வேதனையை சாதனையாக்கிய தன்னம்பிக்கை நாயகி!

7/23/2019 5:12:10 PM

வேதனையை சாதனையாக்கிய தன்னம்பிக்கை நாயகி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள் துயரங்களை நேசியுங்கள். வேதனைகள் சோதனைகளைத் தயக்கமின்றி சந்திக்கத் தயாராகுங்கள். “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்”என்கிறார் திருவள்ளுவர். எவரும் நம்மைக் கண்டிக்க மாட்டார்கள், தண்டிக்க மாட்டார்கள் என இறுமாப்புடன் ஒருவன் அலட்சியமாக இருந்தால் அதுவே அவனுக்குப் பெரிய எதிரியாகி முடிவில் அவனை நிலைகுலையச் செய்துவிடும்.

எனவே, உங்களது செயல்களைப்பற்றி எவரேனும் குறை நிறை கூறினால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த செயல்களை மறுபரிசீலனை செய்யுங்கள். பொதுவாகவே வாழ்க்கையில் ஒருவர் முன்னேறுவது ஒருசிலருக்குப் பிடிக்காது. சிரமப்பட்டு வேலை செய்து முன்னேற முயற்சிப்பவரைப் பார்த்து கிண்டல் கேலி செய்வார்கள். உங்கள் காதுபடவே உங்களின் செயலை மட்டமாகப் பேசி நீங்கள் மன வேதனையடையும்படி நடந்துகொள்வர்.

அத்தகையவர்களின் நடவடிக்கையைக் கண்டு உங்கள் மனமும் செயலும் தள்ளாடும் நிலை ஏற்படும். அப்படி நீங்கள் உங்கள் மனதைத் தள்ளாடவிட்டால் அந்தத் தடுமாற்றம் நீங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் அனைத்தையும் பாதிக்கும். இதனால் உங்களின் சொந்த முன்னேற்றம் தடைபடும். இதனைக் கண்டு உங்களின் எதிரிகள் சந்தோஷமடைவர். நீங்களோ தீராத சோகத்திற்கு ஆளாகி விடுவீர்கள்.

அதற்கு ஏன் நீங்கள் ஆளாக வேண்டும்? ஒரு செயலைச் செய்வது எனத் தீர்மானித்து அதன்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது எதிரிகளால் உங்களுக்கு கேலி கிண்டல் தடைகள் ஏற்பட்டால் அவர்கள் அதைச் செய்துகொண்டேயிருக்கட்டும். அது அவர்களது பொழுதுபோக்கு என நினைத்து அப்படியே விட்டு விடுங்கள்.

நீங்கள் உங்கள் தீர்மானத்தின்படியே உங்கள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டேயிருங்கள். காலப்போக்கில் உங்கள் வாழ்வின் முன்னேற்றப் போக்கைக் கண்டு உங்களை மட்டம் தட்டிப் பேசியவர்களே மூச்சடைத்துப் போவார்கள். இறுதி வெற்றி உங்களுக்கே. இதை நீங்கள் திடமாக நம்புங்கள்.
நாம் வாழ்க்கையில் வலிகள், வருத்தங்கள் எதுவுமே வேண்டாம், ஆனால் மகிழ்ச்சி மட்டும் வேண்டும் என்று நினைக்கிறோம்.

அது எப்படி கிடைக்கும்? சவால்களை போராடி வென்றால்தானே வெற்றி கிடைக்கும். சோதனைகளை சந்தித்தால் தானே சாதனைகளைப் படைக்க முடியும். இப்படி சவால்கள், வலிகள், வருத்தங்கள், சோதனைகள் எல்லாவற்றையும் சந்திக்காத ஒருவர் இன்னும் அவருடைய வாழ்க்கையில் முழுமையாக வாழவே தொடங்கவில்லை என்றுதான் அர்த்தம் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
 
வருத்தங்களும் வலிகளும் நமக்குள்ளே உள்ள பலத்தை வெளிக்கொண்டு வரக்கூடிய நல்ல கருவி என்று நினைத்துக்கொள்ள வேண்டும். வலிகளும், வருத்தங்களும் ஏற்படுகிறது என்றால் நம் வாழ்வில் ஒரு புதிய பயணத்திற்கான கதவு திறக்கப்படுகிறது என்பதாக நாம் நம்ப வேண்டும். இதற்கு இறை பிரார்த்தனைகளும் இறை நம்பிக்கைகளும் உங்களுக்கு உதவும்.

நாம் கடவுளிடம் எப்போதும் வலிமையைக் கேட்கும்போது கடவுள் நமக்கு வலிகளை தருகிறார் அதன் மூலமாக நாம் வலிமையைப் பெற்றுக்கொள்வதற்காக, நாம் கடவுளிடம் அறிவையும் ஞானத்தையும் கேட்கும்போது கடவுள் நமக்கு பிரச்னைகளை அள்ளித்தருகிறார்.

பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு அறிவையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். அடுத்து கடவுளிடம் துணிச்சலை கேட்கிறோம். அதற்கு கடவுள் நமக்கு தருவது இக்கட்டான சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளை. அந்தச் சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து துணிச்சலையும் தைரியத்தையும் பெற்றுக்கொள் என்கிறார்.

கடவுளிடம் நாம் கருணையைக் கேட்கிறோம், கடவுள் கஷ்டத்தில் இருக்கக்கூடிய மக்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களுக்கு உதவிகள் செய்து கருணையை வளர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார். கடவுளிடம் நாம் உதவி கேட்கிறோம், கடவுள் நமக்கு நல்ல வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறார். அதன் மூலமாக நமக்கு உதவிகள் கிடைப்பதற்காக.

எப்போதும் நாம் கேட்பதை கடவுள் நேரடியாக தந்துவிடவில்லை. மறைமுகமாக தந்துகொண்டு தான் இருக்கிறார். வாழ்க்கையில் எப்போதும் பிரச்னைகளையும் வருத்தங்களையும் கண்டு அஞ்சிவிடாதீர்கள். அது உங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்த மகத்தான பரிசு என்பதை உணர வேண்டும். அப்படி தனது வாழ்வு கடவுள் தந்த மகத்தான பரிசு என நினைத்து வாழ்வில் வலிகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்த தன்னம்பிக்கை நாயகி தான் டாக்டர் ரேச்சல் ரெபெக்கா.

ரேச்சலின் சொந்த ஊர் வேலூர், அப்பா சமூக ஆர்வலர், அம்மா இல்லத்தரசி. இவர்களின் ஒரே பெண்தான் ரேச்சல். ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் காதலிப்பதாக சொல்லி பின்தொடர்ந்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும், ரேச்சலை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்.

ரேச்சலுக்கு அப்போது 19 வயது, தைரியத்தை விட பயம்தான் அவருக்கு அதிகமாக இருந்தது. தனது அப்பாவிடம் இதுபற்றி சொன்னபோது போலீஸில் புகார் கொடுக்கலாம் என்று தைரியம் சொன்னார். ஆனால், அதற்குள் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று அவர்கள் குடும்பமே எதிர்பார்க்கவில்லை.

2008ஆம் ஆண்டு அப்பா வாங்கிக் கொடுத்த புது செல்போனை வைத்துக்கொண்டு சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார் ரேச்சல். அன்று அம்மா மட்டும்தான் வீட்டில் இருந்தார். யாரோ கதவை தட்ட, ரேச்சல் கதவை திறந்தார். சட்டென்று வீட்டுக்குள்ளே நுழைந்த அந்த இளைஞர் ரேச்சல் கையிலிருந்த போனை பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
 
என்ன இது டார்ச்சர்! இது என்ன வாழ்க்கை! என்று நினைத்து எதிர்மறையாக முடிவெடுக்க துணிந்தார் ரேச்சல். அதற்கு முன்பு கடவுளிடம் பிரார்த்தனை பண்ண முடிவு செய்தார். அந்த நொடி ரேச்சலிடம் மாற்றம் ஏற்பட்டது. இவருக்காக நான் ஏன் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், மறுநாளே அந்த கொடிய சம்பவம் நடக்கும் என்று ரேச்சல் நினைக்கவில்லை.
 
மீண்டும் வீட்டிற்கு வந்தார் அந்த இளைஞர். அவரை பார்த்த உடன் செல்போனில் ரேச்சலின் அப்பாவுக்கு மெசேஜ் பண்ணினார் அவரது அம்மா. ஆனால், அந்த இளைஞர் ரேச்சலின் அம்மா கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி வீசி எறிந்தார். அவரது அம்மாவை கீழே தள்ளிவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து ரேச்சலை கடுமையாக தாக்கினார்.

கீழே சரிந்து விழுந்தார் ரேச்சல். ரத்த வெள்ளத்தில் இருந்த ரேச்சலுக்கு இறந்துவிடக் கூடாது என்று அவருடைய மனது துடித்தது. அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரேச்சல் தான் மடக்கி வைத்திருந்த காலை நீட்டியபோது அதுவரை உள்ளே கட்டுப்படுத்தி வைத்திருந்த ரத்தம் நிறைய வெளியேறியது. அந்தத் தருணத்தில் நிறைய மனிதர்கள் ரத்ததானம் செய்து உதவினார்கள்.

இதை பார்த்த ரேச்சல் வாழ வேண்டும், சாதிக்க வேண்டும் என்று மனதில் வைராக்கியத்தை விதைத்துக்கொண்டார். முழு நம்பிக்கையோடு தைரியத்தோடு சிகிச்சையை மேற்கொண்டார். அந்தக் கொடிய சம்பவத்திலிருந்து மீண்டு உயிர்பிழைத்தார். தன்னை ஒருதலையாக காதலித்த ஒருவனால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, அந்தக் கொடும் சம்பவத்திலிருந்து மீண்டு உயிர் பிழைத்து இன்று மருத்துவத்துறை, மாடலிங், சினிமா, சமூக சேவை, தன்னம்பிக்கை பேச்சாளர் என பல துறைகளிலும் சாதித்துவருகிறார்.

கண்களில் தேங்கும் கண்ணீரை விழவிடாமல் அசாத்திய தன்னம்பிக்கையுடன் ரேச்சல் பேசும்போது அதை பார்க்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை பிறக்கிறது. தனக்கு நடந்த அநியாயம் போல நிறைய பெண்களுக்கு இத்தகைய கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தகைய பெண்களுக்கு உதவ ‘ஊக்கம்’ என்ற அறக்கட்டளையும் ரேச்சல் நடத்திவருகிறார்.

தன் வயிற்றில் உள்ள கத்திக்குத்து தழும்புகளையே பெண்களுக்கு தேவையான துணிச்சலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி புகைப்படங்கள் எடுத்து தன்னம்பிக்கைக்கான பல விருதுகள் பெற்றுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் அந்த சம்பவத்துக்கு பிறகு நடந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் அந்த மோசமான சம்பவம் தான் காரணம் என்கிறார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றால் நான் ஒரு இயல்பான வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்கிறார்.

எல்லா காயங்களையும் துன்பங்களையும் கரைக்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு. தைரியத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் ரேச்சல். தேர்வில் தோல்வி மற்றும் சாதாரண கஷ்டங்களுக்கு எதிர்மறையாக முடிவு எடுக்கும் மாணவர்களுக்கு ரேச்சலின் வாழ்க்கை ஒரு உன்னத பாடமாகும்.

இன்றைய பெண்கள் ரேச்சலை போன்ற துணிச்சலையும் தன்னம்பிக்கையும் இரண்டு கண்களாக கொண்டு வாழ்வில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

(புதுவாழ்வு மலரும்)

X