உண்மைத்தன்மைதான் உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும்!

8/29/2019 2:51:10 PM

உண்மைத்தன்மைதான் உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உடல் மொழி: 13

நடை மொழி:

Good clothes open all doors
- Thomas Fuller

உடல்மொழிபற்றிய செய்திகளும், அதன் தன்மைகளைப் பற்றிய விஷயங்களும் இலக்கணப்பூர்வமாக விரைவாக வந்து சேர்ந்தாலும், நம்மைவிட நமது  முன்னோர்களே அதற்கு அதிக முக்கியத்துவம் தந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இது கேட்க ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் அதுதான் நிஜம்.

உடல்மொழிபற்றிய எந்த ஒரு தன்மையும் அறிந்திடாத, ஏன் உடல்மொழிஎன்ற பெயரைக்கூட கேட்டறிந்திடாத நமது முன்னோர்கள், சக மனிதர்களுடன் பேசும்போதும், சூடாக விவாதிக்கும்போதும், ‘என்னைப் பார்த்து பேசு’, ‘ஆடிகிட்டே பேசாதே’, ‘வாயிலிருந்து கையை எடுத்துட்டு பேசு’ என்று  சொல்வதையும், எதிராளிகளுடன் பேசும்போது அவர்களின் சைகைகளை உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர்களாகவும்,  அடுத்தவர் பேசி முடித்தபின்  பேசுபவர்களாகவும் இருப்பதை அறிந்திருக்கலாம்.


அந்த நிதானமான கவனிப்பிற்கு அவர்களின் வயோதிகம் ஒரு காரணமாக இருக்கும் என்று எண்ண வைக்கும். ஆனால், அவர்கள் உடல்மொழிக்கு  முக்கியத்துவம் தந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதே நிஜம். உடல்மொழி ஒரு நாளும் பொய் சொல்வதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் சுயநலம் சார்ந்த பலன்களை அடைவதற்காக உடல் மொழியை சிலர் வேண்டுமென்றே பொய்யாக (வல்லுநர்களின் துணையோடு)  பிரயோகிக்க வைப்பார்கள்.

உதாரணமாக, உலக அழகிப்போட்டியையே எடுத்துக்கொள்ளலாம். அதில் பங்கேற்கும் அழகுப் பதுமைகள் ஒவ்வொருவரும் அழகாகத்  தோற்றமளிப்பதைத் தாண்டி, உண்மையானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பதைப் போலான பாவனைகளைச் செயற்கையாக வெளிப்படுத்த  பயிற்சி அளிக்கப்படும். எதற்கும் பொருந்தக்கூடிய சில ரெடிமேட் பதில்களையும், புன்னகைகளையும் வெளிக்காட்டக்கூடியவர்களாக மாற்றுவார்கள்.

அவர்களின் செயற்கையான  பிரதிபலிப்பு அவர்களுக்கு போட்டி நடுவர் களிடமிருந்து மதிப்பெண்களைப் பெற்றுத்தர உதவுகிறது. போட்டியில் வெற்றி பெறுவதற்கு உத்தேசித்து  அவர்கள் தங்கள் உடல் மொழியை, நிஜமான உணர்ச்சி பாவனைகளை (கோபத்தை அடக்குதல்) மறைத்து வெளிப்படுத்தவைப்பார்கள்.

எத்தனை நிபுணத்துவத்தை ஏற்படுத்தித் தந்தாலும், தொடர்ந்து உடல்மொழியை யாராலும் பொய்யாகப் பிரதிபலித்துக்கொண்டே இருந்துவிட முடியாது.  ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், உடல்மொழியை பொய்யாகக் காட்ட வேண்டும் என்ற உணர்வு ரீதியான கட்டுப்பாடு விலகியதும்  உடல்மொழி தனது  நிஜமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியே தீரும்.

உடல்மொழியைப் பொய்யான முறை யில் வெளிப்படுத்தி மற்றவர்களை நம்ப வைக்க நினைப்பவர்களின் சைகைகள் சில நிமிடங்கள் வரை  வெற்றிகரமானதாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும் என்கிறார்கள் உடல்மொழி வல்லுநர்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஜெர்மனியின்  சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரைக் குறிப்பிடுகிறார்கள்.

அடால்ஃப் ஹிட்லரின் பேச்சுக்களில் எப்போதும் ஒரு கவர்ச்சி இருந்துகொண்டே யிருந்தது. ஹிட்லர் தனது உடைக்கும், உடல்மொழிக்கும் எப்போதும்  மிகுந்த முக்கியத்துவம் தருபவராகவே இருந்திருக்கிறார். அது தனக்கு ஒரு இமேஜையும் வசீகரமான ஆளுமைத்தன்மையையும் மக்களிடம் கொண்டு  செல்ல உதவியாக இருக்கும் என்று முழுமையாக நம்பினார்.

கொடுங்கோலன் என்ற நிஜமுகத்தை அவரது செயல்கள் காட்டிக் கொடுத்தபோதும், மேடைப் பேச்சுகளில் மக்களிடம் தன்னை ‘ரொம்ப நல்லவராகவே’  காட்டிக் கொண்டிருந்தார். அதற்கு உடல் மொழியை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தினார். நம்ம ஊரிலும், தேர்தல் நேரங்களில் சில அரசியல்வாதிகள்  கட்டுப்படுத்திக் கொண்ட உடல் மொழியோடு நடமாடுவார்கள், மேடையில் அலங்கார வார்த்தைகளில் பேசுவார்கள்.

எத்தனை முயன்றாலும், தன்னிலை மறந்த தருணங்களில் வெடித்தபடி ‘உண்மையான’ உணர்ச்சி பாவனைகளைக் கொட்டிவிடுவார்கள். (உணர்ச்சி  சார்ந்த அந்த நிஜ பிரதிபலிப்புகளை சிலர் வீடியோவாகப் பதிவிடுவார்கள்). அதனால்தான் உடல்மொழியை நீண்டநேரம் பொய்யாக வெளிப்படுத்த  முடியாது என்கிறார்கள்.

பாதிப்புகளை ஏற்படுத்தும் சைகைகளை விலக்குவதுபோல், உடல்மொழியைத் தவறான வெளிப்பாட்டிற்கு ஒரு நாளும் பயன்படுத்தக்கூடாது. எப்போதும்  நிஜமான சைகைகளை வெளிப்படுத்தினால் மற்றவர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றுத் தருவதோடு ஆளுமையை உயர்வானதாகவும் ஏற்படுத்தித் தரும்.

உடல்மொழியையும், உணர்ச்சிகளையும் எப்போதும் நிஜமானதாக வைத்திருந்தால் அது மற்றவர்களுடன் இயல்பாகவும், உண்மையாகவும்,  சௌகர்யமாகவும் பழக வழி வகுக்கும். பிரதிபலிப்பில் இருக்கும் அந்த உண்மைத்தன்மைதான் மற்றவர்களிடம் நம்மைப்பற்றிய உயர்ந்த எண்ணத்தை  உருவாக்க உண்மையான வழி.

பேச்சுமொழியில் வல்லுநராக நிறைய படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல், உடல் மொழியில் வல்லுநராக நிறைய (நபர்களை) பார்க்க  வேண்டும். அதற்கு உணர்வுகளின் வெளிப்பாடான உடல்மொழியின் பிரதிபலிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். மற்றவர்களின் உடல்மொழி  வெளிப்பாட்டைப் பார்க்க வேண்டும்.

பார்க்கப் பார்க்கத்தான் பல விஷயங்கள் புரியவரும். தெரிந்தவர்களையும், அறிந்தவர்களையும்தான் கவனிக்க வேண்டும் என்பதில்லை, பொது இடத்தில்,  பலபேர் கூடுமிடத்தில் என்று எங்கிருந்தும் கவனிக்கலாம். வெளியில் போக முடியாதவர்கள் வீட்டில் தொலைக்காட்சியின் சத்தத்தை (வால்யூம்)  நிறுத்தி ஊமைப் படம் பார்ப்பது போல் கதாபாத்திரங்கள் நடமாடுவதை கவனிக்கலாம்.

காட்சிகளில் மனிதர்கள் வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பு, கோபம், கவலை, சிரிப்பு, சாந்தம், பொறுமையின்மை, ஆத்திரம், பயம் என்று பலவிதமான  உணர்ச்சி சார்ந்த வெளிப்பாடுகளை மனித உடல் எப்படி வெளிக்காட்டுகிறது என கவனிக்கலாம். உணர்ச்சி சார்ந்த உடல்மொழியின் வெளிப்பாட்டிற்கு  மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.

உடல்மொழியைக் கவனிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கான விஷயமல்ல, அது பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும், ஒரு புரிதலை ஏற்படுத்தித்  தரும். உடல்மொழி அசைவுகளைப் பார்ப்பதால், புரிந்துகொள்வதால் மற்றவர் நம்மை எப்படி அதிகாரம் செலுத்தி தங்கள் தேவைக்காகப்  பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற புரிதல் கிடைக்கும்.

அந்தப் புரிதல் நமது ஆளுமையை அழகாகக் கட்டமைக்க உதவிசெய்யும். உடல்மொழியைக் கவனித்து புரிந்துகொள்வதால் நாம் நமது  உணர்ச்சிகளுக்கும், அடுத்தவரது உணர்ச்சிகளுக்கும் சரியான முக்கியத்துவத்தை தருபவர்களாக மாறிப்போவோம். சக மனிதர்களின் உணர்ச்சிகளை  மதிப்பது என்பது அந்த மனிதரை மதிப்பது போலத்தான். மனிதர்களை மதிக்கப் பழகுவோம்.

-  தொடரும்

உடைவழி - T- ஷர்ட் (T-Shirt)

இளைஞர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத உடை என்றால் அது T- ஷர்ட்தான். ஆண்/பெண் இருபாலரும் அணியும் உடையாகவும் T- ஷர்ட்  உள்ளது. இதை உயர்த்திப் பிடித்தால், பார்க்க ஆங்கில எழுத்து T போலவே இருப்பதால், T- ஷர்ட் என்ற பெயர்வந்தது. 19ம் நூற்றாண்டுகளில்  அமெரிக்க கப்பல் படையினர். கழுத்து முதல் கால்வரை இணைந்த ஒரே ஆடையை அணிந்தார்கள். அதற்கு ‘ஒன் பீஸ் Union Suit’ என்று  பெயர்.


அது காலர் இல்லாமல், V வடிவில் இருக்கும். அதற்கு கீழ் வேறு உள்ளாடை இல்லாததால், அது உள்ளாடை வகையாகவே பாவிக்கப்பட்டது. ஸ்பானிஷ்-அமெரிக்க யுத்தத்தின்போது (1898-1913), அமெரிக்க நேவி இந்த உள்ளாடையை இரண்டு பகுதிகளாக பிரித்துத் தந்தது. முழுக்க Cotton  துணியாலான இதனை நிட்டிங் முறையில் தயாரித்ததால், விலா பகுதியில் இந்த உடையில் தையல் வரவில்லை.

T- ஷர்ட் என்ற பெயரைப்பெற்ற இந்த உடை சட்டைக்கு மாற்றாகத், தலைவழியே அணிய சௌகர்யமானதாக இருக்க பிடித்துப்போனது. மேலும்  மடிக்க, துவைக்க சுலபமானதாக இருக்க இளைஞர்களிடம் Casual வகை உடையாக மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

1950-களில் ஹாலிவுட் நடிகர்களான Marlon Brando/James Dean, T- ஷர்ட் அணிந்து திரையில் மிளிர, அது சமுதாயத்தில்  ஃபேஷனாகிப்போனது. அதுவரை உள்ளாடை வகை உடையாக இருந்துவந்தது, அதன்பின் தனித்துவமான மேலாடையாக மாறிப்போனது. அந்த  வகையில் T- ஷர்ட் ஒரு பரிணாம வளர்ச்சி அடைந்த உடை என்றும் சொல்லலாம்.

1940-களில், T- ஷர்ட்களில் ஸ்கீரின் பிரின்டிங் முறையில் வாசகம்/படம் பொறிக்கும் வழக்கம் தொடங்கியது. அன்று முதல் T- ஷர்ட் பல  நிறுவனங்களுக்கு பிராண்ட் அமைப்பாக இருக்கிறது. Coco Cola - Micky Mouse போன்ற பிராண்டுகள் உலகம் முழுக்க பிரபலமாவதற்கு T-  ஷர்ட்டும் முக்கியக் காரணம்.

அமெரிக்க T- ஷர்ட் வணிகர்கள் மத்தியில் ஒரு விசித்திரமான பழக்கமுண்டு. அவர்களுக்குள் பேரம் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அதைக்  குறிக்கும் விதமாக, தாங்கள் அணிந்திருக்கும் T-ஷர்ட்டை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்வார்களாம். இன்று உலகம் முழுக்க பிரசித்திபெற்ற T-  ஷர்ட்டை கண்டுபிடித்தது யார் என்ற விவரம் மாத்திரம் இன்றுவரை உலகத்திற்குத் தெரியவே தெரியாது.

X