ஈருடல் ஓர் உயிர் என்பது நீ... நான்... இல்லை நாம்

11/26/2018 5:27:36 PM

ஈருடல் ஓர் உயிர் என்பது நீ... நான்... இல்லை நாம்

உளவியல் தொடர் 54

With the disappearance of God the Ego moves forward to become the sole divinity -  Dorothee Solle
-ஈகோ மொழி

ஈகோ மனித மனதில் நிலையில்லாமல் இருப்பது என்பது எப்போதும் சாத்தியமானதே இல்லை. மனிதர்களின் தன்மைக்கு ஏற்ப ஈகோ ஏதேனும் ஒரு வடிவத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்தவகையில் ஈகோவின் தன்மைகளையும், வடிவங்களையும் பார்த்துவந்தோம். ஈகோவைத்தாண்டி, அதன் எல்லைகளுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதுபற்றி இனி பார்க்கலாம்.

ஈகோவுக்கு அப்பால்

ஈகோவை உயிர்த்தன்மையான வஸ்துவாகவும், சுய வலியுறுத்தல் (Self assertion) கொண்ட மதிப்பான பொருளாகவும் ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், மனித வாழ்க்கையில் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், வாழ்க்கையை சிறப்புடன் வாழவும் அது ஒன்றுதான் வழிவகை செய்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதோடு உணர்ச்சிகளின் அனைத்து வெளிப்பாடுகளிலும் ஈகோ இருக்கிறதா? ஈகோ இல்லாத, ஈகோ கொஞ்சமும் வெளிப்படாத, ஈகோவைத் தாண்டிய உறவுநிலையோ, செயல்பாடோ இருக்கிறதா என்றால்…. ‘இருக்கிறது’ என்றே சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

எப்போது… எப்படி என்றால், மனிதரது ஆன்ம ஆற்றல் (Psyche Energy) ‘நான்’என்ற மேல்கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும்போது ஈகோவும் தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ளும் சூழல் உருவாகிறது. அப்படியான சூழ்நிலைகளைப்பற்றிப் பார்க்கலாம்.

கரைந்த ஈகோ நிலை

மனிதர்களது உணர்ச்சி வெளிப்பாடு வார்த்தைகளாகவோ செயல்பூர்வமானதாகவோ இருக்கும்போது, சில நேரங்களில் ஈகோவின் செயல்பாடு அமைதியாகவோ, வெளிப்படாதவாறோ இருந்துவிடுவதும் உண்டு. உதாரணமாக, ஒரு தாய் தன் குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தும்போது, அவளின் செயல்பாடு அவளது ஈகோவின் வெளிப்பாடாக இருப்பதில்லை. அந்த வெளிப்பாட்டின் வாயிலாக அவள் தனது முக்கியத்துவத்தைப் பெறுவதற்கோ, தனது இருப்பை பிரபலப்படுத்திக்கொள்வதற்கோ நினைப்பதே இல்லை. அந்த அன்பின் வெளிப்பாட்டில் அப்படியான எண்ணம் எழவே எழாது.

எப்போதும் ஒரு தாயின் அன்பின் வெளிப்பாடு குழந்தையின் மீதான பாசத்தை  உண்மையாகப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். அத்தகைய வெளிப்பாட்டின்போதுதான் அவளின் ஆன்ம சக்தி நான் எனும் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும்போது, ஈகோ கரைந்த நிலையில் இருக்கும். எந்த இடத்திலும் அங்கே ஈகோ துருத்திக்கொண்டு நிற்காமல், திரவ நிலையில் கரைந்தே இருக்கும். நான் தனது எல்லைகளையும், மேல் ஓட்டையும் (Outer Shell) உடைத்துக்கொண்டு, தனது அடையாளம் குறித்தான பிரக்ஞை இழந்து, ‘ஒற்றுமை’(TOGETHERNESS) நிலையை அடையும்போது இந்த கரைந்த ஈகோநிலை சாத்தியமாகிறது.

உணர்ச்சி வெளிப்பாட்டில் கரைந்த ஈகோ நிலை ஒருவகையில் அதிர்ஷ்டகரமான நிலை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் உயர்வு தாழ்வு இல்லை, வெற்றி தோல்வி இல்லை, தாக்குதல் - தற்காப்பு இல்லை, மரியாதை - அவமானம் இல்லை, புகழ்ச்சி - அவதூறு இல்லை, முக்கியத்துவம், அங்கிகாரம், ஏக்கம், பாராட்டு போன்று எதைப்பற்றிய எதிர்பார்ப்பு - ஏமாற்றம் இருப்பதில்லை என்பதாக உள்ளது. அதனாலேயே இந்த நிலை மிகவும் ரம்யமான நிலையாக இருக்கிறது.

கரைந்த நிலையில் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் ஆதரவிற்காகவோ, பதில்  மரியாதைக்கோ ஏங்கியிருப்பதில்லை. இன்னும் சொல்வதானால் ஓர் உணர்ச்சி வெளிப்பாட்டை (குறிப்பாக அன்பை) நாம் ருசிப்பதைப்போலவே மற்றவருக்கும் முழுமையாக ஊட்டிவிடுவதையோ, உட்புகுத்துவதையோ (Impregation) போன்றதுகரைந்த ஈகோ நிலையில் யார் வெற்றியாளர், யார் தோல்வியாளர் என்ற விஷயம் ஒரு பொருட்டாகவே இருக்காது.

இருவரில் ஒருவர் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டால், மற்றவர் அதன் வலியை முழுமையாக உணரக்கூடியவராக இருப்பார். ஒருவர் மகிழ்ச்சியை எதிர்கொண்டால் மற்றவர் அதன் சந்தோஷத்தை ரசிக்கக்கூடியவராக இருப்பார். இப்படியான நிலையை அடைந்தவர்களைத்தான்  ‘ஈருடல் ஓருயிர்’ கொண்டவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இருவரின் செயல்பாடும் ஒரே மாதிரி இருப்பதனால் இவர்களே Perfect ஆன  MADE FOR EACH OTHER.  இங்கு நீ... நான்… இல்லை. நாம் மட்டும்தான்.

கரைந்த நிலையிலான இந்த ஈகோ நிலைக்கு சிலர் தாங்களாக உணராமல் அதிர்ஷ்டக்கரமான வழியில் வந்தடைவார்கள்.  ஆம். மற்ற ஈகோநிலைகளைவிட இதில்தான் நெருக்கமான மனநிறைவும், மகிழ்வான உறவுநிலையையும் நீடித்த நிலையில் அடையமுடிகிறது. இருந்தபோதும், சிலர் மட்டுமே இந்த நிலையின் இனிமையை உணர்ந்து நீடித்த நிலையில் அனுபவிக்க நினைத்திருப்பார்கள்.

வேறு சிலர் இந்த கரைந்த நிலையிலான ஈகோ நிலையை மேலோட்டமாக அனுபவிப்பவர்களாக இருந்துவிட்டு, அதன் இனிமையை விட்டு விலகி தங்களின் அடிப்படை ஈகோ நிலையை அடைபவர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் இந்த நிலை பற்றிய புரிதல் இன்றி வாழ்க்கை முழுவதும் இந்நிலையை சந்திக்காதவர்களாகவே இருந்துவிடுகிறார்கள்.

‘நான்’ என்பது தனது மேல்கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும்போது ஈகோ தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டு எடுக்கும் அடுத்த நிலை எது? ஈகோவின் அடுத்த நிலையை அடுத்த இதழில் பார்ப்போம்…

–தொடரும்
ஸ்ரீநிவாஸ் பிரபு


குரு சிஷ்யன் கதை

பசித்திரு!

 பக்கத்து ஊரிலிருந்து குருவை பார்க்க வந்திருந்த பலரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞன் எழுந்து குருவிடம் வந்து, “எந்த வேலையையும் என்னால் வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை குருவே. நீங்கள்தான் ஒரு வழி சொல்லணும்!’’ என்றான்.இளைஞன் சொன்னதைக் கேட்ட குரு திரும்பிப் பார்த்து சிஷ்யனிடம், “நீ என்ன நினைக்கிறாய்?’’ என்றார்.

உடனே சிஷ்யன், “அவருக்குப் பசி இல்லை குருதேவா!’’ என்றான் பணிவோடு.குரு சிரித்துவிட்டு, “மிகச் சரியாகச் சொன்னாய்’’ என்றார். “சரி அதைச் சற்று விளக்கமாகச் சொல்’’ என்றார்.உடனே சிஷ்யன், “ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் ஒருநாள் அரண்மனையில் வாள் பயிற்சி செய்துகொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது.

அதன் மீது வாளை வீசினான். எலி லாவகமாக தப்பித்துச்சென்றது. அதைத் துரத்திச் சென்று மீண்டும் வாளை வீசினான். அது மீண்டும் தப்பித்துச் சென்றது. உடனே மனம் உடைந்த இளவரசன் அரசரிடம் கவலையோடு சொன்னான், “இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை வெற்றிகொள்ள முடியவில்லை!”  என்றான்.

இளவரசனைப் பாவமாக பார்த்த அரசர், “எலியைக் கொல்ல வாள் எதற்கு? அரண்மனைப் பூனை போதுமே!” என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது.

ஆனாலும் எலி தப்பித்துச்சென்றது. அப்போது மந்திரி வந்தார். அரசரும், இளவரசரும் சோகமாக இருப்பது பற்றி அறிந்ததும்,‘‘நம்நாட்டுப் பூனைகள் எதற்கு லாயக்கு..? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே, அங்கிருந்து வரவழைப்போம்” என்றார். அது போலவே பூனைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்றது.

எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துகொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன், “இளவரசே!

இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? என் வீட்டுப் பூனையே போதும்” என்றான்.இளவரசருக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் “சரி...எடுத்து வா” என்றார். காவல்காரன் பூனையை எடுத்துவந்தான்.

அந்தப் பூனை எலியை ஒரே தாவலில் கவ்விக்கொண்டது. இதனைப் பார்த்த இளவரசர், “என்ன அதியசம்! நன்கு வளர்க்கப்பட்ட பூனைகளிடம் இல்லாத திறமை இந்தச் சாதாரண பூனைக்கு எப்படி வந்தது? என்று வியந்தார். அதற்குக் காவலாளி“இளவரசே என் பூனைக்கு பெரிதாகத் திறமையோ, பயிற்சியோ எதுவும் இல்லை. என் பூனை ரெண்டு நாளாக பட்டினி, அதுக்கு ரொம்ப பசி அவ்வளவுதான்” என்றான்.

அப்போதுதான் இளவரசருக்கு புரிந்தது. அரண்மனைக்குள் வளர்ந்த பூனைகள் நன்றாக சாப்பிட்டு கொழுத்திருந்ததால் அவற்றுக்கு பசி என்பதே தெரியாமல் போயிற்று. அதனால் அவற்றால் எலியை பிடிக்கமுடியாமல் போனது. ஆக, எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்...’’என்று முடித்தான் சிஷ்யன்.

சிஷ்யன் சொன்னதைக் கேட்டு சுற்றி யிருந்தவர்கள் பலமாக கை தட்டினார்கள். மகிழ்ச்சியடைந்த குரு,“மிகச் சரியாகச் சொன்னாய். உன் விளக்கம் அற்புதம்’’ என்று பாராட்டிய குரு, சிஷ்யனுக்கு தட்டிக்கொடுத்து வாழ்த்தினார்.  

–தொடரும்

X