பரிகாசம் செய்வது சுயமதிப்பைச் சிதைக்கும்!

5/30/2018 11:31:32 AM

பரிகாசம் செய்வது சுயமதிப்பைச் சிதைக்கும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உளவியல் தொடர் 43

உடல்... மனம்... ஈகோ!

There are two kinds of egotists: Those who admit it, and the rest of us - Laurence J. Pete
  - ஈகோமொழி

விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது, அது விமர்சிப்பவரின் குறை என்பது புரிந்ததும், உடனடியாகப் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, விமர்சனம் செய்தவரைத் திருத்த முயற்சிப்பதுதான். அது கொஞ்சமும் தேவையில்லாதது.

விமர்சனம் செய்பவர் தனிப்பட்ட காரணங்களுக்காகச் சொல்லியிருக்கலாம் என்பதை ஆராய்ந்து பார்த்தபின், அதிலுள்ள கருத்துகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, விமர்சகரின் மனதை மாற்ற முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்ய முயற்சிக்கும் ஒவ்வொருமுறையும் அது சண்டை, சச்சரவுகளிலேயே சென்றுமுடியும்.  

எப்போதும் விமர்சனத்தையும், விமர்சகரையும் பிரித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, அலுவலகத்தில் ஒருவர் ‘நீங்கள் ரொம்ப சத்தமாகப் பேசுறீங்க சார்!’ என்று விமர்சித்தால், சொன்னவரை விடுத்து, சொன்னதைக் கவனிக்க வேண்டும். இதேபோல் வேறு யாராவது அப்படிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

‘ஆமாம்’ என்றால் அந்த விமர்சனத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு மெல்லப் பேச முயலவேண்டும். அதுவே ‘இல்லை’ என்றால் அமைதியாகக் கடந்துவிட வேண்டும். இப்படிப் பிரித்துப் பார்ப்பதுதான் நன்மையாக மாறுகிறது. அதுவே ஈகோவின் உள்ளீடான சுயமதிப்பிற்கு வலு சேர்க்கிறது.

சில சூழல்களில் நடப்பதை விமர்சன ரீதியில், சிலர் தங்களுக்குத் தாங்களே முணுமுணுத்துக்கொள்வார்கள். ‘இப்படி ஆகும்னு எனக்கு அப்பவே தெரியும்’ என்கிற ரீதியில் சொல்லிக்கொள்வார்கள்.

இதுவும் ஈகோவின் வெளிப்பாடுதான். தனிப்பட்ட முறையில் நடக்கும் வெளிப்பாடு ஒருவித சுயதிருப்தியை தரவல்லது. இதில் விசித்திரம் என்னவென்றால் அந்த முணுமுணுப்பை நாலு பேர் முன்னிலையில் சொல்லமாட்டார்கள். தனிமையில் சொல்லிக்கொள்வார்கள். இங்கும் உணர்ந்து அபிப்பிராயங்களைத் தவிர்த்து, கருத்துகளாகச் சொல்லிப் பழகினால் அது சூழ்நிலைக்கு ஆட்படுவதையும், ஒரு சார்பாக நடந்துகொள்வதையும் முற்றிலும் தவிர்க்க உதவும்.

விமர்சனத்திற்கு நேர் எதிரானது பரிகாசம். அது சுயமதிப்பைச் சிதைக்கும் பகுதிகளில் மிகவும் அபாயகரமானது, ஆபத்தானது. சுயமதிப்பைக் குறைத்து, ஒரு இக்கட்டான நிலையில் நிறுத்திவிடும். அதனால்தான் பரிகாசத்திற்குப் பரிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள். பரிகாசத்தின் தன்மை புரியாமல் அதைக் கையாள்வதால் பல வேளைகளில் உறவுகள் முறிந்துபோகின்றன.

பலரும் பரிகாசத்துக்கும், விமர்சனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். விமர்சனம் என்பது ஒருவர் செய்த காரியத்தின் தன்மையை முன்னிலைப்படுத்திச் சொல்வது.

பரிகாசம் செய்த காரியத்தோடு, செய்தவரின் குணநலன்களையும் கீழ்மையோடு குறிப்பிடுவது. விமர்சனம் படைப்பைச் சுட்டிக்காட்டும். பரிகாசம் படைப்பாளியைக் குத்திக்காட்டும். கேலி,குத்திக்காட்டல், பகடி போன்ற மறைமுகமான பரிகாசங்களும், நேரடியான பரிகாசங்களும் (Criticize) எப்போதும் ஆபத்தானவைதான்.

பரிகாசம் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தும். அந்தக் காயமும் விலைமதிப்பில்லாத சுயமதிப்பில் ஏற்படுத்துவதால், அது ஏற்படுத்துபவரது  முக்கியத்துவத்தை குறைத்துவிடுகிறது. அதனால் அடுத்தவரை பரிகாசம் செய்யும்போது, அடுத்தவர் பார்வையில் சுயமதிப்பு இழந்துபோகத்தான் செய்யும். எப்போதும் தவறியும் பரிகாசச் சொற்களைச் சொல்லாமல் இருப்பதுதான் தற்காப்பான செயல்பாடு.

பரிகாசம் ஒரு வீணான முயற்சி. பரிகாசம் செய்பவர் எப்போதும் தன்னைத்தவிர மற்ற அனைவரையும் தவறு செய்தவர்களாகப் பாவித்து, குற்றம்சாட்டிக்கொண்டே இருப்பார்கள். பரிகாசத்திற்கு ஆளானவர் எப்போதும் தன்னையும் தனது சுயமதிப்பையும் நிரூபிப்பதற்காக போராடிக்கொண்டே இருப்பார்.   

இதற்கு ஒரே தீர்வு, திருவள்ளுவர் சொன்னது போல் ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்பதுதான்தான் சரி. நாவை  அவரவர் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுதான் சிறப்பு. அடுத்தவரைப்பற்றி பேசுவதாக இருந்தால் உயர்வாகவே பேசுவது மிகச் சிறப்பு. தவறாகப் பேசவேண்டிய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருப்பது அதனினும் கூடுதலான சிறப்பு. சுயமதிப்பை சிதைக்கும் பரிகாசத்தை ஒதுக்கிவைப்பது மிக மிகச் சிறப்பு. ஆகவே, பரிகாசத்தை ஒதுக்கி வையுங்கள்!

சுயமதிப்பு/கண்ணியத்தை உயர்த்திக்கொள்ளும் வழிகளில், ஈகோவின் வெளிப்பாட்டிற்கு உள்ளீடான சுயமதிப்பிற்குக் கூடுதல் மதிப்பை (Value Addition) ஏற்படுத்தும் வழிமுறைகள்  மற்றும்  சுயமதிப்பைச் சிதைக்கும் செயல்பாடுகள் பற்றி அறிந்தோம்.

இவற்றை உணர்ந்து செய்தால் நிச்சயம் ஈகோவிற்கான சுயமதிப்பு உள்ளும்-புறமும் பெரிய அளவில் உயரும். பாசிட்டிவான நிறை சக்தி மனமெங்கும் நிரம்பும். அது குடும்பத்திலும், சமூதாயத்திலும் உயர்ந்த அந்தஸ்தையும், மரியாதையையும் பெற்றுத்தருவதோடு, திருப்திகரமான சமூக வாழ்க்கையை வாழவும் வழி செய்துதரும்.  

செல்வத்தை வேண்டுமானால் ஒரு இடத்திலிருந்து எடுத்து மற்றொரு இடத்தில் நிறைத்துக்கொள்ள முடியும். ஆனால் ஒருவரின் மதிப்பை எடுத்து நம்முடைய சுயமதிப்பை நிறைத்துக்கொள்ள முடியாது. அதேபோல் நம்முடைய மதிப்பைக் குறைத்து, மற்றவரின் மதிப்பை உயர்த்திவிட முடியாது.

ஈகோவின் அடிப்படை நிலைகளில் ஒன்றான ‘நான் மதிப்பானவன், நீயும் மதிப்பானவன்’ என்ற நிலையில் எப்போதும் நின்றிருக்க…. ஒருவன் தனது சுயமதிப்பை உயர்த்திக்கொள்வதோடு, அடுத்தவரின் சுயமதிப்பையும் உயர்த்தியவாறு இருக்க வேண்டும். ‘நான் பெரியவன்’ என்பதை முழுமையாக உணர்வதோடு மற்றவரையும் அவ்வாறு உணரச்செய்ய வேண்டும்.  அதுதான் ஒரே வழி.

சுருக்கமாகச் சொன்னால் ஈகோவை திறம்படக் கையாள்வது ஆரோக்கியமான மனநலத்தை பெற்றுத்தரும். அடுத்தவரின் ஈகோவை திறம்படக் கையாள்வது ஆரோக்கியமான சமூகநலத்தைப் பெற்றுத் தரும்.

இவை இரண்டும் இணைய அது ஆரோக்கியமான உறவுநலத்தைப் பெற்றுத்தரும். அளவாகத் திறம்படக் கையாளப்பட்ட ஈகோ, ஒரு நிறைந்த, உயர்வான, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும். அது மனதைப் பலப்படுத்தும், உயிரை உற்சாகப்படுத்தும், வாழ்க்கையை இனிமையானதாக மாற்றும்.

இதைவிட வேறு என்ன வேண்டும்?

குரு சிஷ்யன் கதை

கண்ணாடி அறை!

சிஷ்யன் மௌன விரதத்தில் ஆசிரமத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தான். அந்த சமயம் ஆசிரமத்திற்குள் ஒருவர் வந்தார். சிஷ்யனைப் பார்த்து, “குரு இருக்கிறாரா?” என்றார். சிஷ்யன் திண்ணையில் அமரச் சொல்லி சைகை காட்டினான்.

வந்தவர் அமர்ந்து, “குரு இருக்கிறாரா?’’ என்றார் மீண்டும்.சிஷ்யன் தலையை மட்டும் அசைத்தான். “நல்லது அவரைத் தயவுசெய்து வரச்சொல்லுங்கள், நான் அவரை அவசரமாகப் பார்க்க வேண்டும்’’ என்றார்.

சிஷ்யன் பேசாமல் அமைதியாக எழுந்து நின்றான். அப்போது, ஒரு மரத்திற்குப் பின்னாலிருந்து குரு குதூகலத்துடன்….“பார்த்தீர்களா…உங்களால் என்னை ஓடிவந்து தொடவே முடியவில்லை, நான்தான் ஜெயித்தேன்’’ என்றபடி ஓடிவந்தார். அவர் பின்னால் சில சிறுவர் சிறுமிகள் ஓடிவந்தார்கள்.

ஆசிரமத்திற்கு வந்தவர் அதை ஆச்சர்யமாகப் பார்த்தார். உடனே குரு,“சரி நீங்கள் விளையாடுங்கள் நான் இதோ வருகிறேன்’’ என்று சிறுவர்களிடம் சொல்லிவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தார். தன்னைப் பார்க்க வந்தவரைப் பார்த்து,“என்ன வேண்டும் சொல்லுங்கள்?’’ என்றார்.

“ஐயா, என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்பது புரியவே இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட அனைவருமே சுயநலமாக இருக்கிறார்கள். யாரும் என்னிடம் சரியாகப் பேசுவதே இல்லை” என்றார் சிஷ்யனை ஒரு பார்வை பார்த்தபடி.

புன்னகைத்த குரு, சொன்னார்... “ஐயா நம் ஊருக்கு பக்கத்து ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட அறை ஒன்று இருக்கிறது. அதற்குள் ஒரு சிறுமி சென்று விளையாடினாள். அப்போது அவள் தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகள் மலர்ந்த முகத்தோடு இருப்பதைக் கண்டாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் குழந்தைகளும் கை தட்டின. உடனே உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் முன்கோபக்காரன் ஒருவன் வந்தான்.

தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்கள் இருப்பதைக் கண்டான். உடனே அவன், அவர்களை விரட்ட கை ஓங்கினான். உடனே ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உடனே உலகிலேயே மிகவும் மோசமான இடம் இதுதான்! என்று எண்ணி, அங்கிருந்து வெளியேறினான்.’’ என்ற குரு,“இந்த சமூகமும் ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட அறையைப் போன்றதுதான்.

நாம் எதை எப்படி வெளிப்படுத்துகிறோமோ அதையே அது நமக்கும் பிரதிபலிக்கும். நீங்கள் எப்போதும் குறைந்த எதிர்பார்ப்போடு, மனதைக் குழந்தையைப் போல் வைத்திருங்கள். இந்த உலகம் உங்களுக்கு இன்பமானதாகத் தெரியும்” என்று சொல்லி குரு எழுந்து குழந்தைகளுடன் விளையாடச் சென்றார். சிஷ்யன் வந்தவரைப் பார்த்து புன்னகைத்தான். ஆசிரமத்திற்கு வந்தவரும் மனம் தெளிவடைந்து சிஷ்யனைப் பார்த்து தலையசைத்து விடைபெற்றுச் சென்றார்.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு

X