மனதின் வலியை அழுத்தி வைக்காதீர்கள்..!

10/4/2018 5:18:35 PM

மனதின் வலியை அழுத்தி வைக்காதீர்கள்..!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

உளவியல் தொடர்! உடல்... மனம்... ஈகோ!

Egotism is the art of seeing in yourself  what others cannot see  George V.Higgins
- ஈகோ மொழி

மனிதன் தன் தேவைகளின் காரணமாக எப்போதும் தன் பிம்பத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான். மனித மனதில் நினைவுகள் எண்ணங்களின்  அடுக்குகளாக இருக்கிறது. ஏராளமான ரகசியங்கள் அதன் அடுக்குகளில் படிமங்களாகப் பதிந்திருக்கின்றன. வெளிப்படுத்தாத, வெளிப்படுத்த இயலாத  ரகசியங்கள் ஒவ்வொரு மனதிலும் புதையலாகப் பதுங்கியிருக்கின்றன. அந்த வகையில் எதிர்மறை எண்ணங்களாலான படலத்தின் கனம் கூடி,  வலுப்பெற்று, அழுத்தம் அதிகரித்துப் போகும்போதுதான் சிலர் வாழ்க்கையில் அசாதாரண முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

France நாட்டில் நான்சி என்ற பெண்மணி இருந்தார். பார்க்க மிகவும் அமைதியானவராக இருந்தார். அவருள் எதிர்மறை எண்ணங்கள்  ஊற்றெடுத்துக்கொண்டே இருந்தது. அவர் அதைச் சரிசெய்துகொள்ள ஒரு வல்லுநரை அணுகினார். Counceling முறையில், அவரைப் பரிசோதித்த  வல்லுநரிடம், “எல்லோரையும் போல எனக்கும் மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் தலை தூக்கியபடி இருக்கிறது” என்றார். “எல்லா பிரச்னைகளும் சரிசெய்யக்கூடியவைதான் நான்சி. உலகில் தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று எதுவுமே கிடையாது தெரியுமா?” என்றார்  வல்லுநர்.

இதைக் கேட்ட நான்சி, “தெரியும். என் பிரச்னைகளுக்கும் மிகச் சுலபமான தீர்வு இருக்கிறது”“அப்படியா என்ன அது?” என்றார் வல்லுநர். “மரணம். ஆம், நான் இறந்துபோனால் என்னோடு என் பிரச்னைகளும் மாண்டுபோகும் இல்லையா?” என்றார் நான்சி. அவருள் எழுந்த எதிர்மறை  எண்ணங்களாலான குரலைக் கேட்டு அதிர்ந்துபோனாலும், “அப்படியா சொல்கிறீர்கள்? எங்கே அதைச் சற்று விரிவாகச் சொல்லுங்கள்” என்று தூண்டில் போடுவது போல் பேசினார் வல்லுநர்.“ஆமாம். மரணம்தான் எனக்குப் பெரிய விடுதலை உணர்வைத் தருகிறது.

அதனால் உருவாகும் அமைதி சில வேண்டாத தோல்வி நினைவுகளை எனக்குள் எழாமல் செய்யும். அதனால்தான் இறப்பு எனக்கு விருப்பமான  ஒன்றாக இருக்கிறது” என்றார் நான்சி. அப்போதுதான் வல்லுநர் மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.“நான்சி, நான் இறந்துபோக வேண்டும்  என்று எண்ணுகிறீர்களே… உங்களின் எந்த ‘நான்’ இறந்துபோக வேண்டும்?” என்றார் வல்லுநர். நான்சி குழப்பத்துடன்,“என்ன கேட்கிறீர்கள்  புரியவில்லையே” என்றதும், “இல்லை நான் ஆகிய உங்கள் மனமா? உடலா?’’ என்றார் வல்லுநர்.

“என் மனம்தான் பேதலித்துப்போயிருந்தது. அதனால்தான் தோல்வியைச் சந்தித்தேன்” என்ற நான்சியிடம் “அதற்காக உடலுக்கு ஏன் தண்டனை  தருகிறீர்கள்?” என்று சொல்லி அமைதியானார். அந்த இடத்தில் நான்சியும் அமைதியானார். வல்லுநர் அந்த அமைதியை கையில் எடுத்துக்கொண்டு,  நான்சியிடம் அவரது பிரச்னையை வாய்விட்டுச் சொல்லச் சொன்னார். நான்சி தான் சந்தித்த தோல்வியைச் சொல்லச் சொல்ல… அவரால் அதைக்  கோர்வையாகச் சொல்லி முடிக்க முடியவில்லை. தன் அபத்தமான முடிவு எண்ணத்தைக் கண்டு அடிக்கடி நொந்துகொண்டார்.

இப்படியான வகையில்தான் இருக்கிறது எதிர்மறை எண்ணங்களின் விளைவுகள். எதிர்மறை எண்ணங்கள் மனதில் அடுக்கு களாக மாறி, ஒன்றுடன்  ஒன்று கலந்து ஒரு சங்கிலித் தொடர் போல் ஒன்றுதிரண்டு நீட்சி கொள்ளும்போது, அவை முதலில் அறிவின் செயல்பாட்டைத் தடுத்துவிடுகிறது.  அதோடு இலக்கற்ற வழியில் பயணிக்கவும் செய்கிறது. அதைத்தான் ‘விநாடி நேரப் பைத்தியக்காரத்தனம்’ என்று குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான  எதிர்மறை எண்ணங்களின் விளைவுகள் அப்படியான சூழ்நிலைகளில்தான் நடந்தேறுகிறது.

அவ்வாறான எண்ணங்கள் வெளிப்படும் வேளைகளில் எண்ணங்களை வாய்விட்டு சொல்ல வைத்தாலே அவற்றின் அடர்த்தி குறைந்து, அபத்தம் புரிந்து,  உயிரின் மீதான ஆசை பெருகி…. அதன் விளைவுகளின்றும் மீண்டுவர வைத்துவிடும். நான்சியையும் வல்லுநர் அப்படித்தான் செய்ய வைத்தார். நான்சி  தனது எண்ணங்களைச் சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென்று “எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு டாக்டர்” என்றார். உடனே, “பிரச்னைகளைச்  சமாளிக்கணுமே” என்ற வல்லுநரிடம், “சமாளிப்பேன்” என்றார் நான்சி.

“குட்” என்றபடி, வல்லுநர் அவரை மருத்துவரீதியாக அணுகி மனதை அமைதிபடுத்த முதலில் ஆழ்நிலை உறக்கத்திற்கு உட்படுத்தினார். வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது எதிர்ப்படும் வலிகளை வார்த்தைகளாகச் சொல்லிப் பார்த்தாலே அதிலிருந்து ஒரு தெளிவும், ‘அதுக்கு இப்படி  பண்ணியிருந்தா வலி ஏற்பட்டிருக்காதே’என்ற மாற்றுச் சிந்தனையும், தீர்வும் உடனடியாக எட்டிப்பார்க்கும். அதேநேரம் வார்த்தைகளின் வெளிப்பாடு  மனதின் வலிகளைக் குறைத்துவிடுவதால் மனம் அமைதியாகி, எடை குறைந்து ஒரு சிறிய சந்தோஷத்தைக் கொண்டிருக்கும்.

மனதின் வலிகளை அழுத்திய நிலையிலேயே வைத்திருக்காமல் வெளியில் எட்டிப்பார்க்க வைத்து வெளிப்படுத்தினால் வலி குறைந்துபோகும்.  இதைத்தான் ‘பிரச்னையை வாய்விட்டு சொல்லு, அடுத்தவங்க கிட்ட பகிர்ந்துகிட்டாலே மனபாரம் குறையுமில்ல’ என்று நம் ஊரில் பெரியவர்கள்  சொல்வார்கள். வலி குறைந்ததும் வாழ்க்கையின் மீதான பிடிப்பும், நம்பிக்கையும் உடனடியாக எட்டிப்பார்க்கும். அந்தப் பிடிப்புதான் வாழ்க்கையின்  இனிமையையும், உயிரின் வல்லமையையும் ரசிக்க வைக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதிற்குள்ளேயே போட்டு பூட்டிக்கொண்டு சுய  அடக்குமுறையால் (Self invert) அழுத்தங்களுடன் வைத்திருப்பதுதான் அவை ஒன்றுதிரண்டு அடர்த்திகொள்ள உதவுகிறது.

அவற்றின் கனம் கூடி வெளிப்படும்போதுதான் ஆளுமையை சிதைக்கும் வகையில் இருக்கிறது. அதுதான் பரிதாபம். எதிர்மறை எண்ணங்கள் எப்போதும்  எண்ணங்களாக, ஆழ்மனதில் தங்கியே நிற்கிறது. மனம் பதற்றமடையும்போதும், குழம்பும்போதும், அவை கலங்கி மேலெழுந்து எட்டிப்பார்க்கும். அந்த  நிலையில்தான் ஈகோ அவற்றை இனம் கண்டு சுட்டிக்காட்டுகிறது. மேற்சொன்ன வகையில் ஈகோவை நிர்வாக ரீதியாக அணுகி, மனதின் குழப்பங்களையும், பதற்றத்தையும் குறைத்துக்கொண்டால் சிறப்பான பலனைப் பெற முடியும்.சிறிய பயிற்சியுடன் கலந்த முயற்சி… பலனாய்த் தருவது  விலைமதிப்பில்லாத வாழ்க்கையை.

(தொடரும்)

X