அரசின் மானியங்களைப் பெற உதவும் உத்யோக் ஆதார் தொழில் பதிவு!

10/11/2018 12:54:27 PM

அரசின் மானியங்களைப் பெற உதவும் உத்யோக் ஆதார் தொழில் பதிவு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இப்போது உங்கள் உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் தொழில் அனைத்திற்கும் மத்திய அரசின் உத்யோக் ஆதார் பதிவு பெற்றிருப்பது நல்லது. இந்த பதிவினால் உங்களுக்கு பல்வேறு வகையான மானியங்கள், சலுகைகள் மற்றும் சான்றிதழ்கள் எளிய முறையில் பெற்று தொழில் நடத்தலாம். நீங்கள் உற்பத்தி, சேவை சார்ந்த தொழில் செய்பவரா..? அப்படியென்றால் தங்கள் தொழிலை குறு, சிறு மற்றும் மத்திய தொழில் பதிவு செய்து உள்ளீர்களா..? செய்யவில்லையென்றால் உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்.

இதுவரை நடந்துகொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் பழைய முறையில் பதிவு செய்திருப்பீர்கள் அல்லது பதிவு செய்யாமல் நடத்திவரும் தங்களின் உற்பத்தி மற்றும் சேவைத் தொழிலை இப்போது குறு, சிறு, மத்திய தொழில்களின் புதிய உத்யோக் ஆதார் (UDYOG AADHAR for MSME) என்ற பதிவை செய்யவேண்டும். இதுவரை தங்களிடம் இருக்கும் பதிவுகள் காலாவதி ஆகிவிட்டன. புதிய தொழில் தொடங்குபவர்கள் தொழில் தொடங்கும் முன்பதிவு செய்யும் முறை (SSI PART 1) இப்போது இல்லை. தொழில் தொடங்கி முதல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்த பிறகே உத்யோக் ஆதார் பதிவு செய்ய வேண்டும்.

உத்யோக் ஆதார் யாரெல்லாம் பதிவு செய்யலாம்..?

உற்பத்தி சார்ந்த குறுதொழில்கள் எந்திர மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு குறைவாக, சிறுதொழில்கள் எந்திர மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை, மத்திய தொழில்கள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை எந்திர மதிப்பு உள்ள தொழில்கள், சேவை சார்ந்த குறு தொழில்கள் ரூ.10 லட்சம் வரை, சிறு தொழில்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை, மத்திய தொழில்கள் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை எந்திர மதிப்பு இருக்கவேண்டும்.

இந்தப் பதிவு செய்வதால் என்ன பயன்..?

* நீங்கள் வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களில் கடன் பெற்றால் கண்டிப்பாக இந்த உத்யோக் ஆதார் பதிவு அவசியம். உத்யோக ஆதார் பதிவு செய்திருக்க வேண்டும்.
* வருமான வரி தாக்கல் மற்றும் பதிவு செய்பவர்களுக்கு இந்தப் பதிவு மிகவும் அவசியம்.
* பார்கோடு வாங்குபவர்களுக்கு 75% செலவில் மானியம் மத்திய அரசின் MSME வழங்கும். இதனைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம்.
* அறிவுசார் சொத்துரிமையில் காப்புரிமை பெற 50% வரை மானியம் பெற இந்தச் சான்றிதழ் அவசியம்.
* வங்கியில் கடன் அல்லது உங்கள் சொந்த முதலீட்டில் உற்பத்தித் துறையில் தொழில் தொடங்கினால் மாநில அரசின் பல திட்டங்களில் மானியம் கிடைக்கும்.
* 25% எந்திர மதிப்பில் மானியம்
* 3 ஆண்டுகள் மின்சார மானியம்

மேற்கண்ட மானியங்களைப் பெற அவசியம் உத்யோக் ஆதார் பதிவு செய்திருக்க வேண்டும்.

* உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த துறையில் தொழில் தொடங்கும்போது ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் தொழிலதிபர்கள் எந்தவித சொத்துப் பிணையமும் வங்கிகளுக்கு தரத் தேவையில்லை. இவ்வகை தொழில்துறை கடன் பெற இந்தப் பதிவு மிக அவசியம். நீங்கள் கடனை திருப்பி கட்ட தவறும் பட்சத்தில் இதை அரசு CGTMSE மூலம் கட்டும்.
* ரூபாய் 2 கோடி வரை உற்பத்தி மற்றும் சேவைத் துறை தொழில்களுக்கு சிட்பியின் பிணையமில்லா கடன் பெற வழிவகை செய்கிறது. இதில் உங்கள் திட்டங்கள் சிறப்பாக இருக்குமானால் CGTMSE என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் பிணையமில்லா கடன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் உதவி பெற உத்யோக் ஆதார் பதிவு செய்வது அவசியம்.
* மின்சார இணைப்பு பெறவும், தொழிற்சாலைகளுக்கான கட்டணங்களில் மின்தொகை செலுத்தவும் 3A, 3B சலுகைக் கட்டணங்களில் செலுத்த இந்தப் பதிவு அவசியம்.
* ஜி.எஸ்.டி. வரியிலும் பதிவு செய்ய முக்கிய ஆவணமாக இந்த உத்யோக் ஆதார் பார்க்கப்படும்.
* உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி சான்று பெற உத்யோக் ஆதார் அவசியம்.
* மத்திய அரசு உங்கள் தொழிலை அங்கீகரிக்கவும் அவர்களின் பல திட்டங்களில் பயன்பெற்று தொழில் நடத்த உங்களுக்கு இந்த உத்யோக் ஆதார் அவசியம்.
* உத்யோக் ஆதாருடன் NSIC (National Small Industries Corporation) நிறுவனத்தில் பதிவு செய்யும் துணை நிறுவனங்களுக்கு தாய் நிறுவனத்திலிருந்து விண்ணப்பப் பதிவுக் கட்டணம் முழுவதும் விலக்கு அளிக்கப்படும். மேலும்10% முன்பணம் கட்டவேண்டிய முறையிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
* பதிவு பெற்ற உங்கள் நிறுவனம் வேறு நிறுவனங்களுக்கு உற்பத்திப் பொருள் விற்பனை அல்லது சேவை செய்யும்போது அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் பணத்தை கொடுக்க மறுக்கும்பட்சத்தில் இதற்காக அரசு அமைத்துள்ள கமிட்டியின் மூலம் காலதாமதத்திற்கு வட்டியுடன் உங்களின் பணத்தை பெற்று தரமுடியும். இதற்கு நீங்கள் உத்யோக் ஆதார் பதிவு பெற்ற நிறுவனமாக இருத்தல் அவசியம்.
* PF, ESI போன்ற அமைப்புகளில் பதிவு பெறவும் இவை உதவும்.
* வங்கிகள் உங்கள் கடனை பதிவு செய்யும்போது பதிவுக் கட்டணம் தள்ளுபடி பெற இந்த உத்யோக் ஆதார் அவசியம்.
* மாசு கட்டுபாட்டு வாரிய சான்று மற்றும் தரநிர்ணய சான்று பெறுவதற்கும் இந்தப் பதிவு அவசியம்
* இப்படி அரசு மானியம் மற்றும் கடன் உத்தரவாதம் பெற என அரசின் அனைத்து சேவைகளைப் பெறவும் இந்த உத்யோக் ஆதார் பதிவு அவசியம். இப்போது உத்யோக் ஆதார் பதிவில் உற்பத்தி மற்றும் சேவைத் துறையை இதில் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

யாரெல்லாம் பதிவு செய்யலாம்..?

* உற்பத்தியாளர்கள்
* சேவைத் தொழில்

பதிவு செய்ய தேவையான முக்கிய ஆவணங்கள்
 
உங்கள் பெயர், ஆதார் எண், நிறுவனத்தின் பெயர், தொழிற்சாலை முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் ஐடி, வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி அடையாள எண் (IFS CODE), மொத்த முதலீடு, தொழிலாளர்களின் எண்ணிக்கை, தொழில் தொடங்கிய தேதி போன்ற விவரங்கள் அவசியம். இதில் பதிவு செய்ய ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைத்துள்ள தொலைபேசி எண் மிகவும் அவசியம். இது இருந்தால் மட்டுமே உத்யோக் ஆதாரின் இணையபக்கத்தில் நுழைய முடியும். தேவையான அனைத்து விவரங்களையும் கொடுத்த பின்னர் பதிவு செய்து அதற்கான சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சில தொழில்கள் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு மட்டும் என அரசினால் வரையறுக்கபட்டுள்ளது. பதிவு செய்யும்போது இதனை கவனத்தில் கொண்டு பதிவு செய்தல் வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சிகளில் கலந்துகொள்ள குறு, சிறு தொழில்களுக்கு பல சலுகைகள் அரசினால் வழங்கப்படுகிறது. உதாரணமாக, பயண செலவில் 75% வரை மானியமாக கிடைக்கும். கண்காட்சி அரங்க ஸ்டால் வாடகையில் கூட மானியம் கிடைக்கும். இதற்கு உத்யோக் ஆதார் மிகவும் அவசியம்.

வேறு பெரிய நிறுவனங்களுடன் நீங்கள் போட்டி போட்டுக்கொண்டு அரசு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கும்போது குறு தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் 15% வரை விலை அதிகமானாலும் உங்களுக்கே அந்த ஆர்டர் கிடைக்கும். இந்தப் பயனை பெறுவதற்கும் உத்யோக் ஆதார் பதிவு அவசியம். அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கும்போது குறு, சிறு தொழில்களுக்கு தாங்கள் கொடுக்கும் வெளி வேலைகளில் 20 சதவிகிதம் கொடுக்கவேண்டும். இதனால் உத்யோக் ஆதார் பதிவு மிகவும் அவசியம்.
 
உத்யோக் ஆதார் பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் http://udyogaadhaar.gov.in/UA/UAM_Registration.aspx என்ற இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இதனைப் பற்றிய பிற ஆலோசனைகளுக்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 044  2225208 / 82 / 83/84, 044  2225 2085 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.
 
- திருவரசு

X