வளவு பெரிய வேறுபாடு இருப்பது பெரிய அதிசயம். நிலவின் ஆழப்பகுதிக்குச் செல்லச்செல்ல வெப்பநிலை அதிகரிக்கும். ஆழப்பகுதியில் வெப்பம் அதிகரிக்கும்போது எந்தக் கோளும் வெப்பத்தை உமிழ்ந்தே ஆக வேண்டும். பூமியும் அப்படித்தான், வெப்பத்தை உமிழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பூமியை விட இரண்டு மடங்கு வெப்பத்தை நிலா உமிழ்கிறது. நிலவின் உட்பகுதி உலோகக் குழம்பால் நிரம்பியிருப்பதுதான் இவ்வாறு நிலா வெப்பத்தை உமிழக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆதலையூர் சூரியகுமார்

X