தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்கள்!

8/8/2019 3:57:30 PM

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நம்மில் பலர் தோல்வி மனப்பான்மையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் பெரும்பாலோர் தாங்களே தங்களை மட்டம் தட்டிக்கொண்டு ‘‘நான் தோற்பதற்காகத்தான் பிறந்துள்ளேன் என்னால் வெற்றி பெற முடியாது’’ என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு தோல்வியாளராக இருப்பதுதான் நமது தலைவிதி என்றால் நம்மால் எப்படி வெற்றி பெற முடியும்? அந்த எண்ணம் உடையவர்கள் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை தூக்கியெறிந்துவிடுகிறார்கள்.

தோல்வி மனப்பான்மை உடையவர்கள் முன்பு சந்தித்த தோல்விகள் நமது பிரச்னையல்ல. ஆனால், அந்தத் தோல்விகளை நாம் பார்க்கும் விதம்தான் நமது பிரச்னை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எப்போதுமே தோல்விகளை வெற்றிக்கான படிக்கற்களாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் தன்னம்பிக்கையார்கள். அதுமட்டுமல்ல, தோல்வி என்னும் தடைகளைத் தாண்டி நாம் ஜெயிக்கும்போது நமது பலம் கூடுகிறது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய மிக முக்கிய முதல் தடை எது தெரியுமா? நம் தயக்கம். நம்மால் இதைச் செய்ய முடியுமா? எப்படி செய்யமுடியும்? இதை செய்ய பணம், நேரம், திறமை நம்மிடம் உள்ளதா? என்று மனம் தடுக்கிற தடைதான் மாபெரும் தடை என்பதை உணர வேண்டும்.

நமது வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதே இந்த மனம்தான். ஆனால், இந்த மனதில் பயம், தயக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு தைரியம் என்ற ஒன்றை இறுகத் தழுவிக்கொண்டால்தான் வெற்றி பெறமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு ஏற்படும் தடைகளைக் கடப்பதற்கு தைரியமான மனம் வேண்டும். அத்தகைய மனதை பெற உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மனதை ஊக்கப்படுத்தினால்தான் மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும். அப்படி தன்னுடைய மனதை ஊக்கப்படுத்தி வெற்றி பெற்ற தன்னம்பிக்கை பெண்மணியின் வாழ்க்கை உங்கள் மனதைக் கண்டிப்பாக ஊக்கப்படுத்தும்.

சௌபர்ணிகாவின் சொந்தஊர் கோயம்புத்தூர். அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார். சிறு வயதாக இருக்கும்போது சௌபர்ணிகாவின் குடும்பம் செல்வச் செழிப்போடு இருந்துள்ளது. ஆனால், சொந்த ஊரில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் அவரது அப்பாவின் தங்கப்பட்டறை முழுவதுமாக அழிந்தது. இதனால் அவர்களின் வாழ்க்கை திசை மாறியது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு ஆளானார்கள். இதனால் சௌபர்ணிகாவின் படிப்பும் 10ஆம் வகுப்போடு நின்றுபோனது. புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் ஹேண்ட்பேகைத் தூக்கிக்கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

பாத்திரக்கடை தொடங்கி, பைக் ஷோரூம் வரை சேல்ஸ், மார்க்கெட்டிங் என கிடைத்த வேலைகளைச் செய்தார். வறுமையின் காரணமாக உண்டான சிக்கல்கள், பிரச்னைகளால் குடும்பம் சிதற ஆரம்பித்தது. இதனால் சௌபர்ணிகாவின் அப்பா, அம்மா வுக்கு இடையே ஏற்பட்ட சண்டை இருவரின் பிரிவில் முடிந்தது. குடும்பமே சிதைந்துபோனது. அன்பு காட்டவோ, அக்கறையாகப் பேசவோ ஆளில்லாத தனிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார். இது சௌபர்ணிகாவை மேலும் மனத்தளவில் மிகவும் பாதித்தது. குடும்பப் பிரச்னைகளால் நாம் காணாமல் போய்விடக்கூடாது என தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டார். உடனே வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றார்.

தனது திறமையை அங்கீகரித்த சென்னை மாநகரத்தில் நிறைய வேலைகளைப் பார்த்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தார். இருந்தபோதும் பள்ளிப்படிப்பைகூட முடிக்காத நிலையில் நிரந்தரமான வேலை அமையவில்லை. ஆங்கிலம் தெரியவில்லை, அதிக படிப்பு இல்லை, அதைவிட இரண்டு டிரஸ் மட்டுமே இருந்த நிலையில் அவர் சந்தித்தது அவமானங்களை மட்டும்தான். ஆனாலும், சௌபர்ணிகா உடைந்துபோகவில்லை. நம்மால் முடியும் என்ற மன உறுதியோடு தினமும் காலையில் ஆங்கில பேப்பர்களை வாங்கிப் படித்து தனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.

சொந்தமாகத் தொழில் தொடங்கினால்தான் அடுத்தகட்டத்தை எட்ட முடியும் என்று நினைத்து மீண்டும் கோவைக்கு வந்து விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார். ஆசை மட்டும் இருந்தால் போதாது. வெறும் கையில் முழம் போட முடியாதே. தொழில் தொடங்க பணம் வேண்டுமே. திடீர் என்று உதித்த யோசனையை சற்றும் தயங்காமல் செயல்படுத்தினார். கையில் இருந்த 350 ரூபாய் பணத்தில் 1000 விசிட்டிங் கார்டு அடித்து தெருத் தெருவாக அலைந்து எல்லா நிறுவனங்களிலும் கொடுத்தார். கையில் எந்த பணமுமே இல்லாமல் அலுவலகம் இல்லாமல் அவர் தொடங்கிய விளம்பர நிறுவனத்திற்கு முதல் முதலாக ஒரு பள்ளியிலிருந்து விசிட்டிங் கார்டு அடித்துத் தரும்படி கேட்க, சௌபர்ணிகா மகிழ்ச்சியில் அதை உடனே செய்துகொடுத்து தன்னுடைய தொழிலில் முதல் லாபம் ஈட்டினார் சௌபர்ணிகா.

தன்னுடைய விளம்பர நிறுவனத்தை பல்வேறு முயற்சிகளால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தார். அதன் பிறகு யூ.டியூப் மூலமாக தையல் கலையைக் கற்றுக்கொண்டு பெண்களுக்கான ஆடைகளை தைத்துக் கொடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முயற்சிகளும் பயிற்சிகளுமாக சென்ற வாழ்க்கையில் விளம்பரத் துறையில் பரிச்சயமான ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டர். ஆனால், ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக ஆரம்பித்த திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவில் முடிந்தது. தன்னுடைய ஒரே பெண் குழந்தையுடன் தனிமையில் விடப்பட்ட சௌபர்ணிகா தோல்வியின் விளிம்பிற்குச் சென்றார். இருந்தபோதும் மனம் தளராமல் தன்னுடைய விளம்பர நிறுவனம், காஸ்டியூம் துறை, மார்க்கெட்டிங் துறை என எல்லாவற்றிலும் தொடர்ந்து உழைத்துக்கொண்டேயிருந்தார்.

தன்னுடைய நிறுவனத்தைப் பிரபலப்படுத்தும் உத்தியாக அனைத்து ஆடைகளும் 6 மாதம் இலவசமாக தைத்துக் கொடுக்கப்படும் என அறிவித்தார். பெண்கள் கூட்டம் அலைமோதியது. தொழில் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அடுத்தகட்ட நடவடிக்கையாக தன்னுடைய ஜூன்பெரி ஷோரூமை சிறிய பரப்பளவில் ஆரம்பித்தார். நுணுக்கமான கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி நவீன உடைகளை தயார்செய்து கொடுத்து வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார் சௌபர்ணிகா. பின்னர் கோவையில் கிடைக்காத புதுவிதத் துணி ரகங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கிரியேட்டிவ் கவுன்களை தயாரித்தார். ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் விளம்பர உத்திகளைப் பயன்படுத்தினார். இதனால் வாடிக்கையாளர்கள் கடையைத் தேடி வர ஆரம்பித்தார்கள்.

கோவையில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இடையே சௌபர்ணிகாவின் நிறுவனமும் வாடிக்கையாளர்களால் பேசப்பட்டது. இவருடைய ஆடை வடிவமைப்பை பார்த்து திரைத்துறையிலிருந்து அழைப்பு வர, இப்போது சௌபர்ணிகா பல திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்துவருகிறார். ஒருவேளை உணவுக்கே திண்டாடிய பெண் வறுமையை வென்று ஏராளமான சோதனைகளைக் கடந்து இன்று ஒரு சிறந்த பெண் தொழில்முனைவோராக திரைத்துறையில் காஸ்ட்யூம் டிசைனராக உருவாகி உள்ள சௌபர்ணிகாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் தைரியமான மனமும், சாதிக்கத் துடிக்கும் ஆற்றலும் மற்றும் தளராத தன்னம்பிக்கையும் தான். வாழ்க்கையில் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்த சௌபர்ணிகாவை இந்த சமூகம் ஏளனமாக பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மனஉறுதியைப் பெற்றதால் இன்று நவீன ஆடை வடிவமைப்பாளராக சிறந்த தொழில்முனைவோராக உயர்ந்து நிற்கிறார்.

‘‘என்னால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியும்… எல்லோரும் ஏதாவது ஒன்றில் தோற்றுக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், அதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதை என்னால் எப்போதும் ஏற்க இயலாது’’ என்கிறார் உலகின் மிகச்சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கேல் ஜார்டன். இவரைப்போலவே நீங்களும் ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் என் முயற்சிகளிலிருந்து ஒருபோதும் விலகி ஓடாமல் என்னால் முடியும், என்னால் முடியும் என்று திரும்பத் திரும்ப மனதில் பதியவையுங்கள். இப்போது மட்டுமல்ல, எப்போதும் நீங்கள்தான் ஜெயித்துக்கொண்டேயிருப்பீர்கள். (புதுவாழ்வு மலரும்)

- பேராசிரியர் முனைவர்,
அ முகமது அப்துல்காதர்

X