பகுதிநேர ஆய்வுப்படிப்பு குளறுபடிகள்!

12/6/2018 5:29:59 PM

பகுதிநேர ஆய்வுப்படிப்பு குளறுபடிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சேலம், பெரியார் பல்கலை, உறுப்புக்கல்லூரிகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில், பகுதிநேர பிஹெச்.டி., எம்.பில் ஆய்வுப்படிப்புகள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பெரியார் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே இதில் சேர முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு மாவட்டங்களிலிருந்து ஆய்வுப்படிப்புக்கு விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து கல்வியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்.

முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற இலக்கை எட்டிப்பிடிக்க இயலாதவர்களாக நாம் உள்ளோம். அனைவருக்கும் கல்வி என இங்கு நான் தொடக்கக் கல்வியை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இயற்றவேண்டிய அளவுக்கு ஆண்ட அரசுகள் கல்வியளிப்பதில் கையாலாகாத அரசுகளாகவே இருந்துள்ளன. 14 வயதுக்குட்பட்டோருக்கான தொடக்கக் கல்வியை அளிக்க முடியாத அவலத்தில் இருக்கும்போது தேசிய கல்விக்கொள்கை (1986) அனைவருக்கும் உயர்கல்வி சென்றடைய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அவ்வாறு அளிப்பதற்கான போதுமான அடிப்படை வசதிகளை அளிக்க இயலவில்லை.

மேலும், பள்ளிக்கல்வியை முடித்த அல்லது முடிக்க இயலாதவர்களின் ஏழ்மை, குடும்பப் பின்னணி, உடல்நலமின்மை, நேரம் ஒதுக்க இயலாமை, வேலைக்கு செல்லவேண்டிய அவசியம் போன்ற காரணங்களும் உயர்கல்வியைத் தொடரமுடியாமல் போனதற்குக் காரணங்களாக அமைந்தன.

எனவே, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களும் அதன் உறுப்புக்கல்லூரிகளும் திறந்தவெளி, தொலைதூர, அஞ்சல்வழிக் கல்வி முறைமையை நடைமுறையில் கொண்டுவரப் பரிந்துரைக்கப்பட்டன. இதற்கான நியதிகளும் வரைமுைறகளும் ஏட்டளவில் இருந்தாலும், நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாகக் கூறப்படுகின்றன.

கல்லூரிக்கே செல்லாமல், தனக்காக பிறர் ஒருவரை ஆய்வேடு தயாரிக்கச் செய்து உயர் ஆய்வுப் பட்டங்களைப் பெறும் வழக்குகளும் மிகுதியாக உள்ளன எனப் பேசப்படுகிறது. ஆசிரியர்களாக நன்னடத்தையை மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய ஆசிரியர் பட்டப்படிப்புக் கல்லூரிகள் கூட வெளிப்படையாக ரெகுலர் இர்ரெகுலர் என மாணவரைச் சேர்த்து கல்லூரிக்கே வராவிட்டாலும் பணத்தை வாங்கிக்கொண்டு தேர்வு எழுத அனுமதிப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்கின்றன.

ஒருநாள்கூட கல்லூரிக்குச் செல்லாமல் பகுதிநேர ஆய்வுப்படிப்பை முடிக்கும் நிலையைத் தவிர்க்கவே பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் அமைந்த மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ளோர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இப்படிப்புகளில் சேர அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று நுழைவுத்தேர்வு நடத்தி, நேர்காணல் முடிந்தபிறகு தற்போது இப்பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அறிவித்து ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இவ்வாறான குழப்பமான முடிவுக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்குமா? வேந்தர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்…

பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீத கிருஷ்ணன்சேலம் பெரியார் பல்கலை, உறுப்பு மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர்(M.Phil) / முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு கையாளப்பட்ட சேர்க்கை முறை பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. முறையாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, எழுத்துத் தேர்வும் நேர்காணலும் நடத்தப்பட்ட பிறகு புதிய காரணம் காட்டிச் சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

அதனால் ஆர்வத்தோடு சேர்க்கைக்கு ஆயத்தமாக இருந்த கல்லூரி/பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். இந்தப் படிப்புகளில் பகுதிநேர மாணவர்களாகச் சேரும் ஆசிரிய-மாணவர்கள் (Teacher-candidates), பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டுமே பணிபுரிபவர்களாக இருக்கவேண்டும். இந்த விதி முதலில் இல்லாததோ, மறக்கப்பட்டுவிட்டதோ இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. இவற்றில் எது காரணமாக இருந்தாலும், பிற மாநில மாணவர்கள் இதன் தாக்கத்திற்கு உள்ளாவதில் ஒரு நியாயமும் இல்லை.

பணம் கட்டி விண்ணப்பித்து, தேர்வுக்குத் தயாராகி, தேர்வெழுதி, தேறி,நேர்காணலுக்கு வந்து, அதிலும் தேர்வாகி, பயணங்கள் மேற்கொண்டு, பணத்துடன் பொன்னான காலத்தையும் செலவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில் ‘உமக்குத் தகுதியே இல்லை; நீர் விண்ணப்பித்திருக்கவே கூடாது’ என்பதில் தவறு யாருடையது? ஒரு கடுமையான ஓட்டப்பந்தயம் முடியும் தருவாயில் (ஏன், ‘முடிந்த பிறகு’ என்றே கூட சொல்லலாம்) வெற்றிக் கம்பத்தை இடமாற்றம் செய்வது போல் அல்லவா இது இருக்கிறது!

இத்தகைய தவறுகள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கிறோம். ஒரு தனிப்பட்ட மனிதரோ, நிறுவனமோ செய்யும் தவறை சம்பந்தப்பட்ட அதிகாரியோ, உயர்நிறுவனமோ கண்டிப்பதை அல்லது தண்டிப்பதை பார்க்கிறோம்; ஆனால், ஓர் அரசு அல்லது பல்கலைக்கழகம் செய்யும் இத்தகைய தவறுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

(எண் பலகையில் ‘அ’/‘G’ அடையாளம் போடப்பட்ட கார், சாலை விதிகளை மீறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது! முதன்மை மருத்துவரே சிகரெட் பிடிக்கிறார்!). இந்நிலை மாறவேண்டும். ஆற்றொழுக்குப் போல கட்டுப்பாடுகளின் காப்பும் மேலிருந்து கீழாக நடைமுறைப்படுத்தப்படுவதுதான் எளிது; இயற்கையானது.

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி தவிர்த்த மற்ற தொலைதூர மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களால் பெரியார் பல்கலையில் பகுதி நேர எம்.ஃபில், பிஹெச்டி. படிப்பை வெற்றிகரமாகச் செய்ய முடிவதில்லை, அதனால் இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என்பது நியாயமான காரணமாகவும் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற கட்டுப்படுத்தும் விதிகளை அமல்படுத்துவதில் ஓராண்டேனும் கால அவகாசம் தேவை. தளர்த்துவிதிகளை உடனடியாகவும் செயல்படுத்தலாம். எப்படியும், முன்னால் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

-தோ.திருத்துவராஜ்

X