தற்பெருமை சுயமதிப்பைச் சிதைக்கும்..!

4/27/2018 2:31:54 PM

தற்பெருமை சுயமதிப்பைச் சிதைக்கும்..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உளவியல் தொடர் 41

உடல்... மனம்... ஈகோ!

Don’t talk about yourself; it will be done when you leave
-Wilson Mizner
  - ஈகோ மொழி

யாரும் எப்போதும் தவறாகவோ, தரக்குறைவாகவோ நடத்தப்படுவதை விரும்புவதே இல்லை. அப்படியிருக்கும்போது, மமதையோடு தவறான சொற்களைப் பயன்படுத்தினாலோ, தவறான செயல்களைச் செய்தாலோ ஈகோவின் உள்ளீடான சுயமதிப்பு குறைந்து போகத்தான் செய்யும். எந்த ஒரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்ச்செயல் நிகழ்ந்தே தீரும் என்ற நியூட்டனின் மூன்றாம் விதிதான் இதற்குக் காரணம்.

சகமனிதர்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் இருப்பதுதான் சிறப்பான மனித குணம். தவறாக நடந்துகொள்ளும் ஒவ்வொரு முறையும் அது தவறாக முடிவதை அனுபவத்தில் பார்க்கலாம். நன்னடத்தையோடு நடந்துகொள்ளும்போதுதான் தலைநிமிர்ந்து கம்பீரமாக இருக்கத் தோன்றும். தவறான சொற்களின் பிரயோகமும், தவறான நடத்தையும் சுயமதிப்பிற்குப் பங்கம் விளைவிக்கக்கூடியவை.

சுவரில் எரிந்த பந்து அதே வேகத்துடன் திரும்புவது போல், அடுத்தவர் மீது எறிந்த தவறான சொற்கள், அதே வேகத்துடன் திரும்ப வரவே செய்யும். அடுத்தவர் மீது தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்தால், அவரும் அதேபோன்ற வார்த்தைகளையே பிரயோகிக்க ஒருபோதும் தயங்கவே மாட்டார். தவறான சொற்களுடனும், தவறான நடத்தையோடும் மற்றவருடன் பழகுவது சுயமதிப்பைச் சிதைக்கவே செய்யும். பேச்சோ, செயலோ நம்மிலிருந்து தவறாக வெளிப்படுவது, திரும்ப நம்மை நோக்கிப் பாய்ந்துவரும் தோட்டாவுக்கு இணையானது. அது சுயமதிப்பைச் சிதைத்து உருக்குலைக்கவே செய்யும்.

4.கிண்டல் செய்வதுஒரு மனிதன் மீது ஆளுமை செலுத்தியவாறு ‘நீ மதிப்பற்றவன்’, ‘நான் மதிப்பானவன்’ என்பதை வெளிப்படுத்தும் விஷயத்தில் முக்கிய பங்கு வகிப்பது ‘கிண்டல்’ தொனிக்க பேசும் பேச்சுதான். இதுவும் ஈகோவின் உள்ளீடான சுயமதிப்பைச் சிதைக்கக்கூடியதுதான்.
 கேலி செய்வது வேறு, கிண்டல் செய்வது வேறு.

இரண்டுமே ஒரு மனிதனின் தவறை, அறியாமையை, முட்டாள்தனத்தைச் சுட்டிக்காட்டு வதாக இருந்தாலும், கேலி செய்வது மேலோட்டமாக இருப்பது. கிண்டல் சற்று ஆழமாக ஊடுருவக்கூடியது. தொடுவதற்கும், கிள்ளுவதற்குமான வித்தியாசத்தைப் போன்றது. தொட்டால் வலிக்காது, கிள்ளினால் வலிக்கும். கிண்டல் வலிதரக்கூடியது. உதாரணமாக, ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ தவறான ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது “ஆஹா…இது புதிய தத்துவம் 10003” என்று சொன்னால் அது- கேலி. “என்னம்மா… இப்படி சொல்றீங்களேம்மா…?” என்று (உள்அர்த்தத்துடன்) சொல்வது கிண்டல்.

கேலியான பேச்சில் கேலி செய்பவர், செய்யப்படுபவர் இருவருமே சிரித்துவிடுவார்கள். அதுவே கிண்டலில், கிண்டல் செய்பவர் மட்டுமே சிரித்துக்கொண்டிருப்பார், கிண்டலுக்கு உள்ளானவர் வருத்தப்பட்டு தலைகுனிந்திருப்பார்.  கிண்டல் செய்வதால் ஒருபோதும் ஒரு மகிழ்ச்சியான சூழல் உருவாகவே முடியாது. எந்த மனிதனும் தான் கிண்டல் செய்யப்படுவதை அனுமதிப்பதே இல்லை. அதேபோல் எல்லா மனிதர்களும் சுதந்திரத்தையும், சுதந்திர உணர்வையும் விரும்பக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். நினைத்ததைச் சுதந்திரமாகப் பேச, முடிவெடுக்க, தேர்வு செய்ய... என்று ஒவ்வொருவருக்கும் சம உரிமையுடனான சுதந்திரத்தை இயற்கை வழங்கியிருக்கிறது.

கிண்டல் செய்யப்படுகையில் அவர்களின் அந்தச் சுதந்திரம் பறிபோவதாக எண்ணுகிறார்கள். அதனால் கிண்டல் செய்பவர்கள் மீது சுயமதிப்பைக் குறைத்துக்கொள்கிறார்கள். இதனால்தான் பெரும்பாலான உறவுகளில் விரிசல்களும், கசப்புகளும் ஏற்படுகின்றன. வெளிச்சமூகத்தில் மட்டுமல்ல, வீட்டிற்குள்ளும் குடும்ப உறுப்பினர்களுக்கான spaceஐ ஆக்கிரமிக்கக்கூடாது.

அதுதான் சுயமதிப்பு சிதைவதினின்றும் காக்கும். ஈகோவின் உள்ளீடான சுயமதிப்பை முதலில்  குடும்பத்திற்குள்ளிருந்து பெறுவது நல்லது. அதுதான் வெளிச் சமூகத்தில் சுயமதிப்பைப் பரிசாக பெற்றுத்தருகிறது.5.தற்பெருமைதிடீரென்று தெரியாத ஒன்றைப்பற்றி பேசச் சொன்னால், எல்லோருக்கும் முதலில் தயக்கம்தான் மேலோங்கிவரும். ஆனால், அதிகம் தெரியாத ‘தன்’னைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால் போதும், சிலர் ‘நான் எப்படின்னா…’ என்று மணிக்கணக்காகப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். இதைத்தான் தற்பெருமை என்று குறிப்பிடுகிறார்கள்.

 எந்த ஒரு இடத்திலும் சிலர் தங்களை முன்னிலைப்படுத்தி தற்பெருமையைப் பறைசாற்றிக்கொண்டே யிருப்பார்கள். தற்பெருமையான பேச்சு சுயமதிப்பை மிகப் பெரிதாகச் சிதைக்கக்கூடியது.ஒருவன் தற்பெருமை பேசும்போது, கேட்பவர்களுக்கு முதலில் அலுப்பும், அவநம்பிக்கையும் ஏற்படும். தற்பெருமை பேசுபவர் ஏதோ மீளமுடியாத குழப்பத்தில் இருந்து பிதற்றுகிறார் என்றே எண்ணிக் கொள்வார்கள்.

‘இந்த ஓட்டு ஓட்டறான், இவன் பவுசு தெரியாதா?’ என்று எண்ணியபடி, சுயமதிப்பை குறைத்துக்கொள்வார்கள். தற்பெருமை பேசுபவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் யாருமே அவர்களையோ, அவர்களது பேச்சையோ ஒருபோதும் பாராட்டியிருக்கவே மாட்டார்கள். பேச்சு சாமர்த்தியத்தால் சிலர் நம்பும்படி தற்பெருமை பேசுவார்கள். அதுகூட சில நிமிடங்கள்தான் நீடிக்கும். தற்பெருமை பேசுகிறார் என்ற எண்ணம் எழத்தொடங்கிய மறுவிநாடியே அவர்மீது சந்தேகப் பார்வை விழத்தொடங்கிவிடும். கேட்பவரின் இதயம் மூடிக்கொள்ளும்.

 ஒரு மனிதன் மீது படியும் உதாசினம், அவனது தற்பெருமை பேச்சிலிருந்தே தொடங்குகிறது. ‘தற்பெருமை பேசுபவர்கள் தங்களைப்பற்றி சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு பேசும்போது, கையில் அழகிய வாசனை நிரம்பிய மலர்களாலான பூங்கொத்தைப் பிடித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களின் தற்பெருமைப் பேச்சை கேட்பவர்கள் பார்வையில் அவர் கையில் நாற்றமெடுக்கும் குப்பைகளை வைத்திருப்பதாகவே எண்ணிக்
கொள்வார்கள்’ என்கிறார் உளவியலாளர் ஹென்றி சீல்.

சுயதம்பட்டமோ, தற்பெருமையோ பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நம்மைப்பற்றி மற்றவர்கள்தான் உயர்வாகப் பேச வேண்டுமே தவிர, நாமாகப் பேசக்கூடாது. அதுதான் ஈகோவின் உள்ளீடான சுயமதிப்பிற்கு வலுசேர்க்கக்கூடியது. விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் என்று நம் ஊரில் ஒரு சொலவடை உண்டு. தற்பெருமைப் பேச்சு மனித உடலில் தலையை மட்டும் பெரிதாக மாற்றக்கூடியது. உடல் சிறுத்து, தலை பெரிதாக இருந்தால் அது பொருத்தமற்றதாக இருக்கும். அந்த பொருத்தமற்ற தன்மைதான் சுயமதிப்பை சிதைக்கச் செய்கிறது.சுயமதிப்பைச் சிதைக்கும் அடுத்த முக்கியமான பகுதி…. பரிகாசம். பரிகாசம் மிகவும் ஆபத்தானது. ஏன் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்…  

குரு சிஷ்யன் கதை

சொர்க்கமும்... நரகமும்!

சிஷ்யன் தோட்டத்துச் செடியில் காய்கறிகளைப் பறித்துக்கொண்டிருந்தான். அப்போது, “ஏய்… கதவைத் திற…” என்று ஆசிரமத்தின் வாசலில் நின்றபடி ஒருவன் கர்ஜித்தான். வந்தவன் திடகாத்திரமாக இருந்தான். கையில் பெரிய வாள் வைத்திருந்தான்.சிஷ்யன் பயந்துபோய் கதவைத் திறக்குமுன், குரு எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டு கனிவான குரலில், “வணக்கம், வாங்க, யார் நீங்க?” என்றார்.

“குரு இருக்கிறாரா? அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும்” என்றான் வந்தவன். சிஷ்யன் குருவைப் பார்த்தான். குரு ஆசிரமத்துக்கு வந்தவனை அமரச் சொல்லிவிட்டு, “நல்லது. கேளுங்கள். உங்கள் கேள்வி என்ன?” என்றார்.“நீங்கள்தான் குருவா..? நான் இந்த ஊர் ஜமீந்தாரின் பாதுகாவல் படையின் தலைவன்” என்றான்.

“சரி கேள்வி என்ன?” என்றார் குரு.உடனே படைத் தலைவன் “உண்மையில் சொர்க்கமும், நரகமும் இருக்கிறதா?” என்றான்.
குரு புன்னகைத்துவிட்டு, “முதலில் உங்களைப் பார்த்தால் ஒரு வீரனைப் போலவே தெரியவில்லையே..!” என்றார் திரும்பி நடந்தபடி.
“என்ன… என்னைப் பார்த்தால் வீரனாகத் தெரியவில்லையா? நான் போர்ப்படையில் தலைவனாகவும் இருந்தவன்” என்று வேகமாகப் பின்தொடர்ந்தான்.

“அப்படியா? அடடா... பாவம் ஜமீந்தார்! இப்படிப்பட்ட ஒருவரையா தனது படைத்தலைவனாக வைத்திருக்கிறார்? உமது உருவத்தைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல் தெரிகிறது” என்றார்.

“என்ன? நான் பிச்சைக்காரனா?” என்று கோபத்துடன் கத்தினான். சிஷ்யன் மிரண்டு போனான். அடுத்து என்ன நடக்குமோ என்று பயமாக இருந்தது.“வீரன் என்கிறாய், ஆனால் கையில் வைத்திருக்கும் வாள், இங்கு இருக்கும் ஒரு புல்லை வெட்டக்கூட கூர்மை இல்லாதது போல் இருக்கிறதே. இதைக்கொண்டா உயிர்களைக் கொல்கிறாய்“ என்றார் குரு புன்னகை மாறாமல்.

வந்தவன் ஆத்திரத்துடன் வாளை உறையினின்றும் உருவினான். அவனை கையமர்த்தி நிறுத்திய குரு, புன்னகைத்தபடியே,“தம்பி, இந்த இடத்தில்தான் உனக்கான நரகத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன” என்றார்.வந்தவன் சற்று நிதானித்தான். சிறிது யோசித்து, வாளை உறையில் சொருகினான். அதைக் கண்டு குரு, “தம்பி இந்த இடத்தில்தான் உனக்கான சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன” என்றார். வந்தவன் எதுவும் பேசாமல் தலைகுனிந்தபடி குருவை வணங்கினான்.

“சொர்க்கம், நரகம் இரண்டும் வாழும் வாழ்க்கைக்குள்தான் இருக்கின்றன. அவை இரண்டின் வாசல்களும், மனிதர்களின் உணர்ச்சிகளின்  வெளிப்பாட்டில் திறக்கின்றன” என்றார்.சிஷ்யனும், படைத்தலைவனும் மெய்சிலிர்த்து குருவின் பாதத்தில் விழுந்து வணங்கினர்.

  -  தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு

X