இனிமையான இசை ஈகோவை அமைதியாக்கும்!

6/5/2018 2:36:25 PM

இனிமையான இசை ஈகோவை அமைதியாக்கும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உளவியல் தொடர் 44

உடல்... மனம்... ஈகோ!

Avoid having your ego so close to your position that when your position falls, your ego goes with it. - Colin Powell
- ஈகோ மொழி  

ஈகோவின் அறையானது ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸைப்போல் மனதில் இருக்கிறது. அங்கு தேவையான பொருட்களும் இருக்கின்றன, தேவையற்ற பொருட்களும் குவிந்திருக்கின்றன. தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தேவையற்ற பொருட்கள் இருப்பதைக் கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அவற்றைக் கண்டும் காணாமல் சுலபமாகக் கடந்து சென்றிட வேண்டும்.

மனித வாழ்விலும் அனுபவங்களின் நிகழ்வுகள் அப்படித்தான் இருக்கின்றன.  வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனுபவங்களும், தேவையற்ற அனுபவங்களும் கலந்து எதிர்ப்பட்டவண்ணமே இருக்கின்றன. அவற்றில் தேவைப்பட்ட அனுபவங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தேவையற்ற அனுபவங்களின் நிகழ்வுகளுக்காக மருகிக்கொண்டு இருக்கக்கூடாது, ஒருவேளை ஈகோவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் தேவைப்படாத அனுபவங்களிலிருந்து பயனுள்ளவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும்.

தேவையற்ற அனுபவங்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும், ஈகோவின் நிர்வாக ரீதியான செயல்பாட்டிற்கு ஒரு பாரசீக நாடோடிக் கதையைக் குறிப்பிடுவார்கள். பாரசீகத்தில் ஒரு ஏழைக்கிழவனிடம் ஒரு கழுதை இருந்தது. ஒரு நாள் அது பாழும் கிணற்றில் விழுந்துவிட்டது. அதை உயிருடன் வெளியே எடுக்க பணம் கேட்டார்கள். பணத்தைத்தந்து கழுதையை மீட்க அவனால் முடியவில்லை.

கிணற்றிலிருந்து கழுதையை வெளியே கொண்டுவர அவன் உடம்பிலும் வலு இல்லை. எப்படிக் கொண்டு வருவது என்று புரியாமல் கவலையோடு இருந்தான். இரண்டாம் நாள் காலை அந்தக் கழுதை அவன் வீட்டு வாசலில் உயிருடன் நின்றிருந்தது. கிழவனுக்கு ஆச்சர்யம். எப்படி? யார் உதவினார்கள்? என்று பார்த்தான். யாருமே உதவி செய்திருக்கவில்லை. கழுதை தானாகக் கிணற்றிலிருந்து வெளியே வந்திருப்பது தெரிந்தது.

கழுதை வெளியே வந்தது எப்படித் தெரியுமா? ஊர்க்காரர்கள் தண்ணீர் இல்லாத  பாழுங்கிணற்றை மூடிவிட நினைத்து, அதில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள். கிணற்றுக்குள் இருந்த கழுதை தன் மேல் விழுந்த புழுதியையும், மண்ணையும் உதாசீனப் படுத்தி, அதை தன் உடம்பிலிருந்து சிலிர்த்து உதிர்த்து அதன் மீது ஏறி நின்றுகொண்டே வந்தது. மண் விழுந்து கிணறு மூடிக்கொண்டே வர, கழுதை மேலேறி வெளியே வந்துவிட்டது. தேவையற்ற உதாசீனங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதைப் பொருட்படுத்தாமல், அவற்றை உதறிக் கடந்தால் கழுதையைப் போல் உயிருடன் வெளிப்பட்டுவிடலாம் என்பதைத்தான் இது அர்த்தப்படுத்துகிறது.

ஈகோவை பயன்படுத்தும் முறைகள் ஈகோ பொதுப்பார்வைக்கு ஒரு சிக்கலான பொருளாகத்தான் தோற்றமளிக்கும். அது பற்றிய புரிதல் இல்லாத வரை அது அப்படிப்பட்டதாகவே இருக்கும். கலை வடிவ செயல்பாடுகளைப் பயிற்சியைக் கொண்டு செய்யும்போது அந்தக் கலைவடிவம் கைகொடுப்பதைப் பார்க்கலாம். ஈகோவைப் பொறுத்தவரை அதை பயன்படுத்துவதற்கான பயிற்சியைக் கவனமாகவும், விழிப்புணர்வோடும் செய்யவேண்டும். காரணம், வைரத்தைக் கொண்டே வைரத்தை அறுப்பதுபோல். ஈகோவை பயன்படுத்தி பயிற்சி செய்ய, துணைக்கு ஈகோவைத்தான் பயன்படுத்துகிறோம்.

‘யாரு என்ன சொன்னாலும், நான் கோபப்படாம இருக்கணும்’ என்ற செயல்பாட்டிற்கு ஈகோவை பயன்படுத்தும்போது, முதலில் அந்தச் செயலை விரும்பி திறம்படச் செய்து முடிக்கும் மனநிலையை உள்ளுக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதாவது, கோப உணர்ச்சி வெளிப்படாமல் இருக்க, அந்தக் கோப உணர்ச்சி எதனால், எங்கிருந்து எழுகிறது என்பதை உள்ளுக்குள் அறிந்து அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி கோபத்தை வெளிப்படுத்தாத மனநிலை கொண்டவராக (ஈகோவைப் பயன்படுத்தி) மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்யும்போதுதான் கோபம் வெளிப்படாமல் இருப்பதோடு, கோப உணர்ச்சியை வெளிப்படுத்தாதவரை ரொம்ப பிடிச்சவராகவும் (loveable person) இருக்க வைக்கிறது. அந்த வகையில் ஈகோ நம்மையே நமக்குப் பிடித்தமானவராக மாற்றித்தருகிறது. இதுதான் ஈகோவைப் பயன்படுத்தி பயிற்சி செய்வது. அதைவிடுத்து மேலோட்டமாக கோபம் எழும்போது வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டே இருந்தால், அது ஒரு கட்டத்தில் வெடித்து வெளிப்பட்டுவிடும்.

ஈகோவைப் பயன்படுத்தும் பயிற்சியில், அடுத்த முக்கியமான பயிற்சி. ‘ஈகோவை அமைதியாக இருக்கச் செய்வது’. ஈகோவை அமைதியாக இருக்கச் செய்வது என்பது, எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக, அவசரகதியில் துள்ளலுடன் வெளிப்படும் ஈகோவைக் கட்டுப்படுத்தி அமைதிப்படுத்துவது. அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முன்முடிவுகளுடன் இருக்கிறோம்.

முன்முடிவுகளை ஒவ்வொன்றாக அமைதிப்படுத்திக் கொண்டே வந்தால் ஈகோவும் அமைதியாகும். ஒவ்வொரு மாணவனாக அமைதிப் படுத்த, மொத்த வகுப்பறையையும் அமைதிபடுத்துவதைப் போலத்தான். ஈகோவை அமைதியாக்கும் பயிற்சியாக இனிமையான இசையைக் கேட்பது, ஓவியம் வரைவது, திரைப்படங்களை ரசிப்பது அல்லது எந்த ஒரு கலையோடாவது கரைந்து போகும் சாத்தியம் இருக்கிறதோ அதைச் செய்வது என்று இருக்கலாம். அப்படி கரைந்து இருப்பது ஈகோவை அமைதிபடுத்தும்.

ஈகோவின் ஆரவாரமான பதற்றம் தணிந்து, அமைதி உருவானதும் அது தெளிவடைந்து நிற்கும். அந்தத் தெளிவு, வாழ்க்கையில் முடிவெடுக்கக்கூடிய தருணங்களை மிகச் சரியாக இனம் காட்டும். எழும்-எதிர்ப்படும் உணர்ச்சிகளை ஆராய்ந்து எது சரி, எது சரியற்றது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டும். அதோடு எது சரியற்றதோ அதை சரியானதாக மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியத்தையும் சுட்டிக்காட்டும். ஈகோவைப் பயன்படுத்தி வாழ்க்கை பண்படத் தொடங்குவது இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது.

ஈகோவைப் பயன்படுத்துவதால் உண்டாகும் தெளிவு ஒரே நாளில் அமைந்து விடுவதில்லை. தொடர்ந்த பயிற்சியால் மட்டுமே சாத்தியப்படுகிறது. மனதுக்குப் பிடித்த ஒருவர் எப்போதும் அருகில் இருப்பதையே பலரும் விரும்புவார்கள். அப்படி நமக்குப் பிடித்தமான நபர் நாமாகவே இருந்துவிட்டால் மகிழ்ச்சி விஸ்தரிப்பு கூடிவிடும் இல்லையா? நமக்குப் பிடித்த நம்மை ரசிக்காமல் இருப்போமா என்ன?
இனி, பயின்று பண்படுத்திய ஈகோவை பயனுள்ள வகையில் பணியாற்ற வைக்கும் வழிகளைப் பார்ப்போம்…

தொடரும்

குரு சிஷ்யன் கதை

மனிதர்களை விமர்சனங்களால் எடை போடாதே!

குரு ஆசிரமத்துக்கு வெளியே அமர்ந்து கிராமபோன் பெட்டியில் பாடல் ஒன்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க ஒருவர் வந்தார். “யாருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் வந்தவர்.“குரலைக் கேட்டால் தெரியவில்லையா?’’என்று கண்களை மூடியபடி கேட்டுக்கொண்டிருந்த குரு, பாடகரின் பெயரைச் சொன்னார். அதைக் கேட்டதும், “அவரா? அந்த ஆள் சரியான குடிகாரர் ஆச்சே.. போதை வஸ்துகளைக் குடிக்காமல் அவர் பாடவே மாட்டார்னு படிச்சிருக்கேன்!’’என்றார்.

“அதனால் என்ன? பாடலில் குடியா தெரிகிறது, குரல்தானே வெளிப்படுகிறது. இந்தப் பாடலில் அவருடைய குரல் எத்தனை அற்புதமாக இருக்கு! அது நமக்குப் போதாதா?’’ என்றார் குரு.வந்தவர் பதில் பேசாமல், ஆமோதிப்பதாகத் தலையசைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் வேறொருவர் வந்தார். குரு கேட்டுக்கொண்டிருந்த பாடலைக் கேட்டு, சட்டென்று பாடகரின் பெயரைச் சொல்லி, “இதை அவருதானே பாடறாரு?’’ என்றார்.
“ஆமாம் அவரேதான். உங்களுக்கு அவரு பாட்டு பிடிக்குமா?’’ என்றார் குரு.

“ரொம்பப் பிடிக்கும்! என்ன ஒரு இனிமையான குரல். ஒவ்வொரு பாட்டையும் அனுபவித்துப் பாட இவரால் மட்டுமே முடியும். அவரைப் போன்ற ஒரு திறமைசாலியை நான் பார்த்ததே இல்லை!’’ என்றார். “அதெல்லாம் இருக்கட்டும், அந்தப் பாடகர் சரியான குடிகாரர், தெரியுமா? குடிச்சுட்டு பாடறதெல்லாம் பாட்டா?’’ என்றார் குரு.வந்தவர் எதுவும் பேசாமல் சென்றார்... இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

குருவிடம் வந்து, “என்ன குருவே, முதல் ஆள் அந்தப் பாடகரைக் குடிகாரர் என்று சொன்னபோது நீங்கள் அவருடைய திறமையைப் பாராட்டி பேசினீர்கள். அதுவே இரண்டாவது ஆள் அவருடைய திறமையைப் புகழ்ந்தபோது அவர் குடிகாரர் என்று சொல்லி அவமானப்படுத்திப் பேசினீர்கள், இது என்ன நியாயம்?’’என்று கேட்டான். குரு மெல்லச் சிரித்துவிட்டு, “சம கனம் வரும் வரை பொருட்களை எடை போடுவது கடைக்காரனின் வேலை.

அந்தத் தராசில் மனிதர்களை ஏற்றி நிறுத்தி விமர்சனங்களால் ஒப்பிட்டு எடை போட்டால் தராசு உடைந்துவிடும் இல்லையா? அதுபோலத்தான் மனிதர்கள் யாரும் யாரையும் விமர்சனங்களால் எடைபோட்டு அணுகக் கூடாது. மனிதர்களை எப்போதும் மனிதர்களாக ஏற்க வேண்டும். இங்கு வந்த இருவரும் பாடகரின் திறமையையும், குணத்தையும் ஒப்பிட்டதால், குறுக்கிட்டுப் பேசி அவர்களின் விமர்சனத்தை எடையற்றதாகச் செய்தேன்’’என்றார்.குருவின் பதிலைக் கேட்டு வியந்த சிஷ்யன் அவரை வணங்கினான். குரு சாய்ந்து அமர்ந்து மீண்டும் பாடலைக் கேட்கத் தொடங்கினார்.

ஸ்ரீநிவாஸ் பிரபு

X