வலிகளையும் வருத்தங்களையும் வென்ற இரும்புப் பெண்மணி!

7/30/2019 5:12:07 PM

வலிகளையும் வருத்தங்களையும் வென்ற இரும்புப் பெண்மணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்

புதிதாய்ப் பிறப்போம்!சரித்திரம் படைப்போம்!!

குறிக்கோள்களை சாதனை நோக்கிப் போகும் படிகளாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். யாரும் தோல்வியடைய வேண்டும் என்று திட்டமிடுவதில்லை. ஆனால் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமானால் அதற்குத் தேவையான திட்டமிடல் வேண்டும். ஓரடி, ஈரடி என்று படிப்படியாக குறிக்கோள்களை நோக்கி நடைபோட வேண்டும்.

நமது கனவை நனவாக்க மெதுமெதுவாக நடைபோட வேண்டும். ஆனால், குறிக்கோளை நோக்கிய பயணத்தில் செல்லும்போது பயம், கவலை போன்றவை நெருக்கடிகளை ஏற்படுத்தி குறிக்கோளை நெருங்கவிடாமல் செய்து, முடிவில் தோல்வியடையச் செய்துவிடுகிறது

எப்போதுமே உங்கள் மனதை உயர்சக்தி உடையதாகவே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தோல்விகள் கவலை என்னும் கொலைக் களத்திற்கு இட்டுச்செல்லாமல் வெற்றி என்னும் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும். பிரச்னைகள் என்பது ஒரு வகையில் காற்றைப் போன்றதுதான், ஓரிடத்தில் நிற்காது. நமது புத்தியும் மனமும் பலூனாக இல்லாத வரை அந்த காற்று அங்கே தேங்கிக் கிடக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கவலை நம்மைத் தேடிவருகிறது அல்லது சில நேரங்களில் அதை வரவழைத்துக் கொள்கிறோம்.

 கவலையில் வீழ்ந்துவிடாமல் வீழ்கிறபோதெல்லாம் நம்பிக்கையுடன் உற்சாகமாக எழுந்துவிட வேண்டும். பீனிக்ஸ் பறவையானது தனது ஆயுள் முடிவதை முன்கூட்டியே உணர்ந்துகொள்ளும்போது ஒரு மரக்கிளையில் கூடு ஒன்றைக் கட்டி அதில் அமர்ந்துகொண்டு தனக்குத்தானே நெருப்பை வைத்துக்கொள்ளுமாம். சுடு நெருப்பில் பீனிக்ஸ் பறவையும் அந்தக் கூடும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிடும், பின்னர் எஞ்சிய சாம்பலிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவை ஒன்று தோன்றும் என்பார்கள். அப்படி தோன்றிய ஒரு புதிய பீனிக்ஸ் பறவைதான் முனிபா மசாரி.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் முனிபா மசாரி. கல்லூரிப் படிப்பை முடித்த வுடன் முனிபாவிற்கு அவருடைய தந்தை திருமணம் செய்து வைக்க விரும்பினார். 18 வயதில் முனிபாவிற்கு திருமணம் நடந்தது. ஆனால், திருமண வாழ்க்கை அவ்வளவு இனிமையாக அமையவில்லை. 2007ஆம் ஆண்டுதான் முனிபாவின் வாழ்க்கையில் சோதனை ஆரம்பமானது. தனது சொந்த ஊருக்கு கணவருடன் காரில் பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு அவரது கார் கால்வாயில் போய் விழுந்தது. முனிபாவின் கணவர் சிறிய காயங்களுடன் அந்த விபத்திலிருந்து தப்பினார். ஆனால், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முனிபாவை அங்கேயே விட்டுவிட்டு தன் சிறிய காயங்களின் வலியைக்கூட தாங்கமுடியாமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.

நீண்டநேரமாக உதவிக்கு யாருமின்றி காருக்குள்ளே உயிருக்குப் போராடி வலிகளால் துடித்துக்கொண்டிருந்தார் முனிபா. பிறகு அந்த வழியாக சென்ற மக்கள் காப்பாற்றினர். அது ஆம்புலன்ஸ் சேவையே இல்லாத குக்கிராமமாக இருந்ததால் சாலையில் வந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால், அந்த மருத்துவமனையிலோ சாதாரண முதலுதவி வசதிகள் கூட இல்லாத நிலையில் முனிபா வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ‘‘இவர் இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார். சிகிச்சை அளிப்பதில் பயனில்லை. நீங்கள் கராச்சியிலுள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்’’ என்றார்கள். மீண்டும் பயணமாகி கராச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முனிபாவின் கழுத்துக்குக் கீழ் உள்ள பெரும்பான்மையான உடல் உறுப்புகள் பலத்த காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்டதால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தார்கள். இரண்டு ஆண்டுகள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் மூன்று பெரிய அறுவை சிகிச்சை மற்றும் இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகளைத் தாண்டி முனிபா உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

சிகிச்சை முடிந்தவுடன் முனிபாவை சந்தித்த மருத்துவர்கள், ‘‘தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னையால் இனி நீங்கள் தாயாக முடியாது’’ என்று கூறியபோது முனிபா மிகுந்த துயரமடைந்தார். ஒரு பெண் தான் முழுமை அடைந்ததாக கருதுவதே ஒரு தாயாக மாறும்போதுதான். அது தனக்கு இல்லை என்றபோது மனதளவில் மிகுந்த பாதிப்புக்குள்ளானார். இந்த நிலையில் முனிபாவின் கணவர் விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

தனக்கு எல்லாமே அவர்தான் என்று நம்பியிருந்த கணவர் தன்னை விட்டுப் போனது மிகுந்த வலியைத் தந்தது. திருமணமான இரண்டு வருடத்தில் அந்த விபத்து நடந்தது. ‘விபத்தில் தப்பிய கணவர் தன்னை காப்பாற்றாமல் சென்றதற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன்’ என்று சொல்லி தனது கணவரின் திருமணச் செய்தியைக் கேட்ட முனிபா அவருக்கு தனது வாழ்த்துகளை குறுஞ்செய்தியாக அனுப்பினார்.

மீண்டும் அடுத்த நாள் வந்த மருத்துவர் முனிபாவிடம், ‘‘இனி உங்களால் நடக்க முடியாது, விபத்தால் உங்கள் கால்கள் செயலிழந்துவிட்டன’’ என்றார். அடுத்த அடுத்த சோதனைகளைக் கேட்ட முனிபா தனது உடலால் ஏற்பட்ட வலியைவிட மனதால் மிகுந்த வலியை அடைந்தார்.

நிறைய அறுவை சிகிச்சை செய்திருந்ததால் இரண்டு ஆண்டுகள் படுக்கையில் ஒரே பக்கமாக படுக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒரே பக்கமாகப் படுத்துக்கொண்டே தனது வாழ்வை நினைத்து வருந்தி இனி எதற்கு வாழவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது முனிபாவுக்கு மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியவர் அவரது தாய் மட்டுமே.

அவரது தாய் முனிபாவிடம் சொன்ன ஒரே வார்த்தை ‘இதுவும் கடந்து போகும்’ என்பது மட்டுமே. அவருடைய நம்பிக்கை வார்த்தைகள் முனிபாவிற்கு ஒரு புதிய தெம்பை ஏற்படுத்தியது. தன்னுடைய வாழ்வில் நடந்த ஒவ்வொரு கஷ்டமான தருணங்களையும் பட்டியலிட்டார். தனது கணவர் பிரிந்து சென்றதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

அடுத்ததாக தான் தாயாக முடியாவிட்டால் என்ன? இந்த உலகில் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர்கள் இல்லாமல் இருக்கிறார்களே அவர்களில் ஒரு பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கலாமே என்று முடிவு செய்து, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து அதற்கான பதிவுகளையும் செய்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு அழைப்பு வந்தது. ‘‘பாகிஸ்தானில் பிறந்து இரண்டே நாட்களான ஆண் குழந்தை ஒன்றை நீங்கள் விரும்பினால் தத்தெடுக்கலாம்’’ என்றார்கள். உடனடியாக சம்மதம் தெரிவித்து அந்தக் குழந்தையை தத்தெடுத்தார் முனிபா.

எல்லா வசதிகளும் உள்ளவர்களே தத்தெடுப்பதற்குத் தயங்கும்போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிக்கல்களை எதிர்கொள்ளும் முனிபா, ஒரு குழந்தையை தத்தெடுத்து தன்னம்பிக்கைக்கும் தாய்மை உணர்வுக்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

விபத்துக்கு பிறகு என்ன செய்வது என்று நினைத்த முனிபா தனது ஓவிய திறமையின் மீது நம்பிக்கை வைத்து ஓவியம் வரைய முடிவுசெய்தார். ஆனால், விபத்தால் பாதிக்கப்பட்ட கைகளை சிறிது ஊன்றினாலே மிகுந்த வலி ஏற்பட்டது. இருந்தபோதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் வலிகளுடன்  ஓவியம் தீட்டினார். அந்த ஓவியங்கள் கண்காட்சிகள் மூலமாக விற்பனையில் சாதனை படைத்தன.

டி.வி நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்து நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். வீல் சேரில் அமர்ந்தபடியே அவர் நடத்திய நிகழ்ச்சிகள் அந்த நாட்டில் மிகுந்த பிரபலமானது. அதன் பிறகு முனிபா தன்னை ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக மாற்றிக்கொண்டு தன் வாழ்வில் நடந்த சோதனைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சொன்னபோது அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை அடைந்தார்கள். தன்னை ஒரு ஓவியராக, டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக, தன்னம்பிக்கைப் பேச்சாளராக மற்றும் எழுத்தாளராக மாற்றிக்கொண்டு பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார் முனிபா.  

பல்வேறு அறுவை சிகிச்சையால் தனது உடம்பில் நிறைய இரும்புத் தகடுகளை கொண்டுள்ள முனிபாவின் தன்னம்பிக்கையைப் பார்த்து வியந்து பல்வேறு துறைகளில் சாதித்ததை பாராட்டும் விதமாக அந்த நாட்டு அரசு அவருக்கு ‘இரும்புப் பெண்மணி’ என்ற உயர்ந்த விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.

இளம் வயதில் விபத்தில் சிக்கி தனது கணவரைப் பிரிந்து, தாய்மை இழந்து, நடக்க முடியாமல் வீல்சேரில் அமர்ந்து புறக்கணிப்புகளைத் தாண்டி வலிகளுடன் ஓவியம் வரைந்து பல்வேறு துறைகளிலும் சாதித்து ஒரு புதிய பீனிக்ஸ் பறவையாக உருவெடுத்த இரும்புப் பெண்மணி முனிபா மசாரியின் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் மனஉறுதியும், நம்பிக்கையும்தான்.

சாதாரண கஷ்டம், தோல்விகள் போன்றவற்றிற்கு தங்களது வாழ்க்கையே முடிந்ததாக நினைக்கும் இளைஞர்களுக்கு முனிபா சொல்வது என்னவென்றால் “இதுவும் கடந்து போகும்”என்று எண்ணி, வாழப் பழகு… போராடு… துன்பங்களைத் தூக்கி எறி. வெற்றியை நோக்கிப் புறப்படு என்பதுதான். முனிபாவை போல மனஉறுதியும், நம்பிக்கையும் உள்ளவர்கள் எப்போதும் தோற்றுப்போவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் வெற்றி உங்கள் வசமாகும்.

(புதுவாழ்வு மலரும்)

X