கல்வித்தரத்தை மாற்றுமா புதிய திட்டங்கள்? ஓர் அலசல்!

8/21/2018 3:57:24 PM

கல்வித்தரத்தை மாற்றுமா புதிய திட்டங்கள்? ஓர் அலசல்!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி     

கடந்த ஜூலை மாதம் 15ம் தேதியை அரசியல் தலைவர்களும் ஆதரவாளர்களும், தமிழக அரசும் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். காரணம், கர்மவீரர், பெருந்தலைவர், ஏழைப் பங்காளன், கல்வி தந்த வள்ளல் என்றெல்லாம் போற்றப்படும் காமராஜரின் பிறந்த தினம் அன்று. வறுமையின் காரணமாக ஒருவன் கல்விச் செல்வத்தை இழந்துவிடக்கூடாது. கல்விச் செல்வம் இருந்துவிட்டால் மற்ற செல்வங்கள் இல்லாவிடிலும் அவற்றை எல்லாம் பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தை செயல்படுத்திக் காட்டியவர் காமராஜர்.

முதலில் அனைவரும் படிக்கக் கல்வி நிலையங்கள் வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்தார். இதன் விளைவாக முதல் திட்ட முடிவில் 21500 ஆக இருந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 30000-க்கும் மேலாக உயர்த்தப்பட்டது. பள்ளி இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்று எண்ணினார்.

தமிழ்நாட்டில் முந்நூறும் அதற்கு மேலும் மக்கள் தொகையுள்ள எல்லா கிராமங்களிலும் ஒரு மைல் சுற்றளவில் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார். இதன் காரணமாகவே கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதியை “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசும் ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாடிவருகின்றனர். அரசுக்கு வருவாய் மிகக்குறைவாக இருந்த அவரது ஆட்சிக்காலத்திலேயே பெரிய அளவில் நிதியை லாபநஷ்ட கணக்குப் பார்க்காமல் தொலைநோக்குப் பார்வையோடு கல்விக்காக ஒதுக்கீடு செய்தார்.

பெரும் செல்வந்தர்களிடம் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்காக நிலம், பொருள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கௌரவம் பாராமல் நன்கொடை பெற்றார். அவரின் அத்தனை செயல்பாடுகளும் ஏழை எளிய மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே இலவசமாக கல்வி பயில வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. “கல்விக்கான முதலீடு என்பது லாபத்தை நோக்கியதல்ல ; நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டது” என்ற கொள்கையில் காமராஜர் உறுதியாக இருந்தார்.

1963 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்காக திட்டமிட்ட காமராஜரின் கனவு உண்மையிலேயே நிறைவேறியிருக்கிறதா? தற்போது தமிழகத்தின் கல்விநிலை சிறப்பாகவே உள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது மகிழ்ச்சியான விஷயம்தான். அனைத்து நகரங்களிலும் பொறியியல் கல்லூரிகள் வரிசைகட்டி நிற்கின்றன.

தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை வெளிமாநில மாணவர்கள் நாடி வருகின்றனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் கல்வியில் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று ஆட்சியாளர்கள் அறிக்கைகள் விடுவதை நாம் அன்றாட செய்திகளாக பார்த்து வருகிறோம்.

மேற்கூறிய கல்வித்துறையின் வளர்ச்சிப் பயன்களை துய்ப்பவர்கள் 30 சதவீதம் உள்ள நடுத்தர மக்களும் மேல்தட்டு மக்களுமே. மீதமுள்ள 70 சதவீதம் ஏழை எளிய மக்களின் கல்விநிலை உயர்வுக்கு அதன்பின் வந்த ஆட்சியாளர்கள் அக்கறை காட்டியுள்ளார்களா? அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் 10 ஆண்டுகள் கழித்து கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கவும் வருந்தப்படவும் வைக்கிறது.

பூடான் போன்ற வருவாய் குறைவாக உள்ள மிகச்சிறிய நாடுகளில் கூட 2010 ஆம் ஆண்டுவரை பள்ளிக்கல்வி இலவசமாகவே அளிக்கப்பட்டுவந்தது. அமைச்சர்களின் பிள்ளைகள் கூட அரசுப் பள்ளிகளில் மட்டுமே பயின்றுவந்தனர்.மாணவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்று தாயுள்ளத்தோடு மதிய உணவுதான் காமராஜர் வழங்கினார்.

நாங்கள் தற்போது மிதிவண்டி, கணினி, பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடை என 10க்கும் மேற்பட்ட விலையில்லா பொருட்களை வழங்கிவருகிறோம் என்று தற்பெருமை கூறுபவர்களும் இருக்கலாம். ஆனால், உண்மைநிலை வேறு. பெரும்பான்மை ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள் மீது அரசு உண்மையிலேயே கவனம் செலுத்துகிறதா? அல்லது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறதா? எதிர்காலத்தில் வரும் மாணவர்கள் பயில்வதற்கு அரசுப் பள்ளி என்ற ஒரு இடம் இருக்குமா? என்பதுபோன்ற ஐயப்பாடுகளை தற்போது உள்ள கல்விச் சூழல் கல்வியாளர்களின் மனதில் எழுப்புகின்றன.

தமிழகக் கல்வித்துறையின் சார்பில் அடிக்கடி அரசுப் பள்ளிகள் மீது அதிக ஈடுபாடு உள்ளது போல் அறிக்கைகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. கல்வித்தரத்தை உச்சத்துக்கே கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

அப்படி இருக்கையில்  இந்தக் கல்வியாளர்களின் ஐயங்கள் உண்மையானவைதானா? அல்லது அரசின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சொல்லப்படுகிறதா? என்ற கேள்வியும் நம்மிடம் எழத்தான் செய்கிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்தும் நலிந்தும் வருவதால் கல்வியாளர்களின் ஐயப்பாட்டில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது.

அரசுப் பள்ளிகளின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஆட்சியாளர்கள் நடந்து கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த என்ன செய்யலாம்? கல்வியாளர்கள் கூறும் யோசனைகளை செலவைப் பற்றி கவலைப்படாமல் ஒரு ஐந்து ஆண்டு காலத்துக்கு பரிட்சார்த்தமாக செயல்படுத்தி பார்க்கலாம். மாநிலத்தின் கல்வி வளர்ச்சி என்பது வரவு செலவு பார்க்கவேண்டிய விஷயமல்ல.

பின்வரும் ஆலோசனைகள் ஆட்சியாளர்களை சென்றடைந்து கல்வித்துறை செயல்பாட்டில் இறங்கினால் நாட்டின் கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.ஆலோசனை 1: தொடக்கநிலையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே செயல்படுகின்றன.

இதற்கு அரசு கூறும் காரணம் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிப்பதற்கு வழியில்லை என்பதாகும். ஒரு உணவகத்தில் சாப்பிட வருபவர்கள் போதுமான மேசை மற்றும் உணவு இருந்தால்தான் சாப்பிட அமருவார்கள். சாப்பிட அமர்ந்தால்தான் அரிசி வாங்கவே செல்வேன் என்பது அபத்தமான ஒன்று. அதுபோல் மாணவர்களை சேர்த்தால் ஆசிரியர்களை நியமிப்பேன் என்கிறது கல்வித்துறை.

ஆசிரியர்கள் இருந்தால்தான் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பேன் என்கிறார்கள் பெற்றோர்கள். இரண்டு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் கற்பிப்பது முழுமையாக இருக்காது. இதுவே விவரமறிந்த பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்ப்பதற்கு முழுக் காரணமாக இருக்கிறது.

மாணவர் எண்ணிக்கையைப்பற்றி கவலைப்படாமல் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துவிட்டு அதன்பிறகும் மாணவர் அடைவுத்திறனும் புதிய சேர்க்கையும் அதிகரிக்காவிட்டால் பிறகு வேறு மாற்றுவழியைப்பற்றி யோசிக்கலாம்.

ஆலோசனை 2: நடுநிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒரு ஆசிரியர்  நடுநிலைப் பள்ளிகளில் 5 பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். பல நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடத்துக்கொரு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவதில்லை.

தமிழ் ஆசிரியர் சமூக அறிவியல் கற்பிப்பதும் அறிவியல் ஆசிரியர் தமிழ் கற்பிக்கும் கொடுமையும் நடைபெறுகிறது. பிரியாணி மாஸ்டரை சாம்பார் வைக்கச் சொன்னால் என்னவாகும்? அதுதான் நடக்கிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக பட்டதாரி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் பி.எட். முடித்தவர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்கலாம்.

3 முதல் 5 வயது வரையிலான  குழந்தைகளுக்கு மழலையர் வகுப்புகள் அரசு தொடக்கப்பள்ளி வளாகங்களில் தொடங்கப்படவேண்டும்.  பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பிரியப்படுகிறார்கள். அங்கன்வாடிகள் மாலை வரை செயல்படாத காரணத்தால் பெற்றோர்கள் செலவு செய்தாவது தனியார் மழலையர் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

எனவே, அரசுப் பள்ளி வளாகங்களிலேயே மழலையர் வகுப்புகள் தொடங்கப்படவேண்டும். மழலையர் பராமரிப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அரசு நியமிக்கவேண்டும்.ஆலோசனை 3: அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில் உள்ள குளறுபடிகள் களையப்படவேண்டும்  சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மோகத்தால் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும் பெற்றோர்களை ஈர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. நல்ல முயற்சி. ஆனால், ஆங்கிலவழியில் பயில விரும்பிய மாணவர்களையும் தமிழ்வழியில் பயின்று வரும் மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமரவைத்து ஒரே ஆசிரியரை வைத்து நடத்த வைத்தது பெற்றோர்களை ஏமாற்றும் செயலாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்களுக்காக அச்சிடப்படுகின்ற பாடநூல்கள் பயனின்றி வீணாகின்றன. எனவே, இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதே ஆங்கிலவழியில் பயிலவேண்டும் என அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு விரும்பிய கல்வியைத் தரும்.மேற்கூறிய அனைத்து ஆலோசனைகளும் அரசுக்கு தெரியாமல் இல்லை.

ஆனால், அரசு இதை செய்யாமலிருப்பதற்கு காரணம் இவை அரசுக்கு அதிக செலவு வைக்கும் என்பதால்தான். இலவச திட்டங்களையும், விலையில்லா பொருட்களையும் மட்டும் வழங்கினாலோ, போதிய ஆசிரியர்கள் இல்லாமல் திட்டங்களை வகுத்து அறிவித்துக்கொண்டே செல்வதாலோ எவ்வித பயனும் இல்லை. தமிழகத்தின் கல்வித்தரம் மாற்றம் கண்டிடாது.  

- கி.பாலசண்முகம்
கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

X