உண்மையை உணர்த்தும் உள்ளங்கைகள்!

7/31/2019 5:38:45 PM

உண்மையை உணர்த்தும் உள்ளங்கைகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நடை உடை பாவனை!

உடல்மொழியின் வெளிப்பாட்டிலும், மனிதனின் பரிணாம வளர்ச்சியின் பயனாலும் கைகள் முக்கிய கருவியாக இருக்கின்றன. உணர்ச்சிகளின் பிரதிபலிப்பில் முதல் செயல்பாடு கைகளிலிருந்துதான் தொடங்குகிறது. மூளைக்கும் வேறு எந்த உறுப்புக்கும் இருப்பதை விட கைகளுக்குத்தான் அதிக தொடர்புகள் இருக்கின்றன என்று உடலியல் நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

 மனிதர்கள் செயற்கையாகக் கண்டறிந்த கருவிகள் அனைத்தையும் கைகளைக் கொண்டே இயக்குகிறார்கள். அதே நேரம் மனிதர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு அவர்களின் கைகளே ஒரு கருவிபோல் செயல்படுகின்றன.

*மனசுல பட்டதை உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளில காட்டிடுவான்.
*வலது கை கொடுக்கிறதை, இடது கைக்கு தெரியாம பார்த்துக்கணும்
*சரியா நடந்துக்காததாலே வாய்ப்பு கை நழுவிப்போச்சு
*நேர்மையா நடந்து பாருங்க கை மேல பலன்

 -என்று கைகளுக்கு மிக முக்கிய இடத்தை வழிவழியாக தந்தபடியேதான் இருக்கிறோம். இத்தனை இருந்தபோதும், ஒரு புதிய சூழலில் ஒருவரைச் சந்தித்து கைகுலுக்கலுடன் தொடங்கும்போது, உடலியல் ரீதியான செயல்பாட்டில் கைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை வெகுசிலரே அறிந்துவைத்திருக்கிறார்கள்.

ஒரு புது நபருடன் அறிமுகமாகி பழக்கத்தைத் தொடரும்போது முதல் ஏழு நிமிடங்களை தங்கநிமிடங்கள் (Golden Minutes) என்று குறிப்பிடுகிறார்கள். காரணம், முதல் ஏழு நிமிடங்களில்தான் மற்றவர்கள் நம்மைப்பற்றி ‘இவரு நல்லவரா, கெட்டவரா’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த முடிவுக்கு அவர்கள் வர நமது கைகளும், அதன் செயல்பாடுகளும் காரணமாக இருக்கின்றன.

ஒரு புது நபருடன் அறிமுகமாகி பழக ஆரம்பிக்கும் அந்த தங்கநிமிடங்களில் நாம் அதிகபட்சம் செய்திருப்பது கைகுலுக்கல் மட்டும்தான். அந்த கைகுலுக்கலை ஒரு சடங்காக, சம்பிரதாயமாகவே பலரும் செய்கிறார்கள்.  ஒருபோதும் உணர்ந்து செய்வதே இல்லை.

அருண் 27 வயது இளைஞன். ஆறடிக்கும் சற்று கூடுதலான உயரம் கொண்டவன். எம்பிஏ பட்டதாரி. ஒரு பெரிய நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். இன்னும் திருமணமாகாதவன். இயல்பிலேயே சுறுசுறுப்பானவன். உடுத்தும் உடையையும் பாந்தமானதாக உறுத்தாத நிறத்தில் அணியக்கூடியவன். மனிதவள அதிகாரி போன்ற தோரணையில் கம்பீரமாக நடப்பான்.

அருண் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் முதலே எல்லோரிடமும் நல்ல பாதிப்பை ஏற்படுத்த விரும்பினான். அதற்கு அவனே எல்லோரிடமும் வலியச் சென்று பேசினான். முதலில் சந்திக்கும்போது கம்பீரமாக கைகுலுக்க வேண்டும் என்று அவனுக்கு சொல்லித்தரப்பட்டிருந்தது.

அதை மனதில் கொண்டு சக அதிகாரிகளை சந்திக்கும்போது அவ்வாறே உறுதியாக கைகுலுக்கினான். அருணின் சக அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடல்வாகில் இருந்தார்கள். அருண் இறுக்கமாக கைகுலுக்க, அது அவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. பெண் சகாக்களுடன் கைகுலுக்கும்போது அவர்கள் அணிந்திருந்த மோதிரம் அழுத்தி காயம் ஏற்படும் அளவுக்குப் போனது.

அருண் தனது செயல்பாடு பற்றி அறியாத வனாகவே இருந்தான். அருணின் இந்தச் சைகைகளைக் கண்ட ஆண்கள் சிலர் பதிலுக்கு போட்டி போட்டு தங்கள் இறுக்கத்தைக் காட்டினார்கள். பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முணுமுணுத்தார்கள். ‘அவனோட கை குலுக்காதே’ என்று ரகசியமாக சொல்லிக் கொண்டார்கள். இதனாலேயே அருண் ஓரம் கட்டப்பட்டான். பெண்களால் தவிர்க்கப்பட்டான்.

அந்த நிறுவனத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருந்ததால், அருண் தனது முதல் செயலிலேயே அவர்கள் மனதில் தாழ்ந்துபோனான். அருணின் படிப்போ, திறமையோ, அறிவோ எதுவும் கவனிக்கப்படாமல் அவனது கைகுலுக்கல் செயல்பாடு ஒன்றே அவனை தவிர்க்கப்பட வேண்டிய நபராக மாற்றியது. நட்பு ரீதியான சிறிய கைகுலுக்கல்தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தித் தந்தது.

அருணைப்போன்றே பலரும் முதல் அறிமுகத்தில் நடந்துகொள்கிறார்கள். கைகளின் செயல்பூர்வமான பாவனையை உணர்ந்து அறியாமல் போவதால், மற்றவர் ஏன் நம்மைத் தவிர்க்கிறார்கள், ஏன் விலகிப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவே இருந்துவிடுகிறார்கள்.

உடல்மொழியின் வெளிப்பாட்டில் கைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. உண்மை, உறுதி, பணிவு, கனிவு, விசுவாசம், நேர்மை - இவை அனைத்தையும் சக மனிதர்களுக்குப் புரிய வைப்பது அவரவர் கைகள்தான். அதிலும் குறிப்பாக உள்ளங்கை தெரிய, திறந்த நிலையிலான வெளிப்பாடு அடுத்தவருடன் ஒரு நெருக்கத்தை உடனடியாக தொடர்புபடுத்தித் தரக்கூடியது.

 மனிதர்கள் ஒரு உறுதிமொழியை எடுக்கும்போது கைகளை மார்பின் மேல் வைத்துக்கொள்வார்கள். சத்தியம் செய்யும்போது உள்ளங்கையின் மேல் உள்ளங்கையை வைத்து அழுத்துவார்கள். நீதிமன்றத்தில் சாட்சிக்கூண்டில் ஏறி சாட்சி சொல்லத் தொடங்குவதற்குமுன் (சொல்வதெல்லாம் உண்மை…)  புனித நூலின் மேல் கைகளை வைத்துத்தான் சொல்வார்கள்.

“ஒருவன் திறந்த மனதுடன் உண்மையானவனாகவும், நேர்மையானவனுமாக இருக்கிறானா இல்லையா என்பதை அறிய அவனது உள்ளங்கைகளைப் பார்த்தே கண்டறிய முடியும்’’ என்கிறார்கள் உடலியல் வல்லுநர்கள்.விலங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களாக மாறிவந்த நமக்கு, உணர்ச்சிகளைக் கைகளின் மூலமாகப் பிரதிபலிக்கும் பழக்கத்தை விலங்குகளே வழங்கியிருக்கின்றன.

எந்த ஒரு விலங்கும் (குறிப்பாக நாய், பூனை, குதிரை, மாடு) தனது பணிவை, சரணாகதியை தனது  எஜமானரிடம் காட்ட தங்களது முன்னங்கால் பாதங்களைக் காட்டும். (அதுவே பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு கைகளாக மாறியது) அந்தத் தன்மை எதிர்ப்போ, போராட்டமோ, வன்முறையோ இல்லை என்பதையே உணர்த்தும் வகையில் இருக்கும்.

விலங்குகளிடமிருந்து வேட்டையாடும் மனிதனாக மாறியபின் திறந்த உள்ளங்கைகளைக் காட்டினால் கைகளில் ஆயுதம் இல்லை என்பதை குறிப்பதோடு, போராட்டம் இல்லை என்பதைச் சொல்வதாகவும் அமைந்தது. அதன் அடுத்த கட்டம்தான் உள்ளங்கைகளைக் காட்டினால் மனதைத் திறந்து காட்டுவதுபோல் பாவிக்கப்படுகிறது.உள்ளங்கைகளை விரித்து மனதைத் திறந்த நிலையில் வைத்திருப்பதும் ஆளுமையை வளர்க்கும் தன்மைகளில் ஒன்றுதான்.

உடை வழி - ஷூ (Shoe)

உடை வகையில் மனிதர்களின் தேவைக்கும் அவசியத்திற்குமாக  கண்டறியப்பட்ட பொருள் ஷூ. அதே நேரம் மனிதர்கள் கண்டறிந்தவற்றில் அதிக மாறுதலைக் கண்டதும் ஷூதான். High Heels, Low Heels. Flat heels, Designed, Straped என்று விதவிதமான மாற்றங்களைக் கண்டுகொண்டேயிருந்தது ஷூ.உலகில் 5500 ஆண்டுகளுக்கு முன் (மாட்டுத்) தோலால் செய்யப்பட்ட ஷூ ஆர்மெனியா குகைகளில் கண்டறியப்பட்டது.

அதேபோல் பனிப்பிரதேசத்தில் கி.மு. 3300-ல் வாழ்ந்த மனிதர்கள் காட்டெருமைகளின் தோல்களால் செய்யப்பட்ட ஷூவை பயன்படுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஷூக்கள் அனைத்தும் தோலை காலோடு போர்த்தி சுற்றி, அதன் மேல் கயிற்றால் கட்டிக்கொள்ளும் வகையில் இருந்தது.கி.மு. 1800-1100 காலகட்டங்களில், தோலால் வடிவமைக்கப்பட்ட ஷூ ஸ்காண்டிநேவியாவில் தொல்லியல் துறையினர் கண்டறிந்திருக்கிறார்கள்.

மனிதர்கள் ஷூவை அதற்கு முன்பும் கூட பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் உண்டு. காரணம், ஷூ செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்கும் தன்மை கொண்டவையாகவே இருந்தன. அன்றைய காலகட்டங்களில் மனிதர்கள் ஷூவை பயன்படுத்தியிருந்தார்கள் என்பதை மனிதர்களின் எலும்புகளின் கடினத்தன்மையைக் கொண்டும் யூகித்தார்கள்.

வெயில் காலங்களில் நடக்கும்போது வெப்பம் கால்களைத் தாக்காமல் இருக்க, ஷூவின் அடிப்பாகத்தில் உப்பலான வடிவங்களைக் கட்டிக்கொண்டு நடந்தார்கள். இதுவே பிற்பாடு ஹீல்ஸ் என்ற மாறுதல் வடிவத்தைக் கண்டது.இறுக்கமாக ஷூ அணியும் வகையை தென் அமெரிக்கர்கள்தான் கண்டறிந்தார்கள். அதற்கு Moccasin என்று பெயரிட்டார்கள். காட்டெருமையின் தோலால் செய்யப்பட்ட ஷூவில் அழகிற்காகவும், அலங்காரத்திற்காகவும் பாசிமணிகளைக் கோத்துக்கொண்டார்கள்.

(ஃபேஷன் இங்கிருந்துதான் தொடங்கியது)

நாகரிகம் வளர வளர ஷூவை நாகரிகத்தின் சின்னமாக மாற்றியது ஐரோப்பியர்கள்தான். அவர்கள்தான் ஷூவை தோல் தவிர்த்து மற்ற பொருட்களைக் கொண்டும் வடிவமைத்தார்கள். அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் மரத்தால் செதுக்கப்பட்ட காலணிகள் (மதகுருமார்கள் பயன்படுத்தினார்கள்) புழக்கத்தில் இருந்தன. சீனா, ஜப்பானில் வைக்கோல்களால் பின்னப்பட்ட ஷூக்கள் புழக்கத்தில இருந்தன.

அன்றைய காலகட்டங்களில் கால்களுக்கு ஷூ அணிவது ஒரு கனவாகவே இருந்தது. ஷூவை அணிபவர்கள் சமூகத்தில் மேல்தட்டு மக்கள் என்றும், வெறும் கால்களில் நடப்பவர்கள் கீழ்த்தட்டு மக்கள் என்ற எண்ணமும் இருந்தது.ஷூவைப் பற்றி நிறைய கதைகள் உலவ ஆரம்பித்ததும் அந்தக் காலகட்டத்தில்தான். அதில் உலகம் முழுக்க கொண்டாடித் தீர்த்த கதைதான் சிண்டிரெல்லா.

- ஷூ-வின் பின்னணி வரலாறு மேலும் தொடரும்…

- தொடரும்

X