ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

5/7/2018 11:54:15 AM

ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதை விட தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதே சிறந்தது என்று பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முடிவோடு உள்ளனர். அதற்கு ஏற்றபடி நம் அரசுப் பள்ளிகளிலும் சர்ச்சைகள், குறைபாடுகள் இல்லாமல் இல்லை. தனியார் பள்ளிகளில் நம் பிள்ளை படித்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கும் பொருளாதார நிலையில் பின்தங்கிய பெற்றோர்களை கவனத்தில் கொண்டுதான் மத்திய அரசு ஒரு கல்விச் சட்டத்தைக் கொண்டுவந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  

இப்படி பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்ததையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டுவந்தது. அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதே அந்தச் சட்டம்.

அதன்படி, தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2018-2019-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1,41,000 இடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு எந்ெதந்தப் பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://tnmatricschools.com/rte/rtepdf.aspx# என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

- முத்து

X