வலிகளைக் கடந்துதான் வெற்றிகளை அடையமுடியும்!

9/9/2019 3:20:33 PM

வலிகளைக் கடந்துதான் வெற்றிகளை அடையமுடியும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

*இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை தொடர்

நாம் எதைக் குறித்து அடிக்கடி நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும். அதைத்தான் எண்ணம் போல் செயல் என்பார்கள். இது உண்மையா? என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இது உண்மைதான்!

ஒருமுறை சாக்ரடீஸிடம் வந்த ஒருவன், ‘‘ஐயா! எனக்கு அறிவு வேண்டும்’’ என்றான். ‘‘சரி, என்னுடன் வா’’ என்று அவனை அழைத்துக்கொண்டு ஒரு குளத்திற்குச் சென்றார். பிறகு அவன் தலையைப் பிடித்து குளத்திற்குள் மூழ்கடித்தார். சில நிமிடங்கள் கழித்து தன் பிடியை விடவே குளத்திற்குள் மூழ்கியிருந்தவன் எழுந்தான். ‘‘ நான் உன் தலையைக் குளத்திற்குள் மூழ்கடித்ததும் என்ன நினைத்தாய்?’’ என்று சாக்ரடீஸ் கேட்டதும், “காற்று காற்று”என்றான். ‘‘வேறு எதைப்பற்றியாவது நினைத்தாயா?’’ என்றதற்கு, ‘‘இல்லை காற்று மட்டுமே தேவை என நினைத்தேன்’’ என்றான்.

‘‘பார்த்தாயா! நீ காற்று… காற்று… என்று நினைத்தவுடனேயே உனக்கு காற்று கிடைத்துவிட்டது. இதைப்போலவே உனக்கு எது வேண்டும் என்றாலும் அதைப் பற்றியே நம்பிக்கையுடன் நினை... உடனே கிடைத்துவிடும்’’ என்றார் சாக்ரடீஸ். கேள்வி கேட்டவனும் நம்பிக்கையோடு அறிவைப் பெறப் புறப்பட்டான். நாமும் இந்த மனிதனைப் போல தேவையான எதையும் இந்த உலகத்தில் பெற முடியும். நம்பிக்கையுடன் கற்பனை செய்யப் பழகிக்கொண்டால் அது ஆழ்மனதில் பதிந்து நாம் விரும்பியதை அடைய வழிகாட்டிவிடும். நமது இலக்கை நோக்கி நாம் கடந்து போகும் பாதை பூக்களாலும் பஞ்சு மெத்தைகளாலும் இருக்கவேண்டும் என எண்ணாதீர்கள்.

இலக்கை நோக்கிச் செல்லும்போது கஷ்டங்களும், வலிகளும், தோல்விகளும் அந்தப் பாதையை கடினமாக்கும். அந்தப் பாதையில் செல்லும்போது நம் பாதங்களுக்கு வலிமை கிட்டும். பாதங்கள் வலிமை பெற்றால் தான் பரந்துவிரிந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமாவோம். அத்தகைய இலக்கை நோக்கிய பயணமே, நம்மை உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்லும். அப்படி இலக்கை நோக்கிய பயணத்தில் கடினமான பாதையைக் கடந்து உறுதியான வெற்றியைப் பெற்றவர்தான் ஸ்வப்னா. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ரிக்‌ஷா ஓட்டும் ஏழைத் தொழிலாளியின் மகளாகப் பிறந்தவர்தான் ஸ்வப்னா.

ஸ்வப்னாவின் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தந்தைக்கு பக்கவாதம். மருத்துவமனையில் நீண்டகாலம் சிகிச்சையில் இருந்தார். ஸ்வப்னாவின் தாயாருக்கு டீ எஸ்டேட் ஒன்றில் தேயிலை பறிக்கும் வேலை. இதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ஸ்வப்னாவின் தாயாருக்கு காலில் ஆறு விரல்கள். ஆறு விரல்கள் கொண்ட தாய்க்கு பிறந்ததாலோ என்னவோ ஸ்வப்னாவுக்கு இரு கால்களிலும் ஆறு விரல்கள். காலிலோ அல்லது கையிலோ ஆறு விரல்கள் இருந்தால் கிராமத்தில் அதிர்ஷ்டசாலி என்பார்கள். கிராம மக்கள் பார்வையில் ஸ்வப்னா லக்கி கேர்ள். இளம் வயதிலிருந்தே ஸ்வப்னாவிற்கு படிப்பைவிட விளையாட்டில் ஆர்வம் மிகுதியாக இருந்தது.

உள்ளூரில் நடைபெற்ற அத்தனை போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இருந்தபோதும் தடகள விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை நிகழ்த்த வேண்டும். அதன் மூலம் தனது குடும்பத்தின் வறுமையைத் துரத்த வேண்டும் என்ற இலக்கைத் தீர்மானித்தார். ஆனால், ஸ்வப்னாவிற்கு காலில் உள்ள ஆறு விரல்கள் தாங்க முடியாத வலியைத்தான் தந்துகொண்டிருந்தன. காலில் ஆறு விரல்கள் என்பதால் எந்தக் காலணியும் அவருக்கு பொருந்தாது. ஒரு விளையாட்டு வீரருக்குக் காலணி மிகவும் முக்கியமானது. அப்படியிருக்கையில் காலில் ஆறு விரல்கள் இருப்பதால் தன் அனைத்து விரல்களையும் சேர்த்து பேன்டேஜ் கட்டி ஒட்டிய பிறகே ஸ்வப்னாவால் காலணி அணிய முடியும்.

இதனால் ஓடும்போதும் சரி, தாண்டும்போதும் சரி அவருக்கு கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். இருந்தபோதும் குடும்பத்தின் வறுமையின் வலியை விட இந்த வலி ஸ்வப்னாவிற்கு பெரிதாகத் தெரியவில்லை. எத்தனையோ காலணிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று கூட ஏழை ஸ்வப்னாவுக்கு பிரத்தியேக காலணி தயாரித்து வழங்க முன் வரவில்லை. இந்த நிலையில்தான் ஸ்வப்னா ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். இதற்காக கடுமையான பயிற்சியை வலியுடன் எடுத்துக்கொண்டார். ஒருமுறை ஸ்வப்னாவுக்கு முதுகில் அடிபட்டது. தண்டுவடத்தில் ஒரு டிஸ்க் நகர்ந்துவிட்டது. இதனால் கடும் முதுகுவலி ஏற்பட்டது.

முதுகுவலிக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டே பயிற்சியிலும் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தடகளத்திலிருந்து ஒதுங்கி விடலாம் என்கிற எண்ணம் கூட அவருக்குத் தோன்றியது. இருந்தபோதும் தடகள போட்டியில் சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதனை புரிந்தால் தான் குடும்பத்தின் வறுமையை போக்க முடியும் என்ற நம்பிக்கையில் வலியுடன் கூடிய பயிற்சியைத் தொடர்ந்தார். ஸ்வப்னாவின் நிலையை அறிந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நிதியுதவி செய்தார். திறமைமிகுந்த வீராங்கனை என்பதை அறிந்த இன்னும் சிலரும் உதவிபுரிந்தனர். இதைக் கொண்டு முதுகுவலிக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்தார்.

மருத்துவரோ முதுகுவலி தீர அறுவைசிகிச்சை தான் ஒரே வழி என்று சொல்லிவிட்டார். அறுவைசிகிச்சை செய்தால் ஆசியப் போட்டிக்காக மேற்கொள்ளும் பயிற்சி பாதிக்கும் என்பதால் ஸ்வப்னா அதைத் தள்ளி வைத்துவிட்டார். எனினும் மருத்துவர் கொடுத்த சில அறிவுரைகள் ஸ்வப்னாவுக்குப் பயனுள்ளதாக இருந்தன. இந்த நிலையில் போட்டி தொடங்கிய சில தினங்களில் திடீரென்று ஏற்பட்ட பல்வலி ஸ்வப்னாவை அவதிக்குள்ளாக்கியது. ஏற்கனவே முதுகுவலி, வலது மூட்டுவலி, கால் விரல்களில் வலி என வலியால் அவதிப்படாத நாளே இல்லை. இத்துடன் பல்வலியும் சேர்ந்துகொண்டது. விதிமுறைகள் காரணமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்க வேண்டியதாகிவிடும். இதனால் வலி நிவாரண மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் பல்வலியைக் குறைக்க கன்னத்தில் பிளாஸ்டர் ஒட்டிக்கொண்டே போட்டியில் கலந்துகொண்டார். ஸ்வப்னாவின் மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது ‘தயவு செய்து வலியை மறந்துவிட்டு போட்டியில் மட்டும் கவனம் செலுத்து’ என்று. ஜகார்த்தா ஹெப்டத்லான் என்னும் தடகள போட்டியில் ஸ்வப்னாவுக்கு பலம் பொருந்திய சீன வீராங்கனை வாங்ஜிங்லிங் கடும் போட்டியாக இருந்தார். ஆனால், போராட்டமே வாழ்க்கையாகிப் போன ஸ்வப்னாவின் போராட்டத்திற்கு முன் வாங்ஜிங்லிங்கின் முயற்சி தோற்றுப்போனது.

ஸ்வப்னா 6026 புள்ளிகள் எடுத்து தங்கம் வெல்ல, வாங்ஜிங்லிங் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டியதாகி விட்டது. தங்கம் வென்ற ஸ்வப்னா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். ‘வாழ்க்கை முழுவதுமே வலியை மட்டுமே அனுபவித்து வந்துள்ளேன். வலியை மறந்தேன், தங்கம் வென்றேன்’ என்று பெருமையுடன் கூறினார். வறுமை மற்றும் உடல் வலிகளைத் தாண்டி சாதித்த ஸ்வப்னாவுக்கு கிடைத்த பரிசுதான் ஆசியத் தங்கம். ஆசிய போட்டிகளில் ஹெப்டத்லானில் இதற்கு முன் எந்த இந்தியர்களும் தங்கம் வென்றதில்லை என்ற நிலையைத் தகர்த்து சாதனைபுரிந்துள்ளார்.

குடிசையில் பிறந்த தங்கத்தாரகை. ஹெப்டத்லான் என்பது 100, 200, 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட 7 விளையாட்டுகள் அடங்கிய கடினமான பிரிவு. இத்தகைய கடினமான போட்டியில் பல்வேறு உடல் உபாதைகளைத் தாண்டி இத்தகைய வரலாற்றுச் சாதனையை எட்டியிருக்கிறார் ஸ்வப்னா. இதைப் பாராட்டும் விதமாக விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதை இந்த ஆண்டு ஸ்வப்னாவிற்கு வழங்குவதாக சமீபத்தில் இந்திய அரசு அறிவித்துள்ளது. வறுமையில் பிறந்து வலிகளுடன் வாழ்ந்து கடும் அவஸ்த்தை மற்றும் வேதனைகளைக் கடந்து தன்னுடைய இலக்கில் உறுதியான வெற்றி பெற்றவர் தான் ஸ்வப்னா. வலிகளைக் கடந்துதான் வெற்றிக்கான வழியை அடைய முடியும்.

அந்த வெற்றியும் மனஉறுதி உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதே ஸ்வப்னாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடமாகும். ஒவ்வொரு மனிதருமே வெற்றிக்காக போராடுவது உலகில் தன்னை அடையாளப்படுத்துவதற்காகத்தானே! அதனால் அதற்கான வெற்றி சிறப்பானதாக இருக்கட்டும். அதுவும் வாகைசூடும் வெற்றியாக இருக்கட்டும். இதனைக் கருத்தில் கொண்டு முயற்சி செய்யுங்கள், முயற்சிகளில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு விலகி ஓடிவிடாதீர்கள், தொடர்ந்து மனஉறுதியுடன் முயற்சி செய்யுங்கள். தோற்றுவிடமாட்டேன் என்ற நம்பிக்கையை ஆழ்மனதில் பதியச் செய்யுங்கள். அப்போதுதான் உங்களையும் இந்த உலகம் ஒருநாள் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கும்.

X