எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் நிறைவேறாத ஆசைகள்!

8/21/2018 3:53:32 PM

எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் நிறைவேறாத ஆசைகள்!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி     

உடல்... மனம்... ஈகோ!

The ego is the false self- born out of fear and defensiveness.  John O’Donohue­
 
- ஈகோ மொழி

ஈகோவை அமைதிப்படுத்துவதாலும், ஈகோ மந்திரங்களாலும், நிறைவான மனநிலையை அடைந்ததும், நேர்மறை எண்ணங்களைவிட எதிர்மறை எண்ணங்கள்தான் முதலில் மேலெழுந்து வரும். அவற்றை எப்படி அணுகுவது என்று பார்ப்பதற்கு முன், எதிர்மறை எண்ணங்கள் எதனால் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்று அறிந்துகொள்வது அவசியம்.

உலகில் பிரச்னை இல்லாத மனிதர்கள் எங்குமே இல்லை. எதிர்ப்படும், ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் அவரவர் நிம்மதி அடங்கியிருக்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளத்தின் ஆழத்தில் பிரச்னைகள் தேங்கியபடியே இருக்கும். அவற்றை அமைதியாக அணுகும்போது மனதின் ஆழத்தில் சில காயங்களும், தழும்புகளும் இருப்பது தெளிவாகத் தெரியவரும். அந்தக் காயங்களின் மீதும், தழும்புகளின் மீதும் எண்ணங்களும், உணர்ச்சிகளும் கலப்பதால் அவை எதிர்மறை எண்ணங்களை எட்டிப்பார்க்கச் செய்கிறது.

ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் அவரவர் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாத்தியங்களும், அவற்றை தீர்க்கும் சாமர்த்தியங்களும் எண்ணற்ற முறையில் இருக்கவே செய்கிறது. எதிர்ப்படும் பிரச்னைளைத் தீர்ப்பது ஒரு வழி என்றாலும், அது எதனால் ஏற்படுகிறது? எங்கிருந்து ஊற்றெடுக்கிறது? எழாமல் இருக்க என்ன வழி? என்று அந்தப் பிரச்னைகளின் இயக்கவியலை அறிந்துகொள்ள முற்படுவதுதான் முக்கியமானது.

பெரும்பாலானவர்களுக்கு மனதில் உணர்ச்சிபூர்வமான தழும்புகள் (emotional scar) குழந்தைப்பருவத்திலேயே ஏற்பட்டு விடுகிறது என்று  உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.குழந்தைகளாக இருந்தபோது  பெரியவர்களால் ஏற்படும் சிறு சிறு உணர்ச்சிகரமன பாதிப்புகள், சுடு சொற்கள், பழிச் சொற்கள், விமர்சனம், உதாசீனம், தவறான சுட்டிக்காட்டல்கள் போன்றவை காயங்களாகி, தழும்புகளாகத் தங்கிவிடுகிறது.

எந்த ஒரு குழந்தையையும் அவர்களின் இயல்பான உணர்ச்சி களின் வெளிப்பாட்டைக் காட்ட பெரியவர்கள் அனுமதிப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இன்றளவும் பாருங்கள் குழந்தைகள் எதையாவது பேச முற்பட்டால், ‘பேசாதே’ என்று அடக்குகிறார்கள். ஓடி விளையாடினால், ‘ஆடாதே’ என்கிறார்கள். கேள்வி கேட்டால்,‘பெரியவங்ககிட்ட இப்படி எல்லாம் கேட்கக்கூடாது’  என்று சொல்கிறார்கள். எந்த இடத்திலும் எப்படி சரியாய் இருக்கவேண்டும் என்று சொல்லித்தருவதே இல்லை. இதனாலேயே குழந்தைகளின் உணர்ச்சி வெளிப்பாடு ஒரு அடக்குமுறைக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கிறது.

குழந்தைப்பருவத்தில் அடக்குமுறைகளை சந்தித்து சந்தித்து எந்த உணர்ச்சிகளையும் இயல்பாக வெளிக்காட்டாதவர்களாக, உள்ளுக்குள் அடங்கிப்போனவர்களாக மாறிவிடுபவர்களின் காயங்களும், தழும்புகளும் எதிர்மறை எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்திக்கொண்டேஇருக்கிறது. இதனால்தான் சிலர் பெரியவர்களான பின்னும், குழந்தைப்பருவத்தில் எதிர்கொண்ட அடக்கு முறையை மறக்காமல் நினைவில் நிறுத்தி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

‘சின்ன வயசுல ஒரு பலூன் பறக்கவிட்டுப் பார்க்கணும், பீப்பி ஊதணும்னு நினைப்பேன், முடியலை’ என்று சொல்லியபடி சிலர் குழந்தைப்பருவத்து ஆசைகளைப் பட்டியலிட்டு நிறைவேற்றிக்கொள்வதை பார்க்கலாம். அடக்கிய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வது என்பது மேலோட்டமானது, அதை பூர்த்தி செய்துகொள்வது தற்காலிகமானது. ஆசைகள் நிறைவேறாததால் மனதில் தேங்கியிருக்கும் தழும்புதான் எதிர்மறை எண்ணங்களுக்கு ஊற்றாக இருக்கிறது என்ற புரிதல்தான் முக்கியம்.

உணர்ச்சிகள் காற்றைப் போன்றது. காற்றின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினால் அது WEAK ஆன வேறொரு இடத்தில் வெடித்து வெளிப்பட்டுவிடுவதைப் போலத்தான் அடக்கப்பட்ட மனித உணர்ச்சிகளும் வேறு ஒரு இடத்தில் வேறுவிதமாக வெளிப்பட்டே தீரும். இதன் காரணமாகத்தான் மனதில் பதிந்த காயங்கள் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. பொதுவாக குழந்தைகள் குறும்பு செய்யக்கூடியவர்கள், அடம் பிடிக்கக்கூடியவர்கள்தான்.

அவர்களை வளர்க்கும்போது சூழலுக்கு ஏற்றவாறு கண்டிப்பு காட்டத்தான் வேண்டும். அதே நேரம், அவர்கள் மீதான கட்டுப்பாடுகள் அவர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தாதவாறு, எந்த இடத்திலும் அவர்களின் ஈகோ ஒரு அழுத்தப்பட்ட நிலையிலான ஈகோவாக மாறாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

அழுத்தங்களால் அறியாமல் ஏற்படும் காயங்களும் தழும்புகளும் அதன் ஆழங்களுக்கு ஏற்ப வாழ்க்கை முழுவதும் ஆறாமல் இருப்பதும் உண்டு.  “பொட்டப்புள்ள எப்பப்பாரு ஈன்னு ஏன் இளிச்சுகிட்டே இருக்கே’’ன்னு அப்பா ஒரு முறை கேட்டுட்டாரு, அதிலிருந்து வாய்விட்டு சிரிக்கிறதையே விட்டுட்டேன் என்று சொல்பவர்களை இன்றளவும் பார்க்கலாம். அப்படியான காயங்கள் எதிர்மறை எண்ணங்களை ஒவ்வொரு முறை சிரிக்க வேண்டிய சூழலிலும், அடுத்தவர் சிரிப்பதைப் பார்க்கும் சூழலிலும் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும்.

அழுத்தங்களால் ஏற்பட்ட உணர்ச்சி அடக்கல்கள் அந்த இயல்பான உணர்ச்சியை எந்தச் சூழலிலும் வெளிக்காட்டக் கூடாது என்ற வைராக்கியத்தோடு இருக்கச் செய்யும். அதுவே காயத்தை மேலும் மேலும் பெரிதாக்கிக்கொண்டே இருக்கும். அதனால் ஏற்படும் மிக முக்கிய பாதிப்பு என்பது அவர்கள் தங்களுடைய உண்மையான சுயத்தை (SELF) விரும்பாதவர்களாகவும், தங்களுடைய உணர்ச்சிகளை மதிக்காதவர்களாகவும் மாறிப்போவார்கள். இந்த இடம்தான் எதிர்மறை எண்ணங்களின் மிகப் பெரிய பாதிப்பைத் தருகிறது.

இப்படியான எதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது மிகவும் சுலபமானது. எதிர்மறை எண்ணங்கள் எழும்போது எதுவும் செய்யாமல் ஈகோவை அமைதிப்படுத்தி, அவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால் போதுமானது.ஒரு மாயம்போல் அவை பொடிப்பொடியாக மறைந்து உதிர்ந்து போவதைக் கண்கூடாகக் காணலாம். ஈகோவை அமைதிபடுத்துவதாலும், நிறைவான மனநிலையாலும் ஏற்படும் மிகப்பெரிய பலன் இதுதான்.

எதிர்மறை எண்ணங்களை உதாசீனப்படுத்தி ‘நான்’ இயல்பாக இருக்கிறேன் என்று ஆளுமை மேம்பாட்டிற்கு ஈகோதான் வழி செய்கிறது.மறுமுறை எதிர்மறை எண்ணம் எட்டிப்பார்த்தால்… அது உங்களின் உண்மையான ‘நான்’தனை(SELF) ரசிக்கக் கிடைத்த சந்தர்ப்பமாகவும், அதை சரி செய்ய ஈகோ ஒரு மெக்கானிக்காக வேலை பார்ப்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.ஈகோவை பயன்படுத்தும் முறையில் அடுத்தது, உள்ளுணர்வு சிகிச்சை முறை பயணம் பற்றிப் பார்ப்போம்

குரு சிஷ்யன் கதை : பூரணத் தனிமை எது?

குருவும் சிஷ்யனும் ஆசிரமத்தின் அருகே இருந்த மலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.“இங்க எதுக்காக வந்திருக்கிறோம் குருவே?” என்றான் சிஷ்யன்.‘‘காம,குரோத,மோகங்களால் ஆன வெளியுலகிலிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளவே இங்கே வந்தோம்’’ என்றார் குரு. “அப்படியானால் எவன் அதிகமாகத் தனிமையில் இருக்கிறானோ அவனே அதிக விடுதலை பெற்றவன், இல்லையா குருவே?‘‘ என்றான் சிஷ்யன்.‘‘ஆமாம். அதில் என்ன சந்தேகம்?”  என்றார் குரு.உடனே சிஷ்யன், ‘‘அப்படி யாரேனும் இருக்கிறார்களா குருவே?” என்றான்.

குரு யோசித்துவிட்டு ஒரு கதை சொன்னார், “ஒரு ஞானி இருந்தார். முழுமையான தனிமையில் இருக்கிற ஒரு மனுஷனைத் தேடி பல இடங்களில் அலைந்து திரிந்தார். அவர்கள்தான் பரிபூரணமானவர்கள் என்று முடிவுக்கு வந்தார். ஒருநாள் மலையுச்சியில் தியானம் பண்ணிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, ‘உங்களுக்கு யார் துணை?’ என்றார்.

அதற்கு அவர்  ‘எனக்கு என் அறிவு துணை’ என்றார். அப்படின்னா இவருக்கு துணை இருக்குன்னு அவரை விட்டு பாலை வெளியில் தனியா அலைஞ்சுகிட்டிருந்த ஒருத்தரிடம் போய் ‘உங்களுக்கு யார் துணை?‘ என்றார். அவரும், ‘எனக்கு இறைவன் துணை’ என்றார். அந்த ஞானி கடைசியாக மூடிய அறைக்குள் முப்பது வருடங்களாக வாழ்ந்த ஒரு மனிதரைக் கண்டார். அவர் முற்றிலும் தனிமையில் இருந்தார். ‘நீங்கள்தான் முற்றிலும் தனிமையில் இருக்கிறீர்கள்’ என்றார்.

‘இல்லை, என்னுடன் என் நிழல் இருக்கிறது‘ என்றார். தன்னுடன் தன் நிழலும் இல்லாதவனே முழுமையான தனிமையில் இருப்பவனாய் இருக்க முடியும்’ என்று எண்ணி,  தன்னுடன் தன் நிழலும் இல்லாத ஒரு மனிதனைத் தேடி அலைந்தார் ஞானி. அப்படி ஒரு மனிதன் இருக்கவே முடியாதென்று பலரும் அவருக்கு அறிவுரை சொன்னார்கள். ஆனாலும்  அலைந்தபடியே இருந்தார்.

ஒரு நாள் ஒரு கிராமத்து புல்வெளியில் ஒரு இடையனைப் பார்த்தார். அந்த இடையன் புல்வெளியில் நின்று புல்லாங்குழலை ஊதிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் பனித்துளி சூரியனைப் பார்த்து ஒளிர்வது போல ஒளிவிட்டதைக் கண்டார் ஞானி. அவனிடம் சென்று, ‘ஐயா நீங்களே பரிபூரணர்‘ என்றார். அப்பத்தான் அவருக்கு ஞானம் வந்தது. இசைத்துக்கொண்டிருந்தபோது அங்கே இடையன் இருக்கவில்லை. இசை நின்றபோது அங்கே இடையன் மட்டுமே இருந்தான்.

எவன் ஒருவன் தன் கலையால் தன்னை நிறைத்துக்கொள்கிறானோ அவனே சுயப் பிரகாசமானவன். அவனே பூரணமான தனிமை கொண்டவன். பூரணமானவனுக்குள் துயரங்கள் நுழைவதில்லை, குறைகள் குடிகொள்வதில்லை என்பதை புரிந்துகொண்டவராக இருந்தார் ஞானி“ என்று சொல்லி முடித்த குரு, “எவன் ஒருவன் எந்த ஒரு செயலிலும் முழுமையாக இருக்கிறானோ அவனே பூரணமானவன். அவனே தனிமையில் இருப்பவன்” என்றார்.முகம் மலர்ந்த சிஷ்யன் “பூரணமாய்ப் புரிந்தது குருவே” என்றபடி குருவை வணங்கி மலைப்பாதையில் நடக்க தொடங்கினான்.

(தொடரும்)

- ஸ்ரீநிவாஸ் பிரபு

X