பல கோடி குடும்பங்களை வாழவைப்பது தனியார்துறை வேலைகளே!

12/20/2018 3:32:54 PM

பல கோடி குடும்பங்களை வாழவைப்பது தனியார்துறை வேலைகளே!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

படிப்புக்கேற்ற வேலையா? வேலைக்கேற்ற படிப்பா?

நம் நாட்டைப் பொறுத்தவரை மக்கள் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே உள்ள சூழலில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடும் களத்தில் இறங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே உள்ளது. ‘இத்தனை கோடி பேருக்கு எப்படி, யாரு, எப்போ வேலை வாங்கிக் குடுக்கப் போறாங்க..?’ இந்தக் கேள்விக்கு, பெரும்பாலும் யாருமே நியாயமான பதிலைத் தருவதே இல்லை. அரசாங்கத்தை, அதிகாரத்தை, அரசியல் தலைவர்களைக் குறை சொல்லியே பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டோம். ‘வேலை வாய்ப்பு’ - பல சமயங்களில் உருவாவவதில்லை. உருவாக்கப்படுவது. யார் இதனை உருவாக்கலாம்..? அரசாங்கம் என்று சொன்னால் அது ஓரளவுக்குத்தான் உண்மை.

அதையும் மீறி, ‘நம்மால்’ என்று சொல்வதே மிகச் சரி.சமுதாயத்தில் உள்ள மொத்த, அலுவலர்கள், ஊழியர்கள், அடிமட்டத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் எத்தனை பேர் அரசுத் துறையில் பணி செய்பவர்கள்..? மிதமிஞ்சிப் போனால் 10% பேர் இருப்பார்களா..? மீதம் உள்ளவர்கள் தனியார் துறையில் உள்ளவர்கள்; அல்லது, சுயமாகத் தொழில் செய்பவர்கள். நன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஓர் உண்மை சட்டென்று புரியும். மேலே சொன்ன இரண்டு பிரிவுகளுமே ‘தனியார்’தானே..?

தனிப்பட்ட ஒருவர் அல்லது சிலர் எடுத்துக்கொண்ட முயற்சிதான், பல கோடிக் குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. தனக்கு வேலை கொடுத்துக் கொண்டு பிறருக்கும் வேலை வழங்குகிற வேலையை யார் செய்தாலும் அவர்கள்தாம் சிறந்த வேலை செய்பவர்கள். அவர்களால்தாம் இந்தச் சமூகம் செழித்துவருகிறது. அவர்களை நாம் ஊக்கப்படுத்துகிறோமா..? அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்கிறோமா..?

தனியார் துறை என்றாலே முதலாளிகள், சுரண்டல்காரர்கள், ஆதிக்க சக்திகள் என்றெல்லாம் சினிமாத்தனமான வறட்டுச் சித்தாந்தங்களை வளர்த்து வைத்திருக்கிறோம். நம் ஊரில், நம் தெருவில் உள்ள சிறிய காய்கறிக்கடை வைத்திருப்பவரும் ‘தனியார் துறை’ சேர்ந்தவர்தான்; முதலாளிதான்; வேலை வாய்ப்பு நல்குபவர்தான். அந்தக் கடையில், கூலிக்கு வேலை செய்யும் யாருக்குமே கடை நடத்துபவர்தான் முதலாளி; அவர் தருகிற கூலியால்தான் பணியாளின் குடும்பம் நல்லபடியாக வாழ்ந்துவருகிறது.

ஒரு கடையில் வேலை செய்து, தனது பிள்ளைகளைப் படிக்கவைத்து, அவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்து, குடும்பத்தையே நல்ல வளர்ந்த நிலைக்கு எடுத்து வந்தவர்கள்தாம் ஆயிரமாயிரம் பேர். இந்த உண்மை, எத்தனை பேரால் எடுத்துச் சொல்லப்படுகிறது..? வேலை வாய்ப்பு என்றாலே அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி முதலீடு, வர்க்க பேதம், உரிமைகள், ஊர்வலம், போராட்டம், வேலை நிறுத்தம் என்று என்னவெல்லாம் சொல்லி ஏய்த்துக்கொண்டும் ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்..? இவை எல்லாமே பொய்முகங்கள்.

தனது சொந்த முயற்சி, கடின உழைப்பு, முழுமையான ஈடுபாடு, துறை சார்ந்த அனுபவம்... இவற்றின் மூலம்தான் வேலையை உருவாக்க முடியும்; வருமானம் ஈட்டமுடியும். எந்த முயற்சியும் எடுக்காமல், உழைப்பதற்குத் தயாராக இல்லாமல், ‘என்னால் முடியும்’ என்கிற குருட்டுத்தனமான தன்னம்பிக்கை வாசகங்கள், பணிச் சந்தையில் ஒரு தம்பிடிக்கும் உதவாது.‘உன்னிடம் இல்லாத திறமையா...?’, ‘நீ யார் தெரியுமா..?’, ‘நீ நினைத்தால் மலையைச் சுருட்டிப் போடலாம்; வானத்தை வில்லாக வளைக்கலாம்’ என்று கவிதை வசனம் பேசுகிற யாரையும் துளியும் நம்பிவிட வேண்டாம். இவர்களில் யாராலும் யாருக்கும் ஒரு வேலையும் பெற்றுத் தரமுடியாது.

வாழ்க்கையில் வெற்றி பெற, வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்ட - ஒரே வழிதான் உள்ளது. எங்கே என்ன வேலை கிடைத்தாலும் உடனடியாகச் சேர்ந்து தனது மிகச் சிறந்த பங்களிப்பைத் தருவது. ஒரு சிறிய புள்ளியில் தொடங்கி சிறிது சிறிதாக வளர்வதுதான் வாழ்க்கையின் ஆகச் சிறந்த வழிமுறை. இதற்கு உதவுவது - தனியார் துறை. இதிலும், மிகச் சிறு முதலாளிகள்தாம் நமக்கு உற்ற நண்பர்கள். உடனடியாகக் கேட்ட மாத்திரத்தில் கைகொடுப்பவர்கள் இவர்கள்தாம்.

‘பாருப்பா... என்னால நெறைய சம்பளம் எல்லாம் குடுக்க முடியாது... உன் சாப்பாட்டுக்கு, துணிமணிக்கு, படிப்புக்கு.. போக, ஏதோ நூறோ இருநூறோ தர்றென்.. பரவாயில்லைன்னா இன்னைக்கே வேலைக்கு சேர்ந்துக்கோ...’ இந்த வாசகம்தான் இன்று பல நூறு சாதனையாளர்களை உருவாக்கி யிருக்கிறது. சிறு வணிகம், ஒரு நபர் வியாபாரம், கடைகள், கிடங்குகள்... இங்கெல்லாமிருந்துதான் வேலை வாய்ப்புகள் முகிழ்க்கின்றன. எத்தனை இளைஞர்கள் இந்தக் கோணத்தில் சிந்திக்கிறார்கள்..? அல்லது அவர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கிறோம்...?

துணிக்கடை, இரும்புக் கடை, சிற்றுண்டிக் கடை, நகலகம் (‘ஜெராக்ஸ்’) மருத்துவ ‘கிளினிக்’, பயிற்சி மையங்கள்… என்று எத்தனை இடங்களில் ‘பணியாளர் தேவை’, ‘விற்பனை முகவர் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று அட்டைகள் தொங்குகின்றன! இவற்றையெல்லாம் ‘வேலை வாய்ப்பு’ என்று ஏற்றுக்கொள்ள நமது மனம் ஒப்புக்கொள்வதில்லை. ஏன்..? இந்த விஷயத்தில் நம் எல்லோர் மீதும் தவறு உள்ளது. சிறு, குறு தொழில்கள் மூலம் ஏற்படுகிற வேலை வாய்ப்புகளைப் பற்றி விரிவாக யாரும் எடுத்துச் சொல்வதே இல்லை. நாமும் இதுகுறித்துப் பெரிதாக ‘அலட்டிக்கொள்வதும்’ இல்லை. விளைவு..? இன்னமும் கண்ணுக்குத் தெரியாத துறையாகவே இது இருந்துவருகிறது.

இன்னொருவருக்கு வேலை தருகிற, ஊதியம் வழங்குகிற ஒவ்வொருவரையும் கவனிக்கிற பழக்கம் நமக்கு வரவேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றியுள்ள வேலை வழங்குநர் (Employer) நம் கண்ணில் படுவார். ஆனால், என்ன நடந்துகொண்டிருக்கிறது..? எங்கேயோ யாரோ தொலை தூரத்தில் இருக்கிற ஒருவர்தான் நமக்கு வாழ்க்கையில் ‘ஒளி’ ஏற்றப்போகிறார் என்று நாட்களை வீணே கழித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு மிக அருகே நம்மைச் சுற்றிலும் ஏன்… நம் வீட்டுக்கு உள்ளேயே கிடக்கிற வேலை வாய்ப்புகள் பற்றி நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்த்தோமா..? இதோ சில உதாரணங்கள்...!

(வளரும்)

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

X