வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டாம்… உருவாக்கலாம்!

1/2/2019 5:10:05 PM

வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டாம்… உருவாக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

படிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா

தன் பிள்ளைகளை எப்பாடுபட்டாவது படிக்கவைத்துவிடும் பெற்றோர்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பு ஒரு நல்ல வேலையாகத்தான் இருக்கும். வேலை… வருமானம்… வாழ்க்கை என்பதுதான் நம் வாழ்க்கைப் பாடத்துக்கான திட்டமிடலாக ஆகிவிட்டது. பெரும்பாலான பெற்றோர்கள், ‘எவ்வளவோ கஷ்டப்பட்டு பையனைப் படிக்க வச்சுட்டேன்... ஆனா... வேலைதான் கிடைக்க மாட்டேங்குது. அவனும் எத்தனை நாளைக்குத்தான் மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டு சும்மாவே உட்கார்ந்துக்கிட்டு இருப்பான்..?’, ‘அவனும் சும்மா இல்லை... என்னென்னவோ பண்ணிப் பார்க்கறான்...

எதுவுமே அவனுக்கு ‘செட்’ ஆவ மாட்டேங்குது... எதனாச்சும் வேலைன்னு ஒண்ணு கிடைச்சு, சம்பாரிக்க ஆரம்பிச்சுட்டா... சட்டு புட்டுன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவச்சுடலாம்னு பாக்கறேன்... ஊம்... ஒண்ணும் கெடைச்சபாடில்லை..’ , ‘நல்லாதான் படிக்கறா... நல்லா மார்க்கும் வாங்கறா... இதுக்கு அப்புறம் வேலை கிடைக்குமான்னு நினைச்சாதான் பயம்ம்மா…. இருக்கு. பெரியவளும், படிப்பு முடிச்சுட்டு வேலை இல்லாம வீட்லயே கெடக்கா...’,  என்று புலம்புவதை கட்டாயம் நாம் அனைவருமே பார்த்திருப்போம். படிப்பு - பட்டம் (அ) பட்டயம் - வேலை - வருமானம் - திருமணம்...

என்று ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடைய இந்தச் சங்கிலித் தொடரில் எதேனும் ஒன்று தாமதம் ஆனாலும், வாழ்க்கையில் அடுத்தடுத்து எல்லாமே தள்ளிப்போய்விடுகிறது.‘அந்தந்த வயசுல அது அது நடந்தாத்தானே..., சரியான வாழ்க்கை அமைஞ்சதா அர்த்தம்..?’ முழுக்க சரி. ஆனால் படிப்பு, தேர்வு, பட்டம்... இதெல்லாம் நம் ‘கையில்’, நம் முயற்சியில் அமைவன. வேலை..? வேறு ஒருவர் தரவேண்டியது. அதனால்தான் இத்தனை பிரச்னைகள், சிக்கல்கள், சங்கடங்களுமே. கொஞ்சம் மாற்றி யோசிப்போமா...? நம்முடைய படிப்பு, அறிவு, திறமைக்கு... ஏன் நமக்கு ‘யாரோ ஒருவர்’ வேலை தரவேண்டும்..?  

நம்முடைய உழைப்பு, பங்களிப்பு மூலம் நமக்கு முன் பின் தெரியாத ஒருவர், வருமானம் பார்த்து, அதிலிருந்து ஒரு சிறு பகுதியை நமக்குச் சம்பளமாகத் தருகிறாரே... அந்த வேலையை நாமே சொந்தமாகச் செய்தால்..? தொழிற்சாலை, அலுவலகம், நிர்வாகம், வர்த்தகம் எல்லாவற்றுக்கும் மேலாக முதலீடு… அதாவது பணம் வேண்டும். அப்போதுதான் நமக்கு நாமே வேலை கொடுத்துக் கொள்ள முடியும். இப்படித்தானே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்..? இது ஓரளவுக்குத்தான் சரி. ‘கையில தம்பிடி பைசா கூட இல்லாமல், குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தவர்கள் கூட, ஒரு நிறுவனத்தின் முதலாளி ஆகியிருக்கிறார்கள். நம் தமிழ்நாட்டிலேயே நடந்திருக்கிறது. அதுவும் நம் கண் முன்னால்.. மிகச் சமீப காலத்தில். அப்படியானால்... நாம் செய்ய வேண்டியது என்ன..?

நான்கே நான்கு அம்சங்களை அசைபோட்டுப் பார்த்தால் போதும்.

1. அறிவு,
2. ஆர்வம்,
3. ஆற்றல்,
4. உழைப்பு

முதலாவது - அறிவு. நம்முடைய கல்வித் தகுதி மட்டுமல்ல. ஏதேனும் ஒரு துறையில், ஒரு பணியில், ஒரு வேலையில் நமக்கு என்ன அறிவு இருக்கிறது என்று பார்த்தல். ஒருவர் ‘பி. ஏ. பொருளாதாரம்’ முடித்து இருக்கலாம். அதையும் தாண்டி அவருக்கு, ‘எலக்ட்ரிக்கல்’ தொடர்பான வேலையில் நல்ல ‘அறிவு’ இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ‘பி. ஏ.’ மட்டும்தான் பட்டியலில் இடம்பெறும். ‘எலக்ட்ரிக்கல்’ அறிவு, அதில் இடம்பெறாது. காரணம், அதற்கான எந்தச் சான்றிதழும் இல்லை. ஆனால், பணிச் சந்தையில், இரண்டாவதற்குத்தான் வாய்ப்புகள் மிக அதிகம்.

ஒரே ஒரு வித்தியாசம்தான். முன்னது - மரபுக் கல்வி (Formal Education) பின்னது - தனிநபர்(Personal Knowledge) அறிவு. ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ள அறிவு குறித்த விசாலமான பார்வை, அந்தந்தத் தனிநபருக்குமே கூட இல்லாமற் போவதுதான் வேதனை; கொடுமை. பணிச் சந்தையில் ஒருவர், வேலை தேடித் தேடி ஓய்ந்துபோன பிறகுதான், வேறு வழியின்றி, பின்னதைத் தேர்ந்தெடுக்கிறார். இதையே அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே முழுநேரத் தொழிலாகத் தெரிவு செய்திருந்தால்..? இந்நேரம், தனக்குக் கீழே 4/5 உதவியாளர்களை வைத்துக்கொள்கிற அளவுக்கு, வளர்ந்திருப்பார்.

உண்மையா இல்லையா..? ஒரு கிராமத்துப்பெண் கணிதத்தில் பட்டம் முடித்திருக்கிறார். சில ஆண்டுகள் ஆயிற்று. வேலை கிடைத்தபாடில்லை. அவ்வப்போது தன்னுடன் படித்த சக பெண்களுடன் உரையாடுகிறபோதுதான் தெரிந்தது - அவர்களில் பலருடைய குடும்பங்களில் ‘படிப்பு வராமல்’ ‘ஃபெயில்’ ஆனவர்கள் கணிசமாக இருந்தார்கள். கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று பல பாடங்களிலும் பட்டம் பெற்ற இளம் பெண்கள் அதே கிராமத்தில் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தனர்.

அதே சமயம், பாடங்களில் தகுந்த வழிகாட்டுதல் இன்றி தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் அந்த ஊரைச் சுற்றிலும் ஏராளமானோர் இருந்தனர். பெண் நண்பர்கள் சேர்ந்து, ஒரு பயிற்சி மையம்’ தொடங்கினர். இயன்றவரை குறைந்த கட்டணத்தில் பாடம் சொல்லித் தர முடிவு செய்தனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு சிறிது சிறிதாக, பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பல இளைஞர்கள், அந்த மையத்தை நோக்கி வரத் தொடங்கினர். ஒருசில ஆண்டுகளில், தனி அலுவலகம், தனிக் கட்டமைப்புடன் பயிற்சி மையம், ஒரு பள்ளி, கல்லூரி அளவுக்கு உயர்ந்துவிட்டது. கல்விப்பணி, சமுதாயப் பணியுடன், வருமானத்துக்கான வழியும் கிட்டிவிட்டது. கைத்தொழில் செய்தல்,

கல்வி கற்பித்தல், சிறிய அளவில் ‘கடை’ வைத்து நடத்துதல், முகமை (‘ஏஜன்சி’) எடுத்து ‘கமிஷன்’ அடிப்படையில் வணிகம் செய்தல், வெவ்வேறு அரசுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் ஏற்று நடத்துதல் என்று, பல வேலை வாய்ப்புகளைத் தமக்குத் தாமே உருவாக்கிக்கொள்ள முடியும். வேலை வாய்ப்பை தேடிக்கொண்டிருக்காமல் வேலை வாய்ப்புகளை நாமே உருவாக்கலாம். பலரது வாழ்வுக்கு வழிகாட்டலாம்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இளம் பெண்கள், ஒரு குழு அமைத்து, சிறிய அளவில் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலில் ஈடுபடலாம். தமிழ்நாட்டில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன. ஆனால், இவை, நம் மாநிலத்தின் பொருளாதார  செழுமையுடன் ஒப்பிடும்போது, எண்ணிக்கையில் மிகக் குறைவுதான்.  இங்கே கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் என்னென்ன..? சுய உதவிக் குழு ஒன்றை எப்படி நிறுவுவது..? எவ்வாறு நிதி உதவி பெறுவது..?

(வளரும்)

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

X